0

சோழப்புறா – க. பொற்புறா

க. பொற்புறா

மெல்லிய பனிக்காற்றுச் சில்லென வீசிய அதிகாலைப்பொழுது வெகு தூரத்தில் காட்டுப் பாதையில் புரவி ஒன்று மிக மிக மெதுவாக அசைந்தாடி வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு பெய்தப் பெருமழையில் காட்டுமரங்கள் நன்கு குளித்துப் பரிதியை எதிர்பார்த்து ஈரக்காற்றில் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தன.

புரவியில் அமர்ந்திருந்த நடுத்தர வயதினனுக்கு வலிமையான தேகம் போர்வீரனுக்கு உடைய அனைத்துத் தகுதியும் அவனுக்கு இருந்தது ஆனால் அவன் மிக மிகச் சாமானியர்களின் ஆடையை அணிந்திருந்தது பெரும் வியப்பாக இருந்தது. புரவியின் பக்கவாட்டில் திறம்பட வேல் ஒன்று கட்டிவைக்கப்பட்டிருந்தது.

காட்டுப்பாதையை ஒட்டிச்  சிந்து நதியில் இருந்து பிரிந்து ஓடியச்  சிறு ஓடையின் கரையில் சில முனிவர்கள் தியானம் செய்து கொண்டிருந்தனர். புரவி மேல் களைப்பாய்த் தெரிந்த அந்த நடுத்தர வயதினன் ஓடையின் அருகில் இருந்த மரத்தில் புரவியைக் கட்டினான், ஓடையின் அருகில் சென்று தன் ஆடைகளை அவிழ்த்து ஓரமாக வைத்துவிட்டுச் சிறிது சிறிதுதாக ஓடை நீரில் மறைந்தான்.

“ஐயா முனிவரே! வெகு தூரத்தில் இருந்து வருகிறேன், காலைப்  பசியாற்றவேண்டும் உங்களிடம் ஏதேனும் உணவு இருக்கிறது” மிகவும் அடக்கத்துடன் மிகவும் நிதானமாகக் கேட்டான் நடுத்தர வயதினன்.

“குழந்தாய்! சற்றுப்  பொறு” என்ற முனிவர் தனதருகில் இருந்த ஒரு துணிப்பையைத் துழாவி இரு கதலிகளை (வாழைப்பழம்) அவனிடம் கொடுத்தார்.

மிகவும் பயபக்தியோடு அதை வாங்கியவன் அவர் அருகிலேய அமர்ந்து அமிர்தத்தைக் குடிப்பது போல் ரசித்து ருசித்து உண்டான், நீண்டத்  தூரப் பயணத்தால் களைத்துப் போயிருந்தவனுக்கு இளங்காலைப் பொழுதின் குளியலும் கதலியின் ருசியும் புத்துணர்ச்சியைக் கூட்டியது. முனிவருக்கு நன்றி சொல்லி அவரிடம் ஆசிப்  பெற்றுத்  தன் புரவியில் அமர்ந்துப்  பிரயாணத்தைத் தொடர்ந்தான்.

அரண்மனை வாயில் பரபரப்பாய் இருந்தது மந்திரிசபைக் கூட்டம் இன்று கூடவிருக்கிறது, அரசாங்கத்தின் உயர்பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் வேகவேகமாய் அரண்மனைக்குள் சென்று கொண்டிருந்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவை கூடுவதால், கோட்டைக் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தனர் கோட்டைக் காவலர்கள். நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெரும் திரளான வணிகர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், போர்வீரர்கள் எனத் தலைநகரை நிரப்பிக் கொண்டிருந்தனர் கோட்டைகாவலர்களின் நிலைத்  தான் பெரும் பாடாக இருந்தது.

தீடீர் என ராசபேரிகைகள் ஒலிக்க ஆரம்பித்தன, கோட்டை வாயிலில் காவல் அதிகரிக்கப்பட்டது, மக்களை இரு புறங்களிலும் ஒதுக்கி நடுவில் வழிச்  சமைக்கப்பட்டது. சாலையோரம் ஒதுங்கிய மக்கள் யார் வருகிறார் என்று எட்டி எட்டிப்  பார்த்தனர். படோபடமாக யாரும் வருவது போல் தெரியவில்லை, வெகு தூரத்தில் யாரோ வருவதற்கு இப்பொழுதே ஏன் நம்மைக் கோட்டைக் காவலர்கள் ஒதுக்கினார் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, வேகவேகமாய் ஒரு புரவிக்  கோட்டைக்குள் புகுந்தது.

தொடரும்…

தமிழன் சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!