Site icon தமிழன் சங்கர்

சானகிக் குரலா ,சிறீநிதி வீணையா, ஒரு கிளி உருகுது!

இணையத்தில் எப்போதும் போல் உலாத்திக் கொண்டிருந்தேன், அரசியல் அனர்த்தங்கள், மனிதாபிமானமில்லாத மனிதர்களைப் பார்த்து வெறுத்துப் போய்ப் பிரபாகரன் சேரவஞ்சி முகநூலின் சில கவிதை வரிகளுக்கு விளக்கம் தேடிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்டது தான் என் மனதை மயக்கிய இந்த மெல்லிய தருணம், நான் எப்போதும் தருணங்களுக்கு மயங்குபவன், அறுசுவை உணவிற்குச் சுவையும், நறுமணம் இருப்பது போல் நான் கடந்து வந்த தருணங்களுக்கும் சில சுவைகளும், நறுமணங்களும் இருக்கின்றன. நான் மகிழ்ந்தத் தருணங்களை என் நினைவு நரம்புகளில் அது சுடச் சுடப் பதிவு செய்திருக்கிறது.

ஆத்திரேலியா நாட்டின் முன் பனிக்காலத்தில் மிக ரம்மியமான இளங்குளிர் காலையில், இரு மருங்கும் பச்சைப் பசேல் என ஒழுங்கு செய்யப்பட்ட நடைபாதையில் என் காது துவாரங்களில் உன்னிக்கிருட்டிணன் தேன் குரலில் ஒலித்த “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” பாடல் அவ்வப்போது என் நிகழ்காலத் தருணங்களில் வந்து வந்து படிந்து கொள்ளும்.அது போல் ஒரு தருணத்தைத் தான் நான் இப்பொழுது பதிவு செய்கிறேன். என் வாழ்க்கைப் பக்கங்களில் தமிழும், இசையும் கலந்தத் தருணம். ஒரு கிளி உருகுதுப் பாடலைக் கவிதையாகப் படித்தாலே அதன் சாரம் மனதை உருக்கும், இசைஞானியின் இசைக்கலப்பில் அதில் இனம்புரியாத ஓர் உணர்வு இழையோடும், சானகியின் குரலில் இருக்கும் கொஞ்சல் உடலைச் சிலிர்க்க வைக்கும். இனியென்ன தாமதம்… இந்தத் தருணம் எனது தருணம்…

YouTube Poster

இன்று நான் செய்தது இரண்டு விடயம், ஒன்று மீண்டும் வலையொலியில் சென்று சானகி அவர்களின் குரலில் வந்த “ஒரு கிளி உருகுது” பாடலை இடம், பொருள்,ஏவல் மறந்து ரசித்தது, சிறீநிதியின் வீணை இசை வடிவில் அதே பாடலில் என் இனிய தருணங்களை முக்கி எடுத்து.

இசைஞானி,சானகி,சிறீநிதி, என் தமிழ், வீணாய்ப் போன என் தருணங்களை இவர்களைக் கொண்டு நிரப்பிக் கொண்டே இருப்பேன்… இந்தத் தருணம் எனது தருணம்…

Exit mobile version