Site icon தமிழன் சங்கர்

நீங்கள் சொல்வது தான் சரியா, வேடிக்கையாக இல்லை!

இன்று படித்த ஒரு செய்தி ஒரு புதிய பரிமாணத்தை என் சிந்தனை போக்கில் விதைத்திருக்கிறது, விவாதத்தில் நாம் வைக்கும் கருத்துக்களையும் அதன் எதிர் கருத்துக்களையும் மனிதர்கள் எப்படி அணுகுகிறார்கள். ஒரு கருத்தை எப்படி யார் யார் எந்த அளவுகளில் புரிந்துக் கொள்கிறார்கள் என்கின்ற அடிப்படையில் தான் தனிமனிதனின் போராட்டம் ஆரம்பிக்கிறது.

// கார்ல்மார்க்ஸ், லெனின், மாவோ வைத்த சோசலிச சிந்தனைகளைப் பெரும் அறிவுப்புரட்சி என்று நம்பி வாதங்களை வைக்காதீர்கள். முதலாளித்துவ, கார்ப்பரேட் நிறுவனங்கள்மூலம் கொள்ளை அடித்துப் பெரும் பணக்காரர் ஆனவர்களைச் சாதனையாளர்களாகக் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.

நிக்கலாஸ் டெஸ்லா என்ற விஞ்ஞானி தன் பங்கீடுகளை விஞ்ஞான ஆய்வுக்கென்று விட்டுக்கொடுத்திராவிட்டால், உலகில் மிகப் பெரும் பணக்காரர் அவராகத்தான் இருந்திருப்பார். நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கண்டுபிடித்ததே அவர்தான். //

மேலே குறிப்பிட்டுள்ள இந்த வாக்கியங்களைத் திரும்பத் திரும்பப் படியுங்கள் அதுவும் கொரோனா என்று உலகமே செயற்கையாய் அதன் இயக்கத்தைச் சில மாதங்கள் நிறுத்திய தருணத்தில், இதில் பல அர்த்தங்கள் புதைந்து உள்ளன. நான் நினைக்கிறேன் உலகத் தத்துவங்கள் எல்லாம் ஏதோ ஓர் அடிப்படையில் தொடங்கி அதனதன் பரிணாம வளர்ச்சியில் அடிப்படையில் இருந்து விலகி முற்று முழுதாகப் பல மைல்கள் கடந்து சென்றுவிட்டன.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எனக்குத் தான் எல்லாம் தெரியும், அதிகாரம் என்னிடம் இருப்பதால் நான் செய்வது தான் சரி என்கின்ற மனித நாகரீகத்தின் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது.

எல்லாத் தத்துவங்களிலும் தோற்றப்பிழைகள் இருக்கின்றன, அவரவருக்குப் பிடித்தது, எல்லாம் அவரவருக்கு மட்டுமே, அறிவுப் படிக்கட்டுகளில் படிநிலையில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது மட்டும் தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

நான் இருக்கும் அறிவுப்படிக்கட்டில் இருந்து எனக்குத் தோன்றுவது இது தான், கீழே உள்ள இந்தப் பதிவு என்ன காரணத்திற்காக எழுதப்பட்டதோ என்கின்ற கேள்வி, பல சூட்சுமங்களோடு எழுத்தப்பட்டதோ என்கின்ற ஐயம் என்று பல அறிவுச்சோதனைகள் நடத்தப்பட்டது கடைசியில் அதில் அன்னப்பறவையைப் போல் எனக்குத் தேவைப்பட்டதை மட்டும் பிரித்து எடுக்க முடிந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தைக் கருத்துரையாகப் பதிவிடுங்கள்.


இனி நான் படித்த பதிவை பார்ப்போம்…

என்னை உயிரோடு எரிக்க விரும்புகிறீர்கள்.
அமேரிக்காவிலிருந்து மருத்துவ விஞ்ஞானி அணு

ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் நம்புகின்ற நம்பிக்கைகள் மட்டுமே உண்மை என்ற நம்பிக்கை இருக்கிறது. அதைத்தான் இந்த குழுவில் வைக்கப்படும் வாதங்களை படிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனைகளையும் சொல்கிறீர்கள். அதை வரவேற்கிறேன்.

ஆனால் அதை ஒரு வாதமாக தொடர்வதை நான் வரவேற்கவில்லை.

பலகோடி மனிதரில் பூமி உருண்டை, தன்னைத் தானே சுற்றுகிறது என்று கண்டுபிடித்து பல ஆய்வுகளைச் செய்து, கணக்குகளால் உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள் கோப்பர்நிகஸ், புருனோ, கலிலியோ, மட்டும்தாம்.

புருனோவுடன் வாதிட்டது பலகோடி மனிதர்கள். பலகோடிமனிதரின் நம்பிக்கை பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்பதே.

இந்த எடுத்துக்காட்டை பல முறை சொல்லி இருக்கிறேன். மனிதரின் தவறான நம்பிக்களை எளிதாக புரியவைக்க இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இல்லை.

புருனோவுக்கு முன் பல லட்சம் அல்லது கோடி ஆண்டுகள் மனித இனம் வாழ்ந்திருந்தது. அந்த பல லட்சம்/ கோடி ஆண்டுகளில் வாழ்ந்திருந்த பல லட்சம்/கோடி மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத உண்மையை, அவர்களின் தவறான நம்பிக்கைகளை தகர்த்தெறிந்தார் புருனோ தனது 40 வயதுக்குள்ளேயே. அவரின் கண்டுபிப்பு முற்றிலும் புதிதல்ல. கிமு 300களில் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாக்கஸ் (அரிஸ்டாட்டில் அல்ல) அதஏ கருத்தை முன்மொழிந்திருந்தார். ஆனால் வர் பெரும் ஆய்வுகளைச் செய்து கணக்குகளை போட்டு உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்ற நம்பிக்கைகளே.

அவற்றை முற்றிலும் தகர்த்தது கோப்பர்நிகஸ், புருனோ, கலிலியோ வின் ஆராய்ச்சி முடிவுகளே. இன்றும் கோப்பர்நிகஸ், புருனோ, கலிலியோ பற்றி தெரியாதவர்கள், பள்ளியில் கோப்பர்நிகஸ், புருனோ, கலிலியோ ஆகியோரின் முடிவுகளான சூரியக்குடும்பத்தில் ஒரு சிறிய கிரகமே பூமி என்கிற உண்மையை படிக்காதவர்கள், கண்முன் தெரியும் தட்டையான பூமி, சுற்றிவரும் சூரியன் இவற்றைத் தான் நம்புவார்கள்.

வாட்ஸ்அப் குழுக்களில் வலம்வரும் பலரும் பள்ளியோடு படிப்பை முடித்திருப்பீர்கள். அல்லது மதத் தத்துவங்கள், வணிகம், வங்கி, பொருளாதாரம், வரலாறு, கம்பூனிச சிந்தனைகள், பொறியியல், கணிதம், அறிவியல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, அல்லோபதி என்று எதையாவது படித்து இருப்பீர்கள்.

படித்துவிட்டால் அறிவாளி என்று நம்புவது கண்ணால் பூமியையும் சூரியனையும் பார்த்ததற்குச் சமம் என்பதை மனிதரில் பெரும்பாலோர் புரிந்துகொள்வதே இல்லை.

  1. கண் முதல் 5 புலன்களால் அறியப்படுவது அறிதல்.
  2. அறிதலுக்குப்பின் புரிதல்.
  3. அந்த புரிதலில் எழும் வினாக்கள். அவற்றை செய்முரை ஆய்வுகளால் சரிபார்ப்பது அடுத்த நிலை.
  4. இந்த புதிய புரிதல், அனுபவங்களைக்கொண்டு பல புதியன் கண்டுபிடித்தல்.

இதில் 4 வது நிலையில் இருக்கும் என்னை முதல், நிலையில் இருக்கும் பலரும் வாதத்துக்கு இழுக்கிறார்கள். பயிருக்கு உயிர்கொடுக்க, நீரிறைக்க செல்லும் விவசாயியை, மாட்டுவாலின் மயிர் எண்ணிச்சொல்ல வம்புக்கு இழுக்கிறார்கள்.

தேவையா இது?

மதம் பற்றிய படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர் புருனோ. பைபிள் பற்றி மட்டுமல்ல பிற மதங்களைப்பற்றியும் மிக ஆழமாக அறிந்தவர். அவர்தான் மத நம்பிக்கைகளை மீறி, கோப்பர்நிகஸ் சொல்லியவற்றை புரிந்து, பல கணக்குகளைப்போட்டு ஆய்வு செய்க்கிறார்.

புருனோவுக்கு என்ன பிரச்சினை? அவர் மதப் போதனைகளை நம்பிக்கொண்டு இருந்திருக்கவேண்டியதுதானே? புருனோ அவருக்கு பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை, பிஹெச்.டி பட்டம் வரை சொல்லப்பட்ட அனைத்தையும் மீறி அவற்றை தன்மூளையில் கேள்விக்குறி ஆக்குகிறார். அதனால் அவர் தனது பிஎச்.டி பட்டம் ஒன்றுக்கும் உதவாத படிப்பு என்று என்னைப்போலவே முடிவுக்கு வருகிறார்.

WFO.TamilScientists என்கிற, நான் தொடங்கிய குழுவில் சிலர் தாங்களும் பிஹெச்டி பட்டம்பெற்றவர்களே என்று எழுதி இருந்தார்கள். இன்று இந்தியாவில் பிஹெச்டி பட்டம் எத்தனை ரூபாய்க்கு கிடைக்கிறது என்று பிஹெச்டி பட்டம் பெற்ற விஞ்ஞானி ஒருவர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

MA, MSc, ME, Mtech, MBA, MD என எல்லாவற்றையும் படித்த மாஸ்டர் of all என்ற நிலை மாறி பிஹெச்டி செய்யும்போதுதான் அதுவரை தாங்கள் படித்தது மிகச் சிறிது, அறியாததே பெரிது என்பது தெரியவரும். ஒரு மிகச் சிறிய கருப்பொருளை ஆய்வுக்கு தேர்ந்து எடுத்துக்கொள்ளும்போது அவர்களின் தலைக்கனம் சிதறும்.

ஆனால் அதற்குப் பிறகும் 99% பிஹெச்டிகள் தங்களின் பழய மூடநம்பிக்கைகளில் இருந்து சிறிதும் மாறாமல் சாகும்வரை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் தலைக்கனம் குறைவதே இல்லை. கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய, வரலாற்று ஆய்வுகள் இவற்றை எல்லாம் ஆய்வுகள் என்று நம்புகிறார்கள்.

என்னுடன் முந்தைய கால நண்பர், விஞ்ஞானி, (தற்போது கனடாவில் இருக்கிறார்) ”அணு, அவர்கள் தங்களைப்போலவே உங்களையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் யாராக மாறி இருக்கிறீர்கள், என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவில்லை” என்று எழுதி இருந்தார்.

புருனோ தன் பிஹெச்டி ஆய்வில் இருந்து விலகி அந்த அறிதல்களை கேள்விகளுக்குள்ளாக்கித்தான் புதிய முடிவுக்கு வருகிறார்.

ஆனால் மக்கள் முழுவதும் அவருக்கு எதிராக திரும்பினார்கள். MA, MSc, ME, Mtech, MBA, MD, PhD களும் மதாச்சாரியார்களும் ஆட்சி அதிபர்களும் அவருக்கு எதிராக கிளம்பினார்கள். புருனோவை ரோம் நகரின் முக்கியமான ஒரு வீதியில் மரத்தில் கட்டி உயிரோடு எரித்தார்கள். அந்த இடத்தில் இன்று அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள். அதை ரோம்நகரில் என் கண்களால் கண்டு கண்ணீர் சிந்தியும் இருக்கிறேன். எரித்துக் கொல்லப்பட்டது February 8, 1600.
சிலை வைக்கப்பட்டது 9 JUNE 1889. 289 ஆண்டுகள் கழித்து.

இன்றும் புருனோவை எரித்துக்கொல்ல விரும்பும் மதவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மிக அதிக எண்ணிக்கையில்.

புருனோவைப்போல் நானும் இந்தியாவில் நான் செய்த ஆய்வுகளை வெறுத்து, கேள்விகளுக்கு உள்ளாக்கி, அமேரிக்க வந்து, பல செய்முறை ஆய்வுகளை மேற்கொண்டவன்.

MA, MSc, ME, MTech, MBA, MD என்ற பெயர்களில் உங்களில் பலரும் மதத் தத்துவங்கள், வணிகம், வங்கி, பொருளாதாரம், வரலாறு, இலக்கியம், மொழியியல், கம்பூனிச சிந்தனைகள், பொறியியல், கணிதம், அறிவியல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, அல்லோபதி இவற்றில் ஏதாவது ஒன்றில் படித்து PhD வரை பட்டமும் பெற்று இருப்பீர்கள். ஆனால் ஒரே ஒரு துறையில்.

உண்மையில் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பட்டம்பெற படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 5-10 இருக்கும். எனக்கு 5-10 புத்த்கம் படிக்க 1-2 மாதங்கள் போதும். பள்ளி கல்லூரிகளில் எனக்கு பாடப்புத்தமாக வராதவற்றை,மதத் தத்துவங்கள், வணிகம், வங்கி, பொருளாதாரம், வரலாறு, கம்பூனிச சிந்தனைகள், பொறியியல், கணிதம், அறிவியல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, அல்லோபதி என எல்லாவற்றைப் பற்றியும் நூலகங்கள் வழியாக படித்தேன்.

பலவற்றை செய்முறைகளில் சோதித்தும் இருக்கிறேன். மூலிகைகள் ஹோமியோ இவற்றை அறிந்துகொள்ள எத்தனை புத்தகம் பற்றிப் படிக்கவேண்டும் என்று நினக்கிறீர்கள்? பல புத்தகங்களும் ஒரேமாதிரியான கருத்துக்களையே சொல்லி இருக்கும்.

ஹோமியோ படிக்க 1. The Organon Of The Healing Art By Samuel Hahnemann

  1. Homœopathic Materia Medica By William Boericke, M.D., 3. Homeopathic Solutions Made Easy By Michèle Boiron And François Roux, 4. The Homeopathic Revolution: Why Famous People And Cultural Heroes Choose Homeopathy By Dana Ullman, MPH படித்தால் போதும். என்னிடம் 10 புத்தகங்களுக்குமேல் இருந்தன. அவற்றில் . The Organon Of The Healing Art By Samuel Hahnemann
  2. Homœopathic Materia Medica By William Boericke, M.D. இரண்டையும் 500க்குமேல் ஹோமியோ மருந்துகளையும் முதல் முதலில் நான் அமேரிக்கா வந்தபோது என்னுடன் கொண்டுவந்துவிட்டேன். அமேரிக்காவில் இரண்டு MD doctors என்னிடம் தங்களின் உடல் நோய்களுக்கு ஹோமியோ மருத்துவம் எடுத்திருக்கிறார்கள்.

5 புத்தகங்களை ஆண்டொன்றுக்கு படித்துவிட்டு பெரிதாக படித்துவிட்டதாக நீங்கள் நிம்மதி அடைந்த காலங்களில் ஆண்டொன்றுக்கு பல நூறுபுத்தகங்களை நான் படித்தேன். அப்போதும் நான் திருப்தி அடையவில்லை.

நான், நான் என்று சொல்வது தலைக்கனம் இல்லையா என்றுகூட வாதிடலாம். நான் என்ற சொல்லை நீங்கள் படிக்கும்போது அந்தச் சொல் உங்களை குறிப்பதாக கற்பித்துக்கொள்ளுங்களேன்.
நான் படித்ததை, நான் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், நாகம்மாள்-அனுமந்தனின் கடைசிப்பிள்ளையான அணுகாந்த் படித்தான் என்று எழுதட்டுமா? நீங்கள் படித்தீர்கள்.., நாம் படித்தோம்.. என்று பொய்யாக எழுதட்டுமா? தலைக்கனம் இல்லாதவன் என்று அப்போதாவது நம்புவீர்களா?

மதத் தத்துவங்கள், வணிகம், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம், மொழியியல், கம்பூனிச சிந்தனைகள், பொறியியல், கணிதம், அறிவியல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, அல்லோபதி, சோதிடம் என இவற்றில் உள்ள புத்தகங்களை தேடித் தேடி கண்டுபிடித்து படித்து இருக்கிறேன். சென்னை IIT, Anna University, Madras University, Veterinary University, Madras Medical College நூலகங்கள் பெரிதும் பயன்பட்டன.

அந்த நூலகங்கள் எனக்கு மட்டும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கவில்லை. நீங்களும் IIT நூலகத்தில் aeronautic enng, Chemical engg, civil engg, computer engg, Electrical electronic enng, mech engg என பல புத்தகங்களையும் படிக்கலாம். யாரும் உங்களை தடுக்க மாட்டார்கள்.

சோதிடம் கற்றுக்கொள்ள வேண்டுமா,

Raphael’s Astronomical Ephemeris Of the Planet’s Places கொண்டு கிரகங்களின் நிலைகளை துள்ளியமாக டிகிரி-செகண்ட் எத்தனை தசம நிலை வரை கணக்கிடமுடியுமோ அதுவரை கணக்கிடலாம். எண்சோதிடங்களில் பரல்கள் கணக்கும் எளிதுதான். இவற்றை எல்லாம் கணக்கிட கணக்குதான் தெரியவேண்டும். கணக்கில் வல்லவனான நான் கிரகங்கள் நிலைகள், பரல்கள், இவற்றை முதலில் எழுதிக் கணக்கிட்டுக் கொண்டிருந்ததை விட்டுவிடு பின் கணினியில் FORTRAN PROGRAM எழுதி பயன்படுத்திவந்தேன். இந்தியாவில் இருந்த காலங்களில் என்னிடம் சோதிடம் கேட்டு வந்தவர்களில் அதிகம் படித்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.

Central Drug Research Institute (CDRI), Lucknow ல் ஒருமுறை நான் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் உரையாற்றும்போது என்னை அறிமுகப்படுத்திய விஞ்ஞானி எனக்கு சோதிடம் நன்றாகத் தெரியும் என்றும் மேடையில் சொன்னார். நான் அந்த மேடையில் 45 நிமிடம் நான் அறிவியல் மட்டுமே பேசினேன், என் ஆய்வுகள் பற்றி. அதாவது உயிரினத் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்- A lesson from 2’5’ DNA double helix என்பதே என் தலைப்பு, அது என் ஆராய்ச்சி என்பதால்.

CDRI Guest House ல் 3 மாதங்கள் தங்கி இருந்தேன். அந்த 3 மாதங்களில் பெரும்பாலான நாட்களில் மாலை நேரங்கள், சனி-ஞாயிறு என என்னைச் சந்திக்க வந்த விஞ்ஞானிகளில் பலரும் தங்கள் சோதிட பலனை அறிய வந்தார்கள். அறிவியல் ஆய்வு பற்றி அறிந்துகொள்ள வந்தவர்கள் மிகக் குறைவே.

கணக்கு நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டால் மற்ற மதத் தத்துவங்கள், வணிகம், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம், மொழியியல், கம்பூனிச சிந்தனைகள், பொறியியல், கணிதம், அறிவியல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, அல்லோபதி, சோதிடம் எல்லாமெ மிக மிக எளிது.

நீங்களும் வெட்டியாக உங்கள் போழுதைப் போக்காமல், நடக்கும்போதும், சைக்கிளில் போகும்போதும் கூட மிதிவண்டியில் Handle Bar மீது புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டே என்னைப் போல் படிக்கலாம். இரவு உறங்க முயலும்போது அன்றும் அதற்கு முந்தைய நாட்களிலும் படித்தவற்றை நினைவில் கொண்டு வந்து வினாக்களை எழுப்பி விடைகாண முயற்சிக்கலாம். பல பக்க கணக்குகளை, இயற்பியல், வேதியியல், பொறியியல் கணக்குகளை தாளில் எழுதாமல் மூளையில் எழுதி சரி பார்க்கலாம்.

அதெல்லாம் முடியாது உங்களால்.

சினிமா, ஆடல், பாடல், விளையாட்டு, கதைப்புத்தகம் படித்தல், வெட்டியாக ஊர்சுற்றல் என்ற அதிமுக்கியமான வேலைகள் உங்களுக்கு இருக்கும்போது, வாழ்வை அனுபவிக்க தெரியாத அணுகாந்த்தின் வழியை ஏன் பின்பற்றப் போகிறீர்கள்?

அணுகாந்துடன் வாதங்கள் புரிந்து தாங்கள் பேரறிஞர் என்று நிரூபித்துவிட்டால் போதும் என்று வாதிட வருகிறீர்கள். மற்றவரோடு வாதிட்டு என் நேரத்தை நான் வீணடித்தல் பெரும் பிழை என்பதை 10 வயதுக்குள் புரிந்துகொண்டதால் தான், இத்தனை துறைகளிலும் படித்து ஆய்வுகள் செய்து அறிவை வளர்க்க முடிந்தது. இன்றுமட்டும் ஏன் என் நல்ல வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டுமா?

மாற்றுச் சிந்தனைகள் என்று மாட்டுச் சிந்தனைகளை வைக்காமல் மனிதச் சிந்தனைகளை வையுங்கள்.

யாரோ அனுப்பியதை உங்களுக்கு பிடித்தது என்றால் படித்தைல் பிடித்தது என்று பிதற்றி, மற்றவருக்கும் பிடிக்கும் என்று நம்பி பகிராதீர்கள்.

கார்ல்மார்க்ஸ், லெனின், மாவோ வைத்த சோசலிச சிந்தனைகளை பெரும் அறிவுப்புரட்சி என்று நம்பி வாதங்களை வைக்காதீர்கள். முதலாளித்துவ, கார்ப்பரேட் நிறுவனங்கள்மூலம் கொள்ளை அடித்து பெரும் பணக்காரர் ஆனவர்களை சாதனையாளர்களாக கற்பித்துக்கொள்ளாதீர்கள்.

நிக்கலாஸ் டெஸ்லா என்ற விஞ்ஞானி தன் பங்கீடுகளை விஞ்ஞான ஆய்வுக்கென்று விட்டுக்கொடுத்திராவிட்டால், உலகில் மிகப் பெரும் பணக்காரர் அவராகத்தான் இருந்திருப்பார். நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை கண்டுபிடித்ததே அவர்தான்.

என் குரு கோபிந்த் கொரான தான் கண்டுபிடித்த PCR, Nucleotide synthesis, Synthetic Gene Synthesis, Gene expression என எல்லாவற்றையும் காப்பு உரிமை பெற்று இருந்தால் நிக்கலாஸ் டெஸ்லா வை விட அதிக பணக்காரர் கோபிந்த் கொரான வாகத் தான் இருந்திருப்பார். பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த மாபெரும் விஞ்ஞானிகளுக்கு காப்புரிமை பெற மட்டும் அறிவில்லை என்றும், ஹார்வேர்டில் (Harvard University) ஒரே ஒரு ஆண்டு BA படித்ததோடு படிப்பதை விட்டு விலகிய William Gates பில்கேட் போன்ற பெரும் நிறுவனங்களில் மாதம் பலகோடி சம்பாதிப்பவர்களை பேரறிவாளிகளாகவும் பெரும் வெற்றிவீரர்களாகவும் கற்பனைசெய்துகொண்டு எழுதாதீர்கள். அந்த கொடிய தொழிலதிபர்களைப் பற்றிய செய்திகளை WFO வில் பகிராதீர்கள்.

என்னை ஒரு விவாதப் பொருள் ஆக்காதீர்கள்.

நான் யாரிடமும் பிச்சை கேட்க வில்லை. என் வாழ்வின் மீத நாட்களில் நான் உண்டு வாழ்ந்து சாக தேவை எனக்கு மிகக் குறைவு.

கொள்ளைஅடிக்கும் மற்றவர்களை சாதனையாளர்களாகக் கொண்டாடும் நீங்கள் உங்கள் மூட நம்பிக்கைகளை நல்ல நம்பிக்கைகள் என்று நம்பி, உங்களைப்போல் நானும் பணக்காரர் ஆகத்தான் அமேரிக்கா வந்தேன் என்று கணக்குப்போடாதீர்கள். நல்ல வேலை நல்ல சம்பளம் தேடி வரவில்லை. நல்ல அறிவு, மருத்துவத் தொழில் நுட்பம் தேடி அமேரிக்கா வந்தேன்.

மதத் தத்துவங்கள், வணிகம், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம், மொழியியல், கம்பூனிச சிந்தனைகள், பொறியியல், கணிதம், அறிவியல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, அல்லோபதி, சோதிடம் என எல்லாவற்றிலும் உங்களோடு நான் வாதிடலாம்தான்.

அதைவிட எருமை மாட்டின் மயிரை சிரைக்கலாம் நான். அல்லது வாலில் உள்ள முடிகளை எண்ணி ஆராய்ச்சி என்று சொல்லி உங்களைப்போல் விஞ்ஞானக் கட்டுரைகளை (???) எழுதலாம்.

ஒருபோதும் என் நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

உங்கள் நம்பிக்கைகளான, மதத் தத்துவங்கள் மூலிகை, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, அல்லோபதி, சோதிடம் அவற்றில் இருந்தும்
அரசியல் தத்துவங்களான கம்யூனிசம், முதலாளித்துவம், மக்களாட்சி, என அனைத்தில் இருந்தும்

வேறுபடும் என்னை நீங்கள் உயிரோடு எரிக்கலாம்தான்.

நன்றி,
அமேரிக்காவில் இருந்து மருத்துவ விஞ்ஞானி அணு


Exit mobile version