Site icon தமிழன் சங்கர்

தமிழ்நாடு தான், என்ன பிரச்சனை உங்களுக்கு!

YouTube Poster

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு அவ்வளவு தான், இதில் என்ன பிரச்சனை இருக்கிறது ? இந்த பெயருக்குள் நடக்கும் அரசியலை கேட்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. எப்பொழுதும் போல் இயல்பாய் நடக்கும் விடயங்களைக் கூடத் தாங்கள் சாதித்து விட்டதாகச் சாதனை பட்டியல் வாசிக்கும் திராவிடர்களின் கூப்பாடு தமிழ்நாடு என்கின்ற பெயரிலும் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டியவரே அண்ணா தான் என்று எப்போதும் போல் தமிழர்களை ஏமாற்றும் திராவிடர்கள் அரசியல் ஆதாயங்களுக்காகத் திரித்துக் கொண்டு திரிகின்றனர். நவீன காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டப்படி சென்னை மாகாணம் என்று இருந்ததை அண்ணா முதல்வராக இருந்த போது தமிழ்நாடு எனச் சட்டப்படி மாற்றினார், அப்படி மாற்ற வைப்பதற்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாருக்கும் அவர் மறைவுக்குப் பின்னரும் அதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பல இயக்கங்களுக்கும் தான் அந்தப் பெருமை சாரவேண்டுமே தவிர அரசியல் காரணங்களுக்குத் திராவிடர்கள் கட்டமைக்கும் பிம்பங்களுக்கு அல்ல.

சங்க இலக்கியத்தில் பல தரவுகள் தமிழ் நாட்டையும் அதனுடைய பரப்பளவுகளையும் எளிதாகப் புரிந்து கொள்ளும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. பல தமிழறினார்கள் அதைப் பற்றி விரிவாகப் பல கட்டுரைகளை எழுதி இருக்கின்றனர்.

பல சங்ககாலத் தரவுகள் இருந்தாலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்தது இளம்பூரணர் எழுதிய “நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” என்கின்ற வரிகள் தான், இளம்பூரணருக்கு முன் சிலப்பதிகாரம் “தமிழ்நாடு” என்ற பெயரைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயமலைக்குக் கல் எடுக்கப் போகும்போது அங்கங்கே உள்ள வேற்று மொழி பேசும் மன்னர்கள் குறிப்பாக ஆரிய மன்னர்கள் தடுப்பார்களோ, அதை எதிர் கொள்ளும் அளவுக்குப் படைகொண்டு செல்ல வேண்டுமோ என்று சேரன் செங்குட்டுவன் அமைச்சர்களிடம் கலந்து ஆய்வு செய்தான். அப்போது அமைச்சர் வில்லவன் கோதை கூறியது நமக்குப் பெரும் வியப்பளிக்கிறது.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்

முதுநீர் உலகு முழுமையும் இல்லை

இமய மால்வரைக்கு எம்கோன் செல்வது

கடவுள் எழுதவோர் கற்கே யாதலின்”

இந்தப் பாடலுக்கும் பொருள்,

ஒலிக்கின்ற கடலை எல்லையாகக் கொண்ட இந்நிலம் முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் உள்ள தமிழ் நாடாக ஆக்கிட நினைக்கும் நீ இமயமலைக்குக் கல்லெடுக்கச் சென்றால் உன்னை எதிர்த்து நிற்க எவரும் வரமாட்டார் என்றான் வில்லவன் கோதை!

ஆயிரமாயிரம் தீய சக்திகள் தமிழ் மொழியையும் தமிழர் இனத்தையும் இந்தப் பூமிப் பந்தில் இருந்து ஒழிக்க நினைத்தாலும், உங்கள் கருத்தியல் திணிப்புகள் என்றும் வெற்றிபெறாது, ஏன் எனில் நாங்கள் தமிழர்கள்!!!

Exit mobile version