Site icon தமிழன் சங்கர்

இன்று நேற்றல்ல என்றுமே சாத்தான்குளச் செய்திகள் இப்படித் தான்!

இன்று நேற்றல்ல என்றுமே சாத்தான்குளச் செய்திகள் இப்படித் தான்! | TamilanSankar.com

யாரோ ஒருவர் சொன்ன “தலை சுத்துதுப்பா” என்கின்ற வசனம் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பொழுது நிச்சயம் வந்திருக்கும், கடந்த சில தினங்களாகக் காவல்துறையின் கொடூரத்தால் நடந்தேறிய சாத்தான்குள இரட்டைப் படுகொலை பற்றிய செய்திகள் வீரியம் எடுத்துள்ளன. பகிரி, முகநூல், தொலைக்காட்சி விவாதங்கள் என்று தமிழ்நாடு எங்கும் இந்த விவகாரம் பேசப்பட்டுள்ளது.

முதலில் சமீபத்தில் வந்து கொண்டிருக்கின்ற சில செய்திகளின் தலைப்பை பார்ப்போம்:-

  1. சாத்தான்குளம்‌ சம்பவத்தில்‌ மரணமடைந்த ஜெயராஜ்‌, பென்னிக்ஸ்‌ குடும்பத்தாருக்கு அதிமுகச் சார்பில்‌ ரூ.25 லட்சம் நிதியுதவி
  2. கனிமொழி சிக்குகிறார், கனிமொழியின் நாடகம், சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி
  3. ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி?
  4. “ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. ரத்தத்தைப் பார்த்தேன்” குமுறிய “ரேவதீ”.. பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
  5. RSS கட்டுப்பாட்டில் தமிழகக் காவல்துறை செல்வது மிக ஆபத்தானது – சாத்தான்குளமே சாட்சி..
  6. Friends Of Police – சேவாபாரதி – RSS தொடர்பு பற்றிய விவாதம் கிளம்பியவுடன் சிபிஐ-க்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி போலீஸ் மூலம் வேகவேகமாக முடிக்கப்படுகிறது.
  7. `எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுகிறேன்’ – கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்
  8. நேர்மையான விசாரணை நடைபெற எடப்பாடியிடம் உள்துறை இருக்கக்கூடாது- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
  9. `நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைச் சிபிசிஐடி அளித்துள்ளது!’ – உயர் நீதிமன்றம்
  10. சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி… லாக் அப் மற்றும் கஸ்டடியல் மரணங்களை விசாரிக்கத் தனிச்சட்டம் தேவையா?

காவல்துறை கட்டுப்பாட்டில் நடந்த சாத்தான்குளம் இரட்டைப்படுகொலை செய்தியும் அதையொட்டி ஊடகங்கங்கள் தமிழர்கள் மூளைக்குள் கொட்டி நிரப்பிய செய்திகளும் அதை ஒரு சாமான்ய மனிதனாக எது சரியான செய்தி எது தவறான செய்தி என்று பகுத்துப் பிரிப்பது எளிதான காரியம் இல்லை.

ஊடகங்கள் என்பது மக்களாட்சியின் ஒரு தூணாக மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்காக உருவானவை ஆனால் ஊடங்கள் அந்தக் கடமையைச் செய்யாமல் போனதிற்குக் காரணம் பெருமுதலிகள் கைகளில் அவை சிக்கியதே.

அதிகாரவர்கத்தினர், அரசியல்வாதிகள்,பெருமுதலாளிகள் என்று மூன்று பெரும் பிரிவினர்களிடம் பல கோடி தமிழர்கள் விதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மூன்று பெரும் பிரிவினரும் உண்மையிலே தமிழர்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறார்கள் என்று நாம் நினைத்தால் அது நம் பெரும் தவறு. நான் சொன்ன இந்த மூன்று பெரும்பிரிவினர்களில் தமிழர் நலன் என்று பார்ப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஒரு மரணநிகழ்வு அதையொட்டி பல கண்ணோட்டத்துடன் செய்திகள் பரப்பப்பட்டு மக்களைக் குழப்பத்தில் வைப்பது மட்டும் தான் இவர்களின் ஒரே வேலை, அதை விட்டு இவர்கள் நீதி வாங்கித் தருவார்கள் என்று நாம் காத்திருந்தால் இந்தச் செய்தி நாளைய பரபரப்பு செய்திகளால் மூழ்கடிக்கப்படும்.

ஒரு புறம் மனிதனை விலங்கினும் கொடுமையாய் அடித்துக் கொன்றவர் தன் எதிர்காலம் கருதி கலங்குகிறாராம், இன்னொரு புறம் இது காவல் துறை மரணம் இல்லை என்று நாட்டை ஆளுபவர் அறிக்கை விடுகிறாராம், இன்னொரு புறம் இந்தக் கொலையில் சாதியம் இருக்கிறது என்று குற்றசாட்டு, இன்னொருபுறம் இந்துத்துவாதிகள் friends of police என்கின்ற அமைப்பின் மூலம் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகச் செய்தி, இன்னொரு புறம் எதிர்கட்சியின் முக்கியத் தலைவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக ஒரு செய்தி, இன்னொரு புறம் இந்தக் கொலை எல்லாம் பெரிய செய்தியா என்று பாரதீய சனதா தமிழ்நாட்டு தலைவர் அறிக்கை விடுவதாகச் செய்தி… ஏன் இதனைத் திசைமாற்றல்கள், மக்களைக் குழப்பத்தில் தள்ளி நீங்கள் செய்யத் துடிக்கும் காரியம் தான் என்ன ?

ஊடகங்கள் பெரு முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களைக் குழப்பத்திலேயே வைத்திருக்கும் பணியாய் செவ்வன செய்கின்றன, எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் சமூக ஊடகங்களும் அதை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இது எங்கு போய் முடியுமோ…

Exit mobile version