Site icon தமிழன் சங்கர்

காடு பொட்ட காடு!

இந்த உலகம் பல மனிதர்களை வழியெங்கும் பிரசவித்துக்கொண்டே போகும், சேவை என்று வருகிறவர்கள்நமது உடைகளைக் கூடப் பிடுங்கிக் கொண்டு போவதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு தனி மனிதர் மிக பெரிய சாதனையை ஆரவாரம் இன்றி செய்திருக்கிறார் அவர் இதைத் தான் சொல்கிறார் “காடு எதற்குத் தேவை, இந்த உலகில் இருக்கும் அத்தனை உயிர்களுக்குமான நிழற்கொடை காடு தான், அதை விட முக்கியமானது உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் பருகும் நீரை காடு மட்டும் தான் கொடுக்க முடியும்.” இவரின் ஊர் பெயரை கேட்டாலே மனது பூரிக்கிறது ஆம் ஊரின் பெயர் பூத்துறை விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது. இவர் ஓர் அசத்திய மனிதர் 100 ஏக்கர் நிலத்தை மரம் செடி கொடிகள் என்று பூத்துக் குலுங்கும் காடாக மாற்றிவிட்டார்.

#ஆரண்யாகாடு  | Man made forest | @TamilanSankar.com

நாமெல்லாம் வீட்டிற்குத் தான் பெயர் வைப்போம் இவரோ தனது காட்டிற்குப் பெயர் வைத்திருக்கிறார், காட்டின் பெயர் ஆரண்யா. தன் சொந்த உழைப்பில் 100 ஏக்கர் பொட்டல் நிலத்தை வளம் கொழிக்கும் உலர் வெப்ப மண்டலக் காடாக மாற்றியிருக்கிறார். இதில் என்ன ஓர் அதிசயம் என்றால் அவர் வருடம் முழுவதும் எந்தச் செடிக்கும் தண்ணீர் ஊற்றுவது கிடையாது எப்படி என்று கேட்கிறீர்களா, மழைக்காலத்திற்கு முன்னே தேவையான செடிகளைத் தயார்படுத்தி மழைக்காலம் துவங்கும் இரண்டு மாதங்களுக்கு முன் இவர் செடிகளை நட்டு விடுகிறார்… பிறகு எதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும், இது தான் உலர் வெப்ப மண்டலக் காட்டின் தன்மை. புதுசேரி வட்டத்தில் ஒரு காடு அதுவும் ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் அஃது ஆரண்யா காடு தான்.

ஒவ்வொரு மரத்தை வெட்டும் போதும் நம் உள்ளம் வலிக்க வேண்டும் ஆனால் அப்படி நடப்பதில்லை மிகச் சாதாரணமாக நாம் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மனிதர் உருவாக்கிய காட்டினில் பல்லாயிர கணக்கான மரவகைகளும் 240 பறவை வகைகளும் 20 வகையான பாம்பு இனங்களும் இனிதாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர் ஆரம்பகட்டத்தில் இங்கு எத்தனை வகையான பறவைகள் இருக்கின்றன என்று ஆராய்ந்த போது மொத்தமுமே 48 வகைத் தான் இருந்திருக்கின்றன மேலும் வெகு சில பாம்பு வகைகளே இருந்திருக்கின்றன. புதுச்சேரி பல்கலைகழகத்தில் இருந்து மாணவர்கள் வந்து ஆராய்ச்சி செய்த போது ஏற்கனவே இருந்த பறவை மற்றும் பிற உயிரினங்கள் பல்கி பெருகி இருப்பதாய் கண்டிருக்கிறீர்கள். இந்தக் காட்டில் இருக்கும் பெருஓடை பல்லுயிர் பெருக முக்கியமான காரணம் இந்த ஓடை உருவாக்கிய சூழல் உயிர்கள் செழிக்க வைத்திருப்பதாய் சொல்கிறார் சரவணன்.

ஒவ்வொரு கிராமத்திலும் 30 விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் இயற்ற அவர் கோரிக்கை வைக்கிறார், இவரைப் பற்றிப் படித்த போது அதைப் படித்தது நான் பகிராமல் போனால் இயற்கைக்கு நான் செய்யும் பெரும் பாவமாகக் கருதியதால் உங்களுடன் பகிறுகிறேன். நீங்களும் பலருக்குப் பகிருங்கள். இயற்கை விரும்பிகள் மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது இயற்கையைக் காக்க.

மீண்டும் சந்திப்போம்.

Exit mobile version