Site icon தமிழன் சங்கர்

தமிழன் விட்ட கப்பல் , #வ_உ_சி | #VOC Ship Owner | @TamilanSankar.com

தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் பற்றி நாம் சிந்தித்தால் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெயர் நிச்சயம் நம் நினைவிற்கு வந்து நிழலாடும். வ.உ.சி அவர்களைப் பற்றி நினைவு கூறும் போது சுப்பிர மணியசிவா அவர்களைப் பற்றிய நினைவுகளும் நிச்சயம் வரும். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை வாழ்வும் அவரது போராட்டமும் தனித்துவமானவை என்றால் மிகையாகாது. வ.உ.சி அவர்கள் இலக்கியம் அரசியல், சமூகநலன் என்று எல்லாவற்றிலும் மக்களோடு பயணித்து வெள்ளையர்களின் காலத்தில் அவர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

தமிழன் விட்ட கப்பல் , #வ_உ_சி | #VOC Tamilan Ship | @TamilanSankar.com

வ.உ.சி. 1872 செப்டம்பர் 5-ம் நாள் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் பிறந்தார். இளமையிலேயே தமிழும் ஆங்கிலமும் கற்று மொழிப் புலமை மிக்கவராக விளங்கினார். 1894-ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு பெற்றார், 1900-ல் தொழில் நிமித்தமாகத் தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்தார். ‘விவேகபானு’வில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்துள்ளார், அவர் சுதேசிக் கப்பல் பற்றியும் பல கட்டுரைகளை அந்த இதழில் எழுதினார். 1905 ஆகத்து 7-ம் தேதி சுதேசிய கப்பல் கம்பெனியைத் தொடங்கி 1906-ல் இக்குழுமம் பதிவு செய்யப்பட்டது. 1907-ல் நடந்த சூரத் காங்கிரசு மாநாட்டில் பாரதியார் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களுடன் கலந்து கொண்டார்.

கோரல் ஆலை தொழிலாளர் போராட்டம்

இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் போராட்டமான தூத்துக்குடி கோரல் ஆலை தொழிலாளர் போராட்டம் 1908-ல் நடந்தது இந்தப் போராட்டத்துக்குத் வ.உ.சி தலைமை ஏற்றார். இந்தப் போரத்திற்காக மார்ச் 12-ல் சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். வ.உ.சி கைது செய்யப்பட்டதால் மார்ச் 13 அன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக் குடியில் கலவரம் மூண்டது அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு அவருக்கு இருந்தது. கோவை சிறைவாசத்தின் பொழுது 1909 ஜூலை 7-ல் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்து. 1912 டிசம்பர் 12 அன்று கண்ணனூர்ச் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியில் வந்தார். அப்போது மாறிவரும் அரசியல் போக்கின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வ.உ.சிக்கு ஏற்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட வ.உ.சி.யின் வாழ்க்கையில் சிறைவாசம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, சிறைவாழ்வு ஒரு பெரும் மாற்றத்தினை அவர் மனதில் ஏற்படுத்தியது, சிறைவாசம் கொடுத்த நெருக்கடிகள், வலிகள், தனிமை அனைத்திலிருந்தும் விடுபடத் தமிழ் மொழி அவருக்குக் கை கொடுத்தது, நிறையப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின் தமிழே அவருக்கு எல்லாமும் ஆயிற்று, வ.உ.சி.யின் கவனம், பணிகள் எல்லாம் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்து மையம் கொண்டது. என்ன ஒரு கொடுமை என்றால் இன்றைய தலைமுறைக்கு வ.உ.சி.யின் அரசியல் செயல்பாடுகள் மட்டும் தான் தெரிகின்றன அவரது தமிழ்ப் பணி தமிழர்களால் அறியப்படாமல் உள்ளன.

வ.உ.சி.யின் தமிழ்ப்பணி

வ.உ.சி.யின் தமிழ்ப்பணி அவர் சிறையில் இருந்த 1908-12 வரையிலான காலகட்டத்தை நாம் குறிப்பாகச் சொல்லலாம். சிறையிலிருந்து விடுதலை பெற்றபின், 1920 இல் நடைபெற்ற கல்கத்தா காங்கிரசிற்குப் பின், அவரது அரசியல் வாழ்வு நிறைவு அடைந்தது. அவரது தமிழ் வாழ்வு முழு வீச்சுடன் தொடங்கி 1936-ல் அவர் மறையும் வரை தொடர்ந்தது. வ.உ.சி. அவர்கள் பல நூல்களை எழுதினார் மொழிபெயர்ப்பு நூல்கள், உரை நூல்கள், பதிப்பித்த நூல்கள், நடத்திய பல ஏடுகள், அரசியல் மேடைகளில் சொற்பொழிவு என்று எல்லாவற்றிலும் பட்டையைக் கிளப்பினார். நெல்லை மாவட்டத்தில் தமிழர் படையைத் திரட்டினார், தமிழகத்தை உயர்த்த ‘தரும சங்க நெசவுசாலை’, ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’, ‘சுதேசிய பண்டகசாலை’ ஆகிய நிறுவனங்களை நிறுவினார். தூத்துக்குடிக்கும், சிங்களத்திற்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும் கப்பல் விட்டுக் கொண்டிருந்த நாளில் தமிழர்களின் கப்பலை தமிழ்நாட்டில் இருந்து சிங்களத்திற்கு விட்டு வெள்ளையர்களுக்குச் சுதேசிக் கொடியை உயர்த்திப் பிடித்துத் தூக்கத்தைக் கெடுத்தார்.

கப்பல், சிறைவாசம் செக்கிழுப்பு என்ற சொற்களுக்குள்ளேயே நாம் எளிதாக அவரது வரலாற்றைச் சுருக்கி விட்டோம் ஆனால் வ.உ.சி பன்முகத் தன்மை கொண்டவர் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை நாம் எளிதில் கடக்க இயலாது.

வ.உ.சி போன்றோரின் பெருமையைத் தமிழர்கள் முழுதும் அறியும் நாளே, தமிழர் தலை தூக்கி விட்டனர் என்பதை வெளிப்படுத்தும். அதற்கான வேலைகளைத் தமிழர்கள் நாம் ஆரம்பிப்போம். வ.உ.சி அவர்களுக்குப் புகழ்வணக்கம்.

மீண்டும் சந்திப்போம்…

Exit mobile version