Site icon தமிழன் சங்கர்

திமுக எதிர்ப்பு மட்டுமே தமிழ்த்தேசியமா ?

திமுக எதிர்ப்பு மட்டுமே தமிழ்த்தேசியமா ? Is only attacking DMK and BJP destination of Tamildesiyam

தமிழ்த்தேசியம் என்கின்ற தமிழர் அரசியல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்த்தேசியம் என்கின்ற சொல் புதிதான ஒரு சொல் இல்லை அது தொன்று தொட்டு ஒவ்வொரு தமிழர் மனதிலும் இறக்கப்பட்டு இறுகிப் போன உணர்வே ஆகும்.

திராவிடம், இந்துத்துவம் என்கின்ற தமிழர் எதிர்ப்புச் சித்தாந்தங்கள் தமிழர் அரசியலை களவாண்டு பல நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. திராவிடத்தையும் இந்துத்துத்வதையும் அக்குவேறாக ஆணிவேராகப் பிரித்துத் தோலுரித்துக் காட்டியும் இந்த இரண்டு சக்திகளும் அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் வலம் வருகிறது என்றால் தமிழ்த்தேசியத்தின் போராட்ட உணர்வு எங்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் ஆராய வேண்டும்.

தமீழத்தில் தமிழர் படையை சதியால் வீழ்த்திய பின் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளத்தில் மாறாத ஒரு வடு உருவாகி இருக்கிறது. அது தமிழர்களின் இனமானத்தோடு கூடிய வாழ்வுரிமையை நோக்கி தமிழர் சிந்தனையைத் தள்ளியுள்ளது. அந்த வலிமையான சிந்தனையைக் கண்ட பலருக்கு பல நாடுகளுக்குத் தூக்கம் கலைந்து உள்ளது.

தமிழ்த்தேசியம் என்கின்ற உணர்வு இன்று நேற்று உருவானது இல்லை, வெள்ளையன் ஆதிக்கத்தில் இருந்த போதே அதற்கான தேவை உருவாகிவிட்டது, தமிழ்மன்னர்களின் நீட்சியில் நமது அரசியல் அதிகாரம் மாற்றான் கைகளில் சென்று விட்டது. அந்த அதிகார இழப்பை பல நூற்றாண்டு கழித்தும் தமிழர்கள் நாம் சரிவர புரிந்து கொள்ளாமல், நமது வரலாற்றைப் சரிவர படிக்காமல் நமது தலைமுறைகளைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்த்தேசியம் என்பது தமிழர் நலன் சார்ந்த தமிழர் அரசியல் இறையாண்மை அடைவதே, வன்முறை பெருத்து போன இந்தப் புவிசார் அரசியலில், தேவைக்கான போர்களை விடத் தேவையற்ற போர்களே பரபரப்பாய்ப் பேசப்படுகின்றன. ஊடகத்தின் உணவாய் பல தேவையற்ற விடயங்கள் மாதக்கணக்கில் பேசப்படுகின்றன. உள்ளூர் ஊடகத்தில் இருந்து உலகளாவிய ஊடங்கங்கள் வரை குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல் ஒரே விடயங்களைப் பொதுமக்கள் மூளைக்குள் திணித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டு திராவிட, இந்துத்துவா ஊடங்களுக்குத் தமிழர் நலன் பற்றி நேர்மறையாய்ப் பேசுவதற்கு எந்த விடயங்களும் இல்லாதது போல் அவர்கள் எடுத்து விவாதிக்கும் பல விவாதங்கள் நமக்கு எரிச்சலை மட்டுமே கொடுக்கும். திராவிடமும் இந்துத்துவமும் போடும் நாடக சண்டைகளைப் பார்ப்பதும் கேட்பதும் தமிழர்களின் தலைவிதியாய் மாறிவிட்டது. தமிழர் பொழுதுபோக்கு ஊடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நாம் இந்த இழி நிலையில் இருக்கும் போது தமிழ்த்தேசியம் பேசுகிறேன் என்று பல அபத்தங்கள், தமிழ்த்தேசிய கருத்தியலை நகைச்சுவை செய்யும் அளவிற்குத் தங்கள் செயல்பாடுகளை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

மக்களாட்சி என்பது பெருந்திரள் மக்கள் தங்களுக்கான நலனை பேசவேண்டும் என்பதாற்காகத் தங்களில் சிறுகுழுவை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதே, ஆனால் இங்கோ மக்களைப் பற்றி விவாதிக்காமல் எதிரெதிர் குழுக்கள் சண்டையிடுவதும் அதைப் பற்றியே மக்களை விவாதிக்க வைப்பதுமாக மக்களாட்சி அரசியல் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே நடவடிக்கையைத் தமிழ்த்தேசியம் பேச வந்தவர்களும் செய்வது பெரும் கொடுமை.

திமுகாவை எதிர்ப்பது மட்டுமே தமிழ்த்தேசியம் இல்லை, திமுகாவை(திராவிடத்தை) மக்கள் தூக்கி எறிந்திடும் அளவிற்குத் தமிழ்த்தேசிய கருத்தியலை மக்கள் ஏற்கும் வண்ணம் கொண்டு செல்வதே இப்போது செய்ய வேண்டியது. நாடக சண்டையிடுவதற்குத் திராவிடமும் இந்துத்துவாவும் இருக்கின்றன அந்த வேலையைச் செய்யத் தமிழ்த்தேசியம் நிச்சயம் தேவையில்லை.

மாற்று அரசியல் புரட்சி தான் தமிழ்த்தேசியத்தின் இப்போதைய தேவை! அதை தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்!

Exit mobile version