Site icon தமிழன் சங்கர்

ஊடக போதையில் தமிழர்களும் தமிழ்நாட்டு அரசியலும்!

ஒரு காலத்தில் நமக்குச் சரி என்று சொல்லிக் கொடுத்தவைகளை எல்லாம் இன்று நாம் கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள் ஆனால் இந்த மாற்றம் தேவையா என்பதே என் கேள்வி. ம‌க்களா‌ட்‌சி‌யி‌ன் முத‌ல் தூ‌ண் எ‌ன்று அழைக்கப்படுவது அரசு ‌நி‌ர்வாகம், ம‌க்களா‌ட்‌சி‌யி‌ன் இர‌ண்டாவது தூ‌ண் எ‌ன்று அழை‌க்க‌ப்படுவது பாராளும‌ன்றமு‌ம், ச‌‌ட்டம‌ன்றமு‌ம், ம‌க்களா‌ட்‌சி‌யி‌ன் மூ‌ன்றாவது தூண் எ‌ன்று அழை‌க்க‌ப்படுவது ‌நீ‌திம‌ன்ற‌ம், ம‌க்களா‌ட்‌சி‌யி‌ன் நா‌ன்காவது தூ‌ண் எ‌ன்று அழை‌க்க‌ப்படுவது ஊடக‌ம் ஆகு‌ம். இன்று இந்த நான்கு தூண்களும் தங்கள் கடமையைச் செய்கின்றனவா என்பது பெரிய கேள்வி. முதல் மூன்று தூண்களுக்கும் பொதுமக்களுக்கும் இருக்கும் இடைவெளி பெரிது அதைக் குறைப்பதே நான்காவது தூணான ஊடகத்தின் வேலை, ஆனால் எப்படி முதல் மூன்று தூண்களும் வலுவிழந்து போய்க் கொண்டிருக்கின்றனவோ அதைவிட மிகத் தவறான வழியில் திசை திருப்பப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டு ஊடகங்கள்.
ஊடக போதையில் தமிழர்களும் தமிழ்நாட்டு அரசியலும்! - News addiction and fake journalism

செய்தி ஊடகங்கள் அனைத்தும் கட்சி ஊடகங்களாக மாறியப் பின்பு சமூக ஊடகம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, ஆனால் அதையும் முற்று முழுதாகக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் தமிழ்நாட்டு ஊடகத் துறையினர், சமீபத்தில் வெளிவந்த மதன் ரவிச்சந்திரனின் மறைமுகக் கண்ணியில் சிக்கிய பலர் செய்தி ஊடகங்களில் இருந்து சமூக ஊடகத்திற்கு வந்தவர்களே. மதன் ரவிச்சந்திரனின் உற்பட யாரும் இங்குத் தமிழ்நாட்டு நலனுக்கோ தமிழர்களின் நலனுக்காகவோ எதையும் செய்வதில்லை, அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் புகழ் வெளிச்சமும் பணமும் மட்டுமே. கோழி திருடியவன் கூடக் கொஞ்சம் கூச்சம் அடைவான் ஆனால் இவர்களோ எந்த வித கூச்சமின்றி எதுவும் நடக்காதது போல் தொடர்ந்து செயல்படுவது ஊடகத்தின் மாண்புக்கு வந்த பெரிய கேடு. தப்பெல்லாம் தப்பே இல்லை என்பது போல் நமது மனநிலையையே மாற்றியது இந்த மக்களாட்சி தூண்கள் தான்.

மக்கள் இயக்கங்கள் எல்லாம் இன்று வலிமையிழந்து ஏதாவதொரு கட்சிக்குக் குடை பிடிக்கும் நிலைமையில் தான் இருக்கின்றன. உண்மையில் தொண்டு செய்பவர்கள் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கத் தன்னலம் ஒன்றையே நோக்கமாய்க் கொண்டவர்கள் பெருகிவிட்டனர், எதைச் செய்தாலும் அந்தப் பலன் தனக்கு மட்டும் வரவேண்டும் அதை வைத்துத் தன்னைச் சார்ந்த சமூகத்தில் புகழடைய வேண்டும் என்கின்ற சிந்தனை போக்குப் பெருகிவிட்டது. மக்கள் அமைப்புகள் எல்லாம் தனது இயங்கியலை மாற்றிக் கொண்டதால் தப்பெல்லாம் தப்பே இல்லை என்பது பொது விதியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சமூகம் பழம்பெருமையில் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்களாட்சியின் நான்காவது தூண் தவறானவர்களால் நிரம்பி வழிகிறது. ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனை கடித்தது போல் ஊடகங்கள் நமக்கு ஒன்றுக்கும் உதவாத விடயங்களை கொண்டு வந்து வெற்று போதையை நமக்கு ஏற்றிக் கொண்டிருக்கின்றன.

Exit mobile version