Site icon தமிழன் சங்கர்

All EYES ON RAFAH வேடிக்கையா இல்லை வாடிக்கையா ?

All EYES ON RAFAH வேடிக்கையா இல்லை வாடிக்கையா

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

பொழுதுபோக்கு தவறில்லை ஆனால் உலகத்தில் நம் கண் முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் போவதும், நமக்கு இதில் என்ன இருக்கிறது என்கின்ற கொடூரப்  போக்கும் வலுத்து வருவது நம்மை நிச்சயம்பயமுறுத்துகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்னே All EYES ON RAFAH எனும் சொற்றொடர்ச் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது, குறைந்த பட்சம் நாலுக் கோடியே நாற்பது லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கிறது தரவுப் புள்ளிகள். பொதுப்போக்குத் துறையில் இருக்கும் பல முக்கியப் புள்ளிகள் பலர் இந்தச் சொற்றொடரைப் பகிர்ந்துப் பாலஸ்தீனத்தில் நடக்கப்போகும் இனப்படுகொலையைப் பற்றிய எச்சரிக்கையைப் பதிவுச் செய்திருந்தனர்.

சான்று இல்லாமல் கொள்வது எல்லாம் ஆதிகாலம் இன்று மனிதம் வளர்ந்து விட்டது ஆகையால் சான்று வைத்து எளிமையாக எந்த இனப்படுகொலையையும் செய்ய அனைத்து வழிவகையும் செய்யப்பட்டுவிட்டது. காசாவின் ரபா நகரில் ஒட்டுமொத்தப் பாலசுதீனர்களும் ஒடுக்கப்பட்டு எங்கும் ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தக் காசாவையும் தீக்காடாக்கிய இசுரேல் ராணுவம் மிச்சம் வைத்திருக்கும் ஒரே ஒரு சிறு நகரம் தான் ரபா.

உலக ஊடகங்கள் நடக்கப்போகும் இனப்படுகொலையைத் தடுக்கும் என்று நாம் நினைத்தால் அது நமது முட்டாள்தனமாய் தான் இருக்கும். இந்தப் பூவுலகில் வாழும் மனிதக் கூட்டத்தில் இரண்டு பெரிய மதங்கள் என்றால் ஒன்று கிறித்தவம் மற்றொன்று இசுலாம் ஆனால் அந்தக் கதையெல்லாம் இங்கு எடுபடாது, இனப்படுகொலையை  அனுமதிக்க வேண்டும் என்று உலகை ஆளும் அதிகாரவர்க்கங்கள் முடிவு எடுத்துவிட்டால் யாரும் அதைத் தடுக்கமுடியாது.  பாதிக்கப்படப் போகும் இசுலாம் மக்களான பாலசுதீனர்களுக்கு இசுலாம் நாடுகளும் பூகோள அரசியல் புரியாத அப்பாவி மனிதர்களும் கண்ணீர் அஞ்சலி மட்டுமே செய்யமுடியும்.
இன்னொரு முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு இந்த உலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இசுரேல் காசாவில் இயக்கியுள்ள பயங்கர ஆயுதங்கள் அதைத்தான் பறைசாற்றுகின்றன. அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர் போராட்டம் பாலசுதீனர்களுக்கு ஆதரவாய் நடக்கும் போதிலும் ஒரு பக்கம் அதிபயங்கர ஆயுதங்கள் இசுரேலில் இறங்கிய வண்ணம் தான் இருக்கிறது. உலகக் கட்டமைப்புகள் ஏதோ இந்த இனப்படுகொலையைத் தடுக்கப் போவது போல் இசுரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் ஒரு பிடியாணைப் பிறப்பிக்கப்பட வேண்டும் கோரிக்கை, ஐக்கியநாட்டு சபையின் சர்வதேச நீதிமன்றம் மூலம் இசுரேல் நாடு  ரபா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கின்ற உத்தரவு, பல மேற்குலக நாடுகள் பாலசுதீனத்தை தனி நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பது போல் பரவும் செய்திகள், இவையாவும் ஏதோ இசுரேலை உலக நாடுகள் நெருங்குவதைப் போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்கும் ஆனால் இனவழிப்பை நிச்சயம் தடுக்காது என்பதே உண்மை.

குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உற்பட முப்பத்தியேழாயிரத்திற்கு அதிகமான பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர் மேலும்  எண்பத்தியேழாயிரதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்து இருக்கின்றனர்.  பாலசுதீனர்களின் ஒட்டுமொத்த வாழ்வியலும் சிதைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக வளர்ச்சி இல்லாத காலத்தில் நம் கண்முன்னே முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவு நடந்தது, சமூக ஊடக வளர்ச்சி இன்று உச்சம் தொட்ட நிலையிலும் நாள்தோறும் யுத்த கொடூரங்கள் பகிரப்பட்டாலும் பொழுதுபோக்கிற்குக் கொடுக்கும் சிறு கவனத்தைக் கூட நாம் கொடுப்பதில்லை.

மனிதம் தேய்வது மனிதனுக்கு நல்லது அல்ல. இந்தப் பதிவு ஏதோ சராசரிப் புலம்பல் என்று கருதினால் கடந்து செல்லுங்கள் இல்லை உங்கள் நண்பர்களுக்கு இந்தப் பதிவைப் பகிருங்கள், இங்கே எதுவும் மாறாது நாம் தான் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.

நன்றி! 

Exit mobile version