தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
சமீபத்தில் மரியதாசு அவர்களின் ஒரு காணொளியைப் பார்க்க நேர்ந்தது அதன் தலைப்பு இது தான் “பாரீசில் கருணாநிதி பித்தலாட்டம்! உபி சும்மாவே இருக்கங்களேங்டா!“, இதுலக் கொடுமை என்னனா தலைப்பில் இருக்கும் தமிழில் கூட எழுத்துப்பிழை, நீங்களே ஒரு முறை அதைப் படித்துப் பாருங்கள். என்னவோ ஒரு பெரிய ரகசியத்தைக் கொண்டு வாறார்னுக் கொஞ்சம் பொறுமையாகப் பார்த்தேன். மரியதாசு என்ன பெருசாச் சொல்லிடப் போறார் இந்துத்துவாவை உருட்டுறதுக்குக் கடமையே கண்ணும் கருத்துமா திராவிட எதிர்ப்புனுத் திரியுற அவர்கிட்ட எதை எதிர்பார்க்க முடியும்.
ஈவேரா, கருணாநிதி போன்றோரின் தமிழர் விரோதச் செயல்பாடுகளை மிகத் தெளிவாகத் தமிழ்த்தேசியர்கள் ஏற்கனவே உரித்துத் தொங்க விட்டுவிட்டனர். நம் முன்னே இந்த இந்துத்துவாதிகளும் திராவிடர்களும் போட்டுக் கொள்ளும் விளையாட்டுச் சண்டையைத் தான் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் உலகத்திலேயே மிகப் பழமையான மொழி தமிழ் ஆனால் அரசாங்கங்கள் அந்த மொழி வளர்ச்சிக்கு போதியக் கவனம் செலுத்தவில்லைனு திருவாய் மலர்ந்துச் சொன்னாராம் அதுக்கு விடைக் கொடுக்கும் விதமாய்த் திமுகவினர் கருணாநிதி பாரீசில் கலந்து கொண்ட மூன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கூடல் நிகழ்வின் காணொளியைத் தேர்தல் சமயத்தில் வெளியிட்டு பெரிய பிரச்சாரம் செய்துவிட்டனராம்.
இதில் கூத்து என்னவென்றால் இந்துத்துவவாதிகள் இன்று தான் தமிழைப் பற்றிப் பேசுகிறார்களாம், திராவிடர் கருணாநிதியோ 1970-ம் ஆண்டிலேயே தமிழுக்குத் தொண்டாற்ற உலக நாடுகளுக்குக் கிளம்பிவிட்டார் என்கின்ற திமுகவின் பிரச்சாரம் இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம், உடனடியாகப் பெரும் ஆராய்ச்சி செய்து அன்று என்ன நடந்தது என்று ஒரு ஆராய்ச்சிக் காணொளியை வெளியிட்டிருக்கிறார். அது சரி தமிழுக்கும் தமிழருக்கும் கருணாநிதி என்னவெல்லம் செய்தார் என்று நமக்கு நன்றாகத் தெரியாதா என்ன, இவர் என்ன சொல்கிறார் என்று பொறுமையாகக் காணொளியைப் பார்த்தேன்.
ஈழத்துத் தமிழறிஞர் தவத்திரு. தனிநாயகம் அடிகள் என்பவர் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்கின்ற NGO அமைப்பை உருவாக்கி அதனூடாகத் தான் இந்த மூன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கூடல் நிகழ்வினை நடத்தினாராம், இவர் கிறித்தவர் என்பதை மரியதாஸ் அழுத்தமாகப் அந்தக் காணொளியில் பதியவைக்கிறார் அவருடைய இந்துத்துவா ரசிகர்களுக்கு அது தானே முக்கியம், அதற்கு அடுத்து அவர் வைத்த வாதம் தான் மிக மிகச் சிறப்பு, என்ன விடயம் என்றால் பாரீசில் நடந்த மூன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கூடல் நிகழ்விவிற்கு பல அறிஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் திரு மால்கம் ஆதிசேஷன் என்பவர் தான் தலைமையில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தேறி இருக்கிறது அவர் யுனெசுகோ பிரதிநிதியாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டு 25 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார், இவர் அன்றைய யுனெசுகோ அமைப்பில் பெரிய பொறுப்பில் இருந்திருக்கிறார், திராவிடர் கருணாநிதி இரண்டு நொடிகள் வந்திருந்த காணொளியை வைத்து அந்த நிகழ்ச்சியே கருணாநிதி தலைமையில் நடந்து போலத் திமுகாவினர் பரப்புரை செய்து இருக்கின்றனர்.
நமக்குத் தான் திராவிடத் தில்லுமுல்லு நன்கு தெரியுமே “யுனெசுகோ பார்வையில் பெரியார்” என்று நமக்கு விபூதி அடித்தவர்கள் தானே இவர்கள் ஆனால் இந்துத்துவா மரியதாஸ் ஏன் இதைப் பேசுகிறார் என்பது தான் இங்கு முக்கியம், அவர் ஆதிசேஷன் அவர்களின் உரையைப் பற்றிக் கூறும் போது யுனெசுகோ பார்வையில் இரண்டாயிரம் ஆண்டுத் தமிழர் வரலாற்றை எப்படி அணுகுகிறார்கள் என்றால் சங்க இலக்கியம், ஆடல் மற்றும் நாடகம், ஆன்மிகம் என்று மூன்று விதமாகப் பார்க்கிறார்களாம், தமிழர் பண்பாடு இந்துமத ஆன்மிகத்தின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விளக்கினாராம். தமிழர் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நடராசர் சிலையை யுனெசுகோ மூலம் ஆன்மிக கலைப்பொருளாக அடையாளப் படுத்தப்பட்டது அவர் முயற்சியில் தான் என்றும் கூறுகிறார். நமது கேள்வி என்னவென்றால் எல்லாத் தமிழ்ச் சமயங்களையும் ஆக்கிரமித்துக் கட்டமைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் எப்படித் தமிழர் பண்பாட்டின் அடிப்படையாக இருக்க முடியும். தமிழர் சமயங்கள் பல தமிழ்நாட்டில் தோன்றி அறவழியைத் தமிழர் பண்பாட்டின் அடிநாதமாக மாற்றின என்பதே உண்மையிலும் பெரிய உண்மை. சைவம் மற்றும் வைணவம் சமயப் போர் புரிந்த தமிழர் சமயங்கள் நேற்று பெயரிடப்பட்ட இந்து மதத்தில் எப்படி அடைக்கப்பட்டது என்பது பெரிய கதை.
அடுத்துப் பெட்னாவை பற்றி அதிகம் பேசி இருக்கிறார், நமக்கும் பெட்னாவின் சிலச் செயற்பாடுகளில் குறை இருக்கிறது ஆனால் மரியதாஸ் ஏன் அதைப் பற்றி ஒப்பாரி வைக்கிறார் என்று பார்த்தல் அங்கும் இந்துத்துவம் தான் அதன் கொண்டையை மறைக்கமுடியாமல் வெளியே தெரிகிறது. மொத்தத்தில் தமிழர் அமைப்புகளை இந்துத்துவமும் திராவிடமும் பங்குப் போடுவதில் தான் மும்முரமாக இருக்கின்றன. ஆயிரமாயிரம் அப்பாவி அமெரிக்கா வாழ்த் தமிழர்கள் தங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும் தமிழ் மொழிகாகச் செலவிட்டுக் கட்டிய அமைப்புகளைக் கரையான்களைப் போல் தமிழர்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் ஆட்டிப்படைப்பது பெரும் சோகம்.
மரியதாஸின் திராவிட எதிர்ப்பு ஒரு போலி அலப்பறைத் தான், தமிழர்கள் நமக்குத் திராவிடமும் தீது, இந்துத்துவமும் தீது. இது வெறுப்பு அரசியல் இல்லை, தமிழர் தெளிவாக உணரவேண்டிய நிகழ்கால அரசியல்.