Site icon தமிழன் சங்கர்

தமிழனின் அறத்தொடு விளையாடிய நயவஞ்சகர்கள்!

Vaiko visits Karunanidhi, breaks ice with MK Stalin

தமிழனின் அறத்தொடு விளையாடிய நயவஞ்சகர்கள், உங்கள் தலைமுறைக்கு செய்த பாவம் தீராது!

தமிழன் என்கின்ற உணர்வு இருக்கின்றவன் கூட எழுத முடியாத உரை… படித்து முடியுங்கள் விடயம் புரியும்…

தமிழக மக்கள் நெஞ்சில் பற்றி எரிகிறது வேதனை நெருப்பு!

சாதி, மதம், அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டின் கோடானுகோடி மக்கள் பதறித் தவிக்கின்றனர்.

இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்களை சிங்கள இராணுவம் பூண்டோடு அழித்துவிடுமோ? நம் இனமே மாண்டு போகுமோ? என்ற அச்சமும், தாங்க இயலாத கவலையும், தமிழர் மனங்களை வாட்டி வதைக்கின்றது.

சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர இராணுவத் தாக்குதலுக்கும், தமிழர் இன அழிப்பு யுத்தத்துக்கும், முழு அளவில் இந்திய அரசு ஆயுதங்களைத் தந்தும், வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், தமிழர்கள் இனி எந்நாளும் மன்னிக்க முடியாத, பச்சைத்துரோகத்தைச் செய்து இருக்கிறது.

இந்தத் துரோகத்தின் முழுப்பங்காளிதான் கலைஞர் கருணாநிதி ஆவார்.

ஆனால், அவருக்கே உரிய அகடவிகட சாதுர்யத்தாலும், நஞ்சினை உள்ளே வைத்து, தேனினும் இனிய சொற்களை வர்ணனை ஆக்கி எழுதியும், பேசியும் வந்த சாமர்த்தியத்தாலும், அவர் தன்னைப்பற்றி மக்களிடம் உருவாக்கி வைத்து இருந்த நம்பிக்கையும், மதிப்பும், இப்பொழுது தரைமட்டம் ஆகிவிட்டது.

அத்தனையும் போலித்தனம், ஏமாற்று வேலை, கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை, மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

கலைஞர் கருணாநிதியின் முகத்திரை கிழிகிறது; பொய்வேடம் கலைகிறது.

பிப்ரவரி 3 ஆம் தேதி, தி.மு.க. செயற்குழுவில் அவர் தீட்டிய தீர்மானத்திலும், விடுதலைப்புலிகளைப் பற்றி விவரித்த வசை புராணமும், இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குலுக்கு ஆளாகி, குற்றுயிரும், குலையுயிருமாக மரண வளையத்துக்கு உள்ளே ஈழத்தமிழர்கள் வதைபடும் வேளையில், அவர்களின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார் என்பதை நிரூபித்துவிட்டது.

இந்தத் துரோகத்தை அவர் செய்யத்துணிந்ததும் எந்த நாளில்?

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த நாளில்!

புற்றுநோயின் வலியால் துடித்ததைவிட, கருணாநிதியின் துரோகத்தால் கல்லறைக்கு உள்ளே அண்ணா துடியாய்த் துடித்து இருப்பார்.

பதிந்து விட்டது

‘விடுதலைப்புலிகளை முற்றாக ஒழிப்போம்’ என்று, இரத்தக்காட்டேறியாகக் கொக்கரிக்கும் கொலைவெறியன் ராஜபக்சே கொண்டு இருக்கும் கொடிய குறிக்கோள்தான், இந்தியாவை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இயக்கும் தலைமைக்கும் இருக்கிறது என்பதுதான், உலகத் தமிழர்களின் மனதில் நூற்றுக்குநூறு பதிந்து உள்ள உண்மை ஆகும்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடம் வகுத்து இருக்கின்ற சதித்திட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்து உள்ளதால்தான், கலைஞர் கருணாநிதி, தானும் தன் குடும்பத்தினரும் அனுபவிக்கும் அதிகாரப் பதவிகளுக்கும், குவிக்கும் கோடானுகோடிக் கொள்ளைப் பணத்துக்கும் எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, காங்கிரசின் துரோகத்துக்கு முழுக்கவும் துணையாக இருக்கிறார்.

வேடனின் அழைப்பு

உலகெங்கும் உள்ள தமிழர்கள், இவரைச் சபித்துக் கொட்டுகின்றனர். இத்தனை ஆண்டுக் காலமும் தகிடுதத்தங்களால் தனக்குத்தானே அவர் சூடிக்கொண்ட தமிழ் இனத்தலைவர் என்ற பட்டம், மண்ணோடுமண்ணாகப் புதைந்ததுடன், பண்டாரக வன்னியனுக்குத் துரோகம் செய்த காக்கை வன்னியன், பிரபாகரனுக்குத் துரோகம் செய்த கருணா வரிசையில், ‘தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்த கருணாநிதி’ என்ற பழிச்சொல்லுக்கும், நிரந்தரமாக ஆளாகிவிட்டதால், எப்படியாவது இனியும் உலகத்தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்ற நப்பாசையில், ‘கட்சி வேறுபாடுகளை மறந்து, ஈழத்தமிழர்களைக் காக்க ஒன்றுபடுவோம்’ என்று, 2009 பிப்ரவரி 6 ஆம் தேதி ஒரு அறிக்கை தந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட மகானுபாவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை, வஞ்சக மனம் கொண்டவர்களைக் குறித்துச் சரியாகச் சொன்னார்.
தவக்கோலத்தில் மறைந்துகொண்டு, தீயசெயல் புரிவது, புதருக்கு உள்ளே மறைந்துகொண்டு, வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது ஆகும்.

தவமறைந்து அல்லவை செய்தல்; புதல்மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று

தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துவிட்டு, ‘எல்லோரும் வாருங்கள், தமிழர்களைக் காப்போம்’ என்று அவர் அழைப்பு விடுத்து இருப்பது, புதருக்கு உள்ளே மறைந்துகொண்டு, வேடன் பறவையைக் கொல்ல வலைவீசுவதைப் போன்றதுதானே?

உண்மைகளைப் பதிவு செய்கிறேன்

ஈழத்தமிழர் பிரச்சினையில், கலைஞர் கருணாநிதி நடித்த கபட நாடகங்களையும், இழைத்த துரோகங்களையும், தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை என்று கருதுவதால், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இன்றி, எதையும் மிகைப்படுத்தாமல், புனைந்து உரைக்காமல், உண்மைகளை மட்டும், சத்திய வார்த்தைகளாக இங்கே பதிவு செய்கிறேன்.

என் கூர்மையான குற்றச்சாட்டுகள் உண்மைதான்; உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்பதற்குச் சான்றாக, கடந்த பத்து நாள்களுக்குள் நடைபெற்று உள்ள, தமிழர் மனங்களை வாட்டி வதைத்த இரண்டு நிகழ்வுகளை, சாட்சியங்களாக இங்கே வைக்கிறேன்.

முத்துகுமாரின் உயிர்த்தியாகம்

தீயின் நாக்குகளுக்குத் தன் உடலைத் தீனியாக்கி, கரிக்கட்டையாகக் கருகிப்போனான் முத்துக்குமார் எனும் வீரத்தமிழ் இளைஞன்.

தமிழக வரலாற்றில், 1964 முதல் பல்வேறு காலகட்டங்களில், இலட்சியங்களுக்காகப் பலர் தீக்குளித்து உள்ளனர். அவை அனைத்துமே தியாக மரணங்கள்தாம்.

ஆனால், மரணப்புதைகுழியில் சிக்கித் தவிக்கின்ற ஈழத்தமிழ் இனத்தைக் காக்க, நெருப்புக்குத் தன் உயிரைத் தாரை வார்த்த முத்துக்குமாரின் மரணம், கோடானுகோடித் தமிழர்களின் உள்ளங்களைப் பூகம்பமாக உலுக்கிவிட்டது;
உணர்வுகளின் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது.

சென்னையில், மத்திய அரசின் அலுவலகங்கள் அமைந்து உள்ள சாஸ்திரி பவன் வளாகத்துக்கு உள்ளே, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, தன் மேனி முழுக்கப் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, நெருப்புக்குச்சியைக் கிழித்துப்போட்ட முத்துக்குமார், செந்தணலில் வெந்து கருகிப்போனான். உயிர் ஊசலாடிய நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த அவனது உயிர்ப்பறவை, அந்த உடல்கூட்டில் இருந்து பறந்து விட்டது.

போலித் தீர்மானம்

ஜனவரி 29 ஆம் நாள் நண்பகலில் அவன் இறந்த நேரத்தில் இருந்து, 31 ஆம் தேதி நள்ளிரவில் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அத்தங்கத் தமிழ் மகனின் சடலம் சிதையில் எரிந்து சாம்பலாகும்வரையில், கலைஞர் கருணாநிதி ஒரு வார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

கொளத்துhரில் இருந்து மூலக்கொத்தளம் வரையிலும், இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாகத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன், கண்கலங்க மணிக்கணக்கில் காத்து இருந்து, முத்துக்குமாரின் உயிரற்ற மேனியைத் தரிசித்ததும், தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துக்கொண்டு வரிசையாக நின்றதையும், தமிழகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் பூசனைக்கு உரிய சுடராக முத்துக்குமார் எழுந்ததையும் அறிந்தபின், ஆறு நாள்கள் கழித்து, கலைஞர் கருணாநிதி தன் கட்சியின் செயற்குழுவில், ஒப்புக்கு ஒரு இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

உண்மையான ஈடுபாட்டுடன் அந்த இரங்கல் தீர்மானத்தை அவர் எழுதாததால்தான், ‘தூத்துக்குடி மாவட்டம் கொலுவைநல்லூரைச் சேர்ந்தவர்’ என்று எழுதுவதற்குப்பதில், ‘தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார்’ என்று எழுதினார்.

மேலும், ‘முத்துக்குமார் தீக்குளித்த நிகழ்ச்சிக்கு இரங்கல்’ என்று அவரது தமிழ் தடுமாறியதில் இருந்தே, அது ஒரு போலித்தனமான தீர்மானம் என்பது, நன்றாகப் புலன் ஆகும்.

பள்ளபட்டி ரவியின் வாக்குமூலம்

தியாகத் தமிழ்மகன் முத்துக்குமார் தீக்குளித்த செய்தியைக் கேட்டு அறிந்த மாத்திரத்தில் மனம் உடைந்துபோன, திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி, ஜனவரி 30 ஆம் நாள் அன்று மாலை ஆறரை மணி அளவில், தன்மீது மண்ணென்ணையை ஊற்றி, நெருப்பு வைத்துக்கொண்டு, ‘இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்’ என்று கூச்சல் இட்டுத் தெருவில் கீழே விழுந்தபின், அவரது மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும், உறவினர்களிடம் 600 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு, நிலக்கோட்டையில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு உரிய சிகிச்சைக்கு வழி இல்லாமல், மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.

பள்ளபட்டி ரவி மரண வாக்குமூலமாகச் சொன்னதை, அம்மையநாயக்கனூர் காவல்துறை சார் ஆய்வாளர் சுமதி அவர்கள், முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்து உள்ளார். அதில், ரவி பதிவு செய்த வாக்குமூலம் இதுதான்:
‘நான் இலங்கைத் தமிழர்களைக் காக்கத் தீக்குளித்தேன். வீட்டில் இருந்த ஐந்து லிட்டர் மண்ணெண்ணையை, தலையிலும் உடம்பிலும் ஊற்றிக்கொண்டு, தெருவுக்குப் போய் உடம்பில் நெருப்பு வைத்தேன். என் மனைவி, தண்ணீர் எடுப்பதற்காகக் கிணற்றுக்குப் போய் இருந்தாள். பிள்ளைகள் வீட்டுக்கு உள்ளே விளையாடிக்கொண்டு இருந்தார்கள். நெருப்பில் எனது துணிகள் கருகிப்போனதால், அம்மணமாகக் கிடக்கக்கூடாது என்பதற்காக, அங்கே தொட்டியில் இருந்த ஈரச்சாக்கை எடுத்துக் கட்டிக் கொண்டேன்’ என்று கூறி உள்ளார்.

முதல் தகவல் அறிக்கையில் எழுதியதை வாசித்துக் காட்டி, ரவியின் இடதுகை பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து உள்ளனர். அவரது மனைவி சித்ரா, சாட்சிக் கையெழுத்துப் போட்டு உள்ளார்.

மரணத்தைக் கொச்சைப்படுத்திய கருணாநிதி

உண்மை இவ்வாறு இருக்க, தமிழக அரசின் காவல்துறை ஆணையர் இராஜேந்திரன், மறுநாள் விடுத்த அறிக்கையில், ‘கணவன் மனைவி சண்டையால் ரவி தீக்குளித்ததாகச் சொல்லிவிட்டு, அதற்கு முரணாக, ‘ஸ்டவ் வெடித்ததால் தன் உடம்பில் தீக்காயம் ஏற்பட்டதாக ரவி கூறியதாகவும், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்தார் என்று யார் கூறினாலும், அதனைப் பிரச்சினையாக ஆக்க முயன்றாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஒரு மிரட்டல் அறிக்கை தந்தார்.

இதில் கொடுமை என்னவென்றால், ரவியின் குடிசை வீட்டில், ஸ்டவ்வும் கிடையாது, சிலிண்டரும் கிடையாது. கணவன் மனைவி சண்டையும் கிடையாது.

ஈவு,இரக்கம் இல்லையா?

ஈழத்தமிழருக்காக ஒருவர் தீக்குளித்து, உடம்பெல்லாம் நெருப்பில் வெந்து, துடிதுடித்துச் சாகக் கிடக்கையில், அதை இழிவுபடுத்தி, அயோக்கியத்தனமாகப் பொய் சொல்வதற்கு, காவல்துறை அதிகாரி, தாமாக ஒருபோதும் துணிந்து இருக்க மாட்டார்.

முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உத்தரவு இல்லாமல், காவல்துறை அதிகாரி இவ்வாறு அறிக்கை கொடுத்து இருக்கவே மாட்டார்.

பள்ளபட்டி ரவியின் தீக்குளிப்பு தியாக மரணத்துக்கும், இன்றுவரையிலும் கலைஞர் கருணாநிதி இரங்கல் தெரிவிக்கவில்லை.

அதுமட்டும் அல்ல, அந்தத் தியாக வீரனின் உடல், மதுரை தத்தனேரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டபின்னரும், ‘பள்ளபட்டி ரவி ஸ்டவ் வெடித்த தீக்காயத்தால்தான் இறந்தார்’ என்று, காவல்துறை மூலம், ஏடுகளுக்குச் செய்தி கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.

ஈவு இரக்கம் அற்ற கலைஞர் கருணாநிதிக்குத்தான் இப்படிப் புத்தி வேலை செய்யும்.

இலங்கைத் தமிழர்களைக் காக்கவும், இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தவும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், தமிழகமெங்கும், பிப்ரவரி 4 ஆம் நாள், பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

உடனே, கலைஞர் கருணாநிதி, ‘பொது வேலை நிறுத்தம் கூடாது; உச்சநீதிமன்றம் இதற்குத் தடை விதித்து இருக்கிறது’ என்று, தமிழக அரசின் பெயரால் அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், பிப்ரவரி 3 ஆம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு, ‘இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதியும் மற்றும் இரு நீதிபதிகளும் அமர்ந்த ஆயத்தில், தமிழக பந்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று, காங்கிரÞ கட்சி சார்பில் தொடுக்கப்பட்ட மனுவின்மீது, நீதிபதிகள் கருத்துக்கூறுகையில், ‘மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது என்றும்; தமிழ்நாடு பந்துக்குத் தடை விதிக்க முடியாது என்றும் தந்த தீர்ப்பு, முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கன்னத்தில் விழுந்த அறை ஆகும்.

தலைவர்களுக்கு மிரட்டல்

இதற்குப்பிறகும், அன்று இரவு பதினோரு மணிக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு, ‘உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பந்த் நடத்துவது சட்டவிரோதம் என்று எச்சரிப்பதாக’, ஒரு மிரட்டல் கடிதத்தைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பெயரில், அரசு ஊழியர் மூலம் அனுப்பவும் செய்தார் கருணாநிதி.

அதோடு விட்டாரா?

‘பந்தில் ஈடுபடுவோர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாயும்’ என்று காவல்துறை தலைமை ஆணையர் மூலம், மிரட்டவும் ஏற்பாடு செய்தார். எப்படியாவது பந்தை முறியடிக்க வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் நோக்கம். ஆனால், அவரது எண்ணத்தில் மண் விழுந்தது.

அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களையும் மீறி, பொது வேலைநிறுத்தத்தைத் தமிழக மக்கள் தாங்களாகவே முன்வந்து வெற்றிகரமாக நடத்தினார்கள். ஆனால், ‘வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது’ என்றும், ‘படுதோல்வி’ என்றும், தலைமைச் செயலாளரைக் கொண்டு, ஒரு விஷமத்தனமான அறிக்கையும் வெளியிடச் செய்தார், கலைஞர் கருணாநிதி.
சட்டசபையில் ‘தமிழ் ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்று வாய்ப்பந்தல் போட்டுவிட்டு, பிப்ரவரி 3 ஆம் தேதி தீர்மானத்தில், ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வு ஏற்பட இந்திய அரசு ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்’ என்றும், ‘அதற்கு சிங்கள அரசு ஒத்துழைக்க வேண்டும்’ என்றும் காவடி தூக்கி உள்ளார்.

இது, இல்லாத ஊருக்கு, போகாத வழிகாட்டும் மோசடி வேலை!

புலிகள் என்றாலே புளிக்கிறதாம்!

‘விடுதலைப் புலிகளை முற்றாகக் கொன்று ஒழிப்போம்’ என்று இராஜபக்சே கொக்கரிக்கும் இந்தநேரத்தில், விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சித்து, ‘இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள்’ என்றும், ‘முகுந்தன் கருணா போன்றவர்களெல்லாம் பிரபாகரனை விட்டுப் பிரிந்துபோய் விட்டார்கள்’ என்றும், ‘பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப் போய்விட்டது’ என்றும், வசை பாடி உள்ளார்.

காரணம் என்ன?

கருணாநிதி குறிப்பிட்ட சம்பவங்களெல்லாம் நடப்பதற்கு முன்னால், எண்பதுகளிலேயே விடுதலைப்புலிகளையும், பிரபகாரனையும் கலைஞர் கருணாநிதி வெறுத்தார் என்பதுதான் உண்மை ஆகும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை மானசீகமாக நேசித்தார். ‘பிரபாகரன் போற்றுதலுக்கு உரிய மாவீரன்; படை அணிகளை இயக்கும் ஈடற்ற ஓர் படைத்தலைவர்’ என்ற பிரமிப்புடன், எம்.ஜி.ஆர். புலிகளுக்கு எவராலும் செய்ய முடியாத உதவிகளைச் செய்தார்.

தொடக்கத்தில் புலிகளுக்கு நிதி உதவியும், இந்தியாவில் இராணுவப் பயிற்சிகளும் அளித்த இந்திரா காந்தி அரசும், அதன் பின்னர் ராஜீவ் காந்தியும் அந்த உதவிகளை ஒரு கட்டத்தில் நிறுத்தியபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், அரசுப்பணம் நான்கு கோடி ரூபாயைப் பகிரங்கமாகப் புலிகளுக்குக் கொடுத்தார். மேலும், விளம்பரப்படுத்தாமல், விடுதலைப்புலிகளுக்கு அவர் தந்து இருக்கின்ற நிதி ஏராளம், ஏராளம்!

அதனால்தான், ஈழத்தமிழர்கள், பொன்மனச் செம்மலைத் தங்கள் மனங்களில் கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள்.

விடுதலைப்புலிகளைத் தொடக்கத்தில் இருந்தே கலைஞர் கருணாநிதி வெறுத்தார் என்பதை நான் நன்றாக அறிவேன். 1983 ஆம் ஆண்டு, இலங்கையில் தமிழ் இனப் படுகொலை நடைபெற்றபோது, வெலிக்கடைச் சிறையில், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 57 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்; தமிழகமே கொந்தளித்தது.

1983 ஆகஸ்ட் 10 ஆம் தேதி, ஈழத்தமிழர்களுக்காகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கலைஞர் கருணாநிதி கூறுகிறார்.

உண்மை என்ன?

அதற்கு முன்பு நடைபெற்ற, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதால்,சட்டசபையில் தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் சமமான நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரசுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டதால் நொந்துபோன கலைஞர் கருணாநிதி, ஈழத்தமிழர் பிரச்சினையைச் சாக்குக் காட்டி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஏளனம்

அப்போது, இராமநாதபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில், நான் உரை ஆற்றும்போது, ‘பிரபாகரா, தமிழ்த்தாயின் வீரப்புதல்வனே இங்கே வா! தாயின் மடியாம் தமிழகத்துக்கு வா! உன் காயங்களை, எங்கள் கண்ணீரால் கழுவுகிறோம்; உன் விழுப்புண்களைப் பாசத்தால் முத்தம் இடுவோம்’ என்று நான் உரை ஆற்றியதைக் கொச்சைப்படுத்தி, ‘என்ன காதலன், காதலியை அழைப்பதைப் போல் அழைத்தீர்களே?’ என்று ஏளனம் செய்தார்.

இந்திய நாடாளுமன்றத்துக்கு எதிரே, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருப்போம்’ என்று மாநாட்டில் அறிவித்ததற்குப் பின்னர், அதற்காகத் தலைநகரில் நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின்பு, கடைசி நேரத்தில் ‘உண்ணாவிரதம் இருக்கக்கூடாது’ என்றார்.

‘அறிவித்துவிட்டு இருக்காவிட்டால், அதைவிட மானக்கேடு வேறொன்றும் இல்லை’ என்று கூறிய நான், கட்சி நடவடிக்கை எடுத்தாலும், அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை; உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று கடுமையாகப் போராடி, பின்னர் உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.

ஏமாற்று ஒப்பந்தம்

1987 ஏப்ரல் 16 ஆம் தேதி, ஸ்வீடன் நாட்டின் தேசிய வானொலி, ‘போபர்ஸ் பீரங்கி பேரத்தில், ஊழல் கமிஷன் பணம், இந்திய அரசின் அதிகாரத் தலைமைப் பீடத்துக்குக் கைமாறியதாகக் குற்றச்சாட்டு’ தெரிவித்தது. இந்திய நாடாளுமன்றத்திலும், அரசியல் அரங்கிலும், அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

அந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை அரசோடு ஒரு ஒப்பந்தம் செய்தார். அதற்காக, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கையில் இருந்து ஏமாற்றி அழைத்து வந்து, பின்னர் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல், தாமே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். இதனை அடுத்து, இலங்கைக்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது.

எதற்காக இந்தியாவை எதிர்த்தார்கள்?

ஆனால், ஒப்பந்தத்துக்கு எதிராகவே சிங்கள அரசு செயல்பட்டது. எனவே, ‘தங்களின் தாயக மண்ணில், அரசு அதிகாரத்துடன் அமைக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, திலீபன் 12 நாள்கள் துளிநீரும் பருகாமல் இருந்து உயிர்நீத்தார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 புலிப்படைத் தளபதிகளை, இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி பாதுகாக்க இந்திய இராணுவத் தளபதிகள் விரும்பியபோதும், ராஜீவ்காந்தி அரசு, இந்தியத் துhதர் தீட்சித்தின் துர்போதனையால், இந்திய இராணுவம் வைத்து இருந்த கட்டுக்காவலை விலக்கிக்கொண்டு, சிங்கள இராணுவத்திடம் அவர்களை ஒப்படைத்ததால், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட புலிப்படையின் 12 முக்கியத் தளபதிகள் நஞ்சுக் குப்பிகளைக் கடித்து இறந்தனர்.

இந்திய இராணுவம், புலிகளின் தொலைக்காட்சி நிலையத்தையும், அவர்களுக்கு ஆதரவான செய்தித்தாள் அலுவலகங்களையும், டைனமைட் குண்டுகளை வைத்துத் தகர்த்தது. 1987 அக்டோபர் 10 ஆம் நாள் முதல், இந்திய இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி, விடுதலைப்புலிகளைக் கொன்று குவித்தது. முற்றாக அழிக்க முற்பட்டது. இந்தியாவின் ஒரு இலட்சம் சிப்பாய்களின் படையை எதிர்த்து, வீரச்சமர் புரிந்த விடுதலைப்புலிகள், வன்னிக் காடுகளுக்கு உள்ளே சென்றார்கள்.

புலிகள் சரண் அடையட்டும்

1989 ஆம் ஆண்டு, சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்புவரை, ‘இலங்கையில் இந்திய அரசு போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டும்’ என்று, பொதுக்கூட்டங்களில் கலைஞர் கருணாநிதி பேசி வந்தார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சரான நான்கு நாள்களுக்குள், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளான பேபி சுப்பிரமணியம், குண்டப்பா எனும் ரகு ஆகியோருடன் கலைஞர் கருணாநிதியை நான் சந்தித்தேன். அப்போது திடீர் பல்டியடித்த கருணாநிதி, ‘விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைந்துவிட்டால், போரை நிறுத்துமாறு இந்திய அரசை நாம் கேட்கலாம்’ என்றார். எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏன் சென்றேன்?

அப்போது நான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கசப்பு உணர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்று எண்ணினேன். போரின் நிலைமையை நேரில் அறிந்துகொள்ளவும், பிரபாகரன் அவர்களைச் சந்தித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர என்ன செய்யலாம்? என்று ஆலோசிக்கவும், நான் இலங்கையின் வன்னிக்காடுகளுக்குப் போகத் தீர்மானித்தேன். கடல் பயணத்தின்போது, இந்திய-சிங்களக் கடற்படைகளின் தாக்குதலால், உயிருக்கு ஆபத்து நேரும் என்று கருதி, பிரபாகரன் அவர்கள், என்னை வர வேண்டாம் என்றார். ஆனால், நான் அவரை வற்புறுத்தி, பிப்ரவரி 6 ஆம் தேதி நள்ளிரவு இலங்கைக்குப் படகில் புறப்பட்டேன்.

7 ஆம் தேதி காலையில் கலைஞர் கருணாநிதியின் கைகளில் கிடைக்கும்வகையில் கடிதம் எழுதி, என் உயிர் நண்பர் குட்டி(எ) சண்முகசிதம்பரம் அவர்களின் மூலமாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தேன். அதில், ’வன்னிக்காட்டுக்குச் செல்லுகிறேன்; கழகத்துக்குக் கடுகு அளவு கேடு நேரவும் இடம் தர மாட்டேன். என்னை நானே பலியிட்டுக் கொள்வேன்’ என்று எழுதி இருந்தேன்.

பிப்ரவரி 20 ஆம் தேதி, இந்திய இராணுவத்தின் இலங்கைத் தளபதி பொறுப்பில் இருந்த கல்கத், முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்தபோது, நான் இலங்கைக்குச் சென்று இருப்பதாக அவரிடம் கருணாநிதி சொல்லிவிட்டார். அதனால்தான், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ‘இலங்கைக்கு வை.கோபால்சாமி சென்று இருப்பதற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறி இருந்தார்.

இந்த அறிக்கையை அறிந்து, நான் மிகுந்த மனவேதனைக்கு ஆளானேன். நான் இலங்கைக் கடற்கரையில் இறங்கிச் சென்ற தடங்களை, இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவினர் ஆராய்ந்து வந்த நிலையில், நான்தான் அங்கு சென்று உள்ளேன் என்று தி.மு.க. அறிவித்ததால், காடுகளில் பிரபாகரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, அது வாய்ப்பாக அமையும் என்று கருதி, வேதனையில் தவித்தேன்.

என்னைத் தமிழ்நாட்டுக்குப் பத்திரமாக அனுப்புவதற்காகப் பிரபாகரன் அவர்கள் செய்த ஏற்பாடுகளை நினைக்கும்போதே, என் கண்கள் நனைகின்றன.

திரும்பி வருகையில் சாலைத்தொடுவாய் பகுதியில், 800க்கும் மேற்பட்ட இந்திய இந்திய இராணுவத்தினரால், நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டோம். அந்தத் தாக்குதலில், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்ற சரத் என்ற பீட்டர் கென்னடி, இந்திய இராணுவத்தின் எந்திரத் துப்பாக்கிகளால், சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு மடிந்தார். நான் மயிரிழையில் உயிர் தப்பினேன்.

ஆனால், நான் கொல்லப்பட்டு விட்டதாக, இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. ‘நான் உயிரோடு இல்லை’ என்றும், ‘இலங்கை இராணுவத்தின் சிறையில் அடைபட்டு இருப்பதாகவும்’ தமிழகத்திலும் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. எனவே, நான் இறந்துவிட்டதாகவே கருதி, நான் எழுதிய கடிதத்தைக் கருணாநிதி பத்திரிகைகளுக்குத் தந்தார். ‘தம்பியை நினைத்துத் தவிக்கிறேன்’ என்று உருக்கத்தையும் காட்டினார்.

ஆனால், மார்ச் 5 ஆம் தேதி நான் தாயகம் வந்து சேர்ந்தேன். கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் கருணாநிதியை நான் சந்தித்தபோது, நான் உயிரோடு திரும்பி வந்ததற்காக மகிழ்ச்சி தெரிவிப்பதற்குப் பதிலாக, என்மீது வெறுப்பைக் கக்கினார். நான் விளம்பரத்துக்காக இலங்கைக்குப் போனதாகக் கொச்சைப்படுத்தி, பத்திரிகைகளுக்குச் செய்தியும் தந்தார்.

1990 ஆம் ஆண்டில், இலங்கையில் சிங்கள இராணுவத் தாக்குதலில் காயமுற்ற விடுதலைப்புலிகள் 37 பேர், கலிங்கப்பட்டியில் என்னுடைய வீட்டில் ஓராண்டுக்காலம் இருந்தனர். அவர்களுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
நலம்பெற்ற 20 பேர், ஈழத்துக்குத் திரும்பிச் சென்றனர். மீதம் இருந்த 17 பேர் திருநெல்வேலியில் என் தம்பி ரவிச்சந்திரனின் வாடகை வீட்டில் தங்கிச் சிகிச்சை பெற்றனர். அவர்களுள் இரண்டு கால்களும் இல்லாதவர்கள், இரண்டு கைகளும், இரண்டு கண்களும் இல்லாதவர்களும் இருந்தனர். காயமுற்றவர்கள் என் தம்பி வீட்டில் இருப்பது, கலைஞர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்.

1991 நவம்பர் 13 ஆம் தேதி, என் தம்பி வீட்டில் இருந்த 17 பேரும் கைது செய்யப்பட்டனர். என் தம்பியும் கைது செய்யப்பட்டு, தடா கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டுக்காலம் சிறையில் இருந்தார்.

என் தம்பி வீட்டில் இருந்த காயமுற்றவர்களின் ,இரண்டு கால்களும் இல்லாதவர்கள், இரண்டு கைகளும், இரண்டு கண்களும் இல்லாதவர்கள் படங்களை ,வெளியிட்டதற்காக தினகரன் நிறுவனர் கே.பி.கே அவர்களை அழைத்து கடுமையாக கண்டித்தார். என் தம்பி மீது அனுதாபம் வந்துவிடக்கூடாது என்பதற்காக.

என் தம்பி கைதானவுடன், ‘உங்களையும் கைது செய்வார்கள்’ என்று கலைஞர் கருணாநிதி என்னிடம் சொன்னார். ‘நான் கைது செய்யப்பட்டாலும், விடுதலைப்புலிகள் என் வீட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியும் என்று நான் சொல்லமாட்டேன்’ என்றேன்.

கருணாநிதியின் கொலைப்பழி

1991 நவம்பர் 26 ஆம் நாள் திடீரென்று செயற்குழுவைக் கூட்டினார். அதற்கு முதல் நாள் இரவில், ‘தி.மு.கழகத்தில் இருந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி எழுதித் தருமாறு கட்சி முன்னணியினர் மூலம் என்னிடம் வலியுறுத்தினார். நான் மறுத்தேன். செயற்குழுவில் என் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். நான் விளக்கம் அளித்தேன். செயற்குழு உறுப்பினர்களுள் 99 விழுக்காட்டினர் என் பக்கம் அனுதாபமாக இருப்பதை உணர்ந்து, அன்றைக்கு என்னைக் கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுக்கவில்லை.

1993 ஆம் ஆண்டு மே மாதவாக்கில், கலைஞர் கருணாநிதி வகுத்துக்கொண்டு இருந்த சதித்திட்டத்தை நான் தெரிந்துகொண்டேன். ‘விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி நான் கருணாநிதியைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருப்பதாக என் மீது பழிசுமத்தி, கட்சியைவிட்டு வெளியேற்ற அவர் திட்டமிட்டு இருப்பதை, நான் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் அதை நம்பவில்லை.

விடுதலைப்புலிகள் எனக்காகக் கலைஞர் கருணாநிதியைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருப்பதாக, உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை, மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியது.

அப்போதைய அண்ணா தி.மு.க. அரசு, இந்தத் தகவலைக் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பி, அவருக்குப் பாதுகாப்புத் தருகிறோம் என்று சொன்னபோது அதை மறுக்காமல், ‘என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, ஒரு தலைமைக்காவலரும், மூன்று காவலர்களையும் அண்ணா தி.மு.க. அரசிடம் இருந்து தமது பாதுகாப்புக்காகப் பெற்றுக்கொண்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்த்தொண்டர்கள் ஐந்து பேர், ‘வைகோவைக் கட்சியைவிட்டு நீக்குவது அநீதி’ என்று கண்டித்துத் தீக்குளித்து மடிந்தனர்.

புலிகளால் ஆபத்தாம்

2006 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று, கலைஞரின் குடும்பத்தினரால் ஏவப்பட்ட குண்டர்கள், என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் நான் புகார் கொடுத்தபின், ஏட்டிக்குப் போட்டியாக, தி.மு.க. தரப்பில், கலைஞர் கருணாநிதியின் வஞ்சக மூளையில் உதித்த யோசனையில் தயாரிக்கப்பட்ட புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில், ‘நான் விடுதலைப்புலிகளோடு தொடர்பு கொண்டவன் என்றும், என்னால் கலைஞரின் குடும்பத்துக்கு ஆபத்து இருக்கிறது என்றும், என் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்’ என்றும் பிரதமரிடம் புகார் கொடுக்கச் சொன்னார்.

பின்னர், தமிழகச் சட்டமன்றத்தில் ஒரு அணுகுண்டுப் பொய்யைத் தூக்கிப் போட்டார். 1989 ஆம் ஆண்டு, பிரதமர் ராஜீவ் காந்தி, கலைஞர் கருணாநிதியை வன்னிக்காட்டுக்குச் சென்று பிரபாகரனைச் சந்திக்கச் சொன்னதாகவும், அதைத் தெரிந்துகொண்டு நான் வன்னிக்குச் சென்று, காரியத்தைக் கெடுத்துவிட்டதாகவும், சட்டசபையில் சொன்னார்.
இப்படி ஒரு குற்றச்சாட்டை, 1993 இல் இருந்து, 2006 வரையிலும் அவர் சொன்னதே இல்லை……

இதில் உண்மை என்னவென்றால், நான் ஈழத்துக்குப் போகும் முன்பு எழுதிய கடிதம், அவரது கைகளுக்குப் போய்ச் சேர்ந்து, இரண்டு நாள்கள் கழித்துத்தான் அவர் தில்லிக்குச் சென்று, பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார்.

1998 ஆம் ஆண்டு, அண்ணா தி.மு.க. கூட்டணியில், நான் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டேன். தமிழகமெங்கும் 18 நாள்கள் பிரச்சாரம் செய்த கலைஞர் கருணாநிதி, அதில் ஆறு நாள்கள் என்னை எதிர்த்துத்தான் சிவகாசி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது என்னவென்றால், ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக…. பொய் சாட்சி சொன்னவரை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பாதீர்கள்’ என்றார்.

1991 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், முரசொலி மாறன் பேசுகையில், ‘இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, பிரபாகரனைக் கைது செய்து கொண்டுவந்து, தெரு விளக்குக் கம்பத்தில் தூக்கில் போட வேண்டும்’ என்று பேசினார். முரசொலியில் இதனை எட்டுக்காலச் செய்தியாக வெளியிட்டார் கருணாநிதி.

தினகரன் பத்திரிகை, சென்னை தவிர்த்த மற்றப் பதிப்புகளில் இந்தப் பேச்சைப் போடவில்லை என்பதற்காக, அப்பத்திரிகை நிறுவனர் கே.பி.கந்தசாமி அவர்களிடம் கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.

2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன், குறைந்தபட்ச செயல்திட்டத்தில், ‘ஈழத்தமிழர்கள் பிரச்சினையில், அம்மக்கள் உரிமையோடு வாழ்வதற்கு, சிங்கள அரசும், புலிகளும் அரசியல் தீர்வு காண வேண்டும்’ என்று நான் எழுதிக்கொடுத்த கோரிக்கையைத்தான், அரசின் செயல்திட்டத்தில் சேர்த்தார்கள்.

பசையுள்ள இலாகா வேண்டுமாம்

இதுபற்றிக் கலைஞர் கருணாநிதி கடுகு அளவும் கவலைப்படவில்லை. மாறாக, ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன் கணக்கில் காட்டி, ஏழு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பிட்ட ஒரு இலாகா கொடுக்கவில்லை என்றால், தி.மு.க. அமைச்சர்கள் பொறுப்பு ஏற்க மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே மிரட்டினார். அவரது சுயநலமே மேலோங்கி நின்றது.

2004 நவம்பர் மாதம், இந்தியா-இலங்கை இராணுவ ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது என்பதை அறிந்து, நான் ஜூலை மாதமே பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து, ‘இந்த ஒப்பந்தம் கூடாது’ என்று கடுமையாகப் போராடினேன். நவம்பரில் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்று தெரிந்தவுடன், பிரதமரையும், காங்கிரஸ் அமைச்சர்களையும், பொது உடமை இயக்கத் தலைவர்களையும் சந்தித்து, இராணுவ ஒப்பந்தத்தைத் தடுக்கக் கடுமையாகப் போராடினேன்.

அடுக்கடுக்கான துரோகங்கள

ஆதரித்த கருணாநிதி

இந்த உண்மையெல்லாம் தெரிந்தபோதும், கலைஞர் கருணாநிதி வாயைத் திறக்கவே இல்லை.

‘இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் கூடாது’ என்று இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு ஏன் சொல்லவில்லை?

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா ரடார்களைக் கொடுத்தது மன்னிக்க முடியாத துரோகம் அல்லவா? அதற்கு, தி.மு.க. உடந்தைதானே?

தமிழர்கள் மீது குண்டுகளை வீச, இலங்கை இராணுவம் பயன்படுத்தி வந்த பலாலி விமானதளத்தை, இந்திய அரசு தன் செலவில் பழுதுபார்த்துக் கொடுத்ததைக் கண்டிக்கவில்லையே?

இந்தியா-இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டதை முதல் அமைச்சர் ஏன் எதிர்க்கவில்லை? ஈழத்தில் விடுதலைப்புலிகளின் கடற்படைப் பிரிவை அழிக்க இந்தியா போட்ட சதித்திட்டம்தானே அது?
இலங்கைக்கு இந்திய அரசு வட்டி இல்லாக் கடனாக ரூ 1000 கோடியைத் தந்ததன் மூலம், பாகிஸ்தான், சீனாவில் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கிக்கொள்ள உதவிய துரோகம்தானே?

அதை ஏன் கலைஞர் கருணாநிதி கண்டிக்கவில்லை?

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியா மூன்று ஆண்டுகளாகத் தொடர்நது பயிற்சி கொடுப்பது, ஈழத்தமிழர்களை அழிப்பதற்குக் கொடுக்கும் பயிற்சிதானே? இந்தத் துரோகத்துக்கும் கலைஞர் கருணாநிதி உடந்தைதானே?

இதே காலகட்டத்தில்……நாம் நடத்திய போராட்டங்கள் ஏராளம் ….பிரதமருக்கு 24 கடிதங்கள் அனுப்பியுள்ளேன் .

இந்தியாவின் மனிதாபிமானம்…..?

இந்திய ரேடார்களின் உதவியோடு, இலங்கை விமானப்படை செஞ்சோலையில் குண்டுவீசி 61 சிறுமிகளைத் துடிக்கத்துடிக்கக் கொன்றதற்கு, ஒப்புக்குக்கூட இந்தியா கண்டனம் தெரிவிக்காதது, மனிதாபிமானமே இல்லாத ஈவு இரக்கம் அற்ற இந்திய அரசுதானே? தி.மு.க.வும் அங்கம் வகிக்கும் அரசுதானே அது?

இலங்கையில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் சிங்கள இராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, இந்திய அரசு வேடிக்கைதானே பார்த்தது?

தமிழர் பகுதியில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட 17 தமிழ் இளைஞர்களை, இலங்கை இராணுவம் கோரமாகச் சுட்டுக் கொன்றதை, இந்திய அரசு ஏன் கண்டிக்கவில்லை?

ஏ-9 நெடுஞ்சாலையை அடைத்து, ஈழத்தமிழர்களைச் சிங்கள அரசு பட்டினிபோட்டு வதைத்தபோதும், இந்திய அரசு ஏன் கேட்கவில்லை?

ஐ.நா. மன்றத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கையோடு சேர்த்து இந்தியா எதிர்த்ததும் துரோகம்தானே?

ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் திறக்க சிங்கள அரசு அனுமதி மறுப்பதை, இந்தியா கண்டிக்காததிலிருந்தே, இந்திய அரசின் வஞ்சகம் தெளிவாகத் தெரியும்.

‘இலங்கையில் தமிழ்ப் போராளிக ஒட்டுமொத்தமாகக் கொன்று குவிப்பேன்’ என்று கொக்கரிக்கும் சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு, இந்திய அரசு இராஜ மரியாதை கொடுத்ததால்தான் அவன் சொல்கிறான்: இந்தியா எங்களுக்கு எல்லாவிதத்திலும் இராணுவ உதவிகள் செய்கிறது. இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே உரிய நாடு’ என்கிறான்.

கங்காணிக் கடற்படை

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குவதை, சுட்டுக்கொல்வதைத் தடுக்க இந்திய அரசு ஏன் முயலவில்லை? என்றாவது ஒருதடவையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா? மாறாக, இந்தியக் கடற்படை கங்காணி வேலைதானே செய்கிறது?

எல்லாவற்றுக்கும் மேலாக, 2008 செப்டெம்பர் 9 ஆம் தேதி, நள்ளிரவில் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில், இரண்டு இந்திய இராணுவப் பொறியாளர்கள் சிங்கள் முகாமில் காயப்பட்டார்களே, மேலும் 265பேர் இந்திய இராணுவப் பிரிவினர் சிங்கள இராணுவத்துக்கு உதவுகிறார்கள் என்று இந்தியத் தூதரக அதிகாரி சொன்னாரே?

இது இந்தியா செய்த பச்சைத் துரோகம் அல்லவா?

ஆயுதங்களை அனுப்பினோம் – பிரதமரின் ஒப்புதல்

ஆக, இந்திய இராணுவத்தினர் சிலரை, இந்திய அரசு, சிங்களர்களுக்குக் கைக்கூலியாக அனுப்பி வைத்து உள்ளது.
இப்படிக் கூலிப்படையை அனுப்பலாமா? என்று நான் செப்டெம்பர் 11 ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்துக்கு, அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில், ‘இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க அவர்களுக்கு இந்தியா இராணுவ உதவி செய்து உள்ளது’ என்று ஒப்புக் கொண்டு உள்ளார்.

இலங்கை அதிபரின் சகோதரனும், ஆலோசகருமான பசில் ராஜபக்சே கூறுகையில், ‘இலங்கையில் எங்கள் சிங்கள இராணுவ நடவடிக்கைகளுக்கும், விடுதலைப்புலிகளை நசுக்குவதற்கும் இந்தியா முழு அளவில் உதவி வருகிறது’ என்று ஆணவத்தோடு சொன்னான்.

இந்திய அரசின் துரோகம் வெட்டவெளிச்சமாகி விட்டது. இந்தத் துரோகத்துக்குத் தமிழக முதல்வரும் பொறுப்பாளி ஆவார்.

மத்திய அரசின் கொள்கைதான் என் கொள்கை

கடந்த நான்கு ஆண்டுகளாகவே, ‘ஈழத்தமிழர் பிரச்சினையில், எங்களுக்கென்று தனிக்கருத்து எதுவும் இல்லை; மத்திய அரசின் கொள்கைதான், எங்கள் கொள்கை என்று, கலைஞர் கருணாநிதி பலமுறை கூறி வந்து உள்ளார்.

2007 ஆம் ஆண்டு, நவம்பர் 2 ஆம் தேதி, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சால், கொல்லப்பட்டார். இந்திய அரசு தந்த ரடார்களின் உதவியோடும், இந்திய ‘ரா’ உளவுத்துறையின் உதவியோடும்தான், இந்தப் படுகொலை நடத்தப்பட்டது.

இக்கொலைப்பழிக்கு இந்திய அரசு உள்ளானால், தன்மீதும் பழி வந்து சேரும் என்ற அச்சத்தில்தான், தமிழ்ச்செல்வனுக்குக் கலைஞர் கருணாநிதி இரங்கல் கவிதை எழுதினார்.

ஆனால், தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஊர்வலமாகச் செல்ல முற்பட்ட, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்களையும், என்னையும், தமிழ் உணர்வாளர்களையும் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தார்.

இலங்கையில் உணவும், மருந்தும் இன்றிப் பட்டினியாலும், நோயாலும் மடிகின்ற தமிழ் மக்களைக் காக்க, திரு பழ. நெடுமாறன் அவர்களும், தமிழ் உணர்வாளர்களும், தமிழகமெங்கும் திரட்டிய உணவு, மருந்து, உதவிப் பொருள்களை, இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுப்பி வைக்க, இந்திய அரசின் அனுமதி வேண்டி, பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

மறுநாளே, நான் டெல்லி சென்று, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து, உதவிப் பொருள்ளை வழங்க அனுமதி வழங்கக் கேட்டபோது, அவர் உடனடியாகத் தனது செயலாளரின்மூலம், வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துக்கு, அனுமதி வழங்கத் தெரிவிக்குமாறு கூறினார்.

ஏமாற்றிய கருணாநிதி

ஆனால், அப்படி அனுமதி கொடுக்கக்கூடாது என்று, கலைஞர் கருணாநிதி நிர்பந்தித்து, அதைத் தடுத்து நிறுத்தினார்.
பல மாதங்கள் கடந்தபின்பு, உணவும், மருந்தும் கெட்டுப்போகும் நிலைமையையும் சுட்டிக்காட்டி, இலங்கையில் தமிழர்கள்படும் துயரத்தையும் நினைவூட்டி, இப்பொருள்களை அனுப்பி வைக்க, மத்திய அரசின் அனுமதியை வலியுறுத்தி, பழ. நெடுமாறன் அவர்கள்,காலவரையறை அற்ற, உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்டார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில், அவர் உண்ணாவிரதம் இருக்க அமைக்கப்பட்டு இருந்த பந்தலை, முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவால், காவல்துறையினர் பிய்த்து எறிந்து உண்ணாவிரதத்தைத் தடுத்தனர். எனவே, தனியாருக்குச் சொந்தமான ஒரு வளாகத்துக்கு உள்ளே, பழ. நெடுமாறன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நான்கு நாள்கள் தொடர்ந்தநிலையில், அவரது உடல்நலம் மிகவும் பழுதுபட்டதால், இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவரது உடல்நலனுக்குத் தீங்கு நேரக்கூடாது என்று, தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கவலைப்பட்டோம்.

அப்போது, பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, கலைஞர் கருணாநிதி ‘உண்ணாவிரதத்தை நிறுத்துங்கள்; இப்பிரச்சினை குறித்து நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்றும் தெரிவித்துக் கடிதம் அனுப்பினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்-மருத்துவர் ராமதாஸ் அவர்களும், நானும், தமிழ் உணர்வாளர்களும் வற்புறுத்தியதன்பேரிலேயே, பழ. நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தினார். அதற்குப்பின்னர், முதல் அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை குறித்துப் பேசுவதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கடிதம் எழுதினார். அதற்கு முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பைத் தடுத்தார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டு அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்காக, நான் பிரதமரை நேரில் கண்டு, அவரது இசைவையும் பெற்று, அதனை அவர்களிடம் தெரிவித்ததன்பேரில், இலங்கையில் இருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு வந்தனர்.
டெல்லிக்குச் சென்று காத்து இருந்தனர்.

இதே நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க வாய்ப்புக் கேட்டு, பலமுறை கடிதம் எழுதியும், முதல் அமைச்சர் அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். இதற்குப் பின்னர்தான், இந்தியப் பிரதமரைச் சந்திக்க நான் ஏற்பாடு செய்து இருந்தேன்.

ஆனால், ‘தன்னைச் சந்திக்காமல், அவர்கள் பிரதமரைச் சந்திக்க அனுமதிக்கக்கூடாது’ என்று, திரு எம்.கே. நாராயணனைப் பயன்படுத்தி, முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி, அந்தச் சந்திப்பைத் தடுத்து விட்டார். அவர்கள் ஏமாற்றத்துடன், இலங்கைக்குத் திரும்பிச் சென்றனர்.

அதன்பின்னர், இரண்டு மாதங்கள் கழித்துத்தான், சென்னையில் முதல் அமைச்சர் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க நேரம் தந்தார். அதற்குப்பிறகு, புது தில்லியில் பிரதமரை அவர்களால் சந்திக்க முடிந்தது.

வாய்ப்பே தரவில்லை

இப்போதும், கடந்த, ஒருமாத காலமாக, 2009 ஜனவரி முதல் நாளில் இருந்தே, இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல் அமைச்சரைச் சந்திக்க எவ்வளவோ முயன்றும், இன்றுவரையிலும், அவர்களைச் சந்திப்பதற்குக் கலைஞர் கருணாநிதி வாய்ப்பே தரவில்லை.

‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்பதுபோலவும், ‘முயலோடும் ஓடுவேன், ஓநாயோடும் விரட்டுவேன்’ என்பதுபோலவும், முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி, தமிழர்களை ஏமாற்றுகின்ற மோசடி நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அதனால்தான், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள், மற்ற போராளி அமைப்புகளோடு, சகோதர யுத்தம் நடத்தி, பலரைக் கொன்று, தாங்களும் பலவீனப்பட்டுப் போனதாக, அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்.

ஈனச்செயல்

‘வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல’ அவர் கூறிய அக்கிரமமான கருத்து என்னவென்றால், ‘விடுதலைப்புலிகள் போரில் மடிந்த புலிகளுக்குக் கல்லறைகள், துயிலகங்கள் கட்டுவதிலேயே தங்கள் நேரத்தை வீணாக்கி, பலவீனப்பட்டுப் போனார்கள்’ என்று உடன்பிறப்பு மடலில் எழுதியது, தமிழர்கள் வணங்கும் மாவீரர்களின் துயிலகங்களைக் கொச்சைப்படுத்திய ஈனச்செயல் ஆகும்.

உண்மைப் போராளிகள், துரோகிகளோடு கைகோர்க்க முடியாது என்பதுதான், புரட்சியின் இலக்கணம் ஆகும்.
1986 ஆம் ஆண்டு, சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழ் ஈழ மக்களுக்குத் துரோகம் செய்து, இந்தியாவுக்கும், சிங்கள அரசுக்கும் கைக்கூலி கங்காணிகளாக மாறியதாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணியினர் சிலர் அவர்களால் கொல்லப்பட்டபின்னரும்தான், அந்த அமைப்புகளின் மீது, புலிகள் தாக்குதல் நடத்த நேர்ந்தது.

தமிழக மீனவர்களைப் பாதுகாத்தாரா?

தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர், 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இதுவரையிலும் ஏறத்தாழ 500 மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நமது மீனவர்களின் படகுகளும், வலைகளும் ஒவ்வொருமுறையும் நாசப்படுத்தப்பட்டு, பல நேரங்களில் நமது மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அடித்துச் சித்திரவதை செய்து, நிர்வாணப்படுத்தி, சிறைகளில் பூட்டிக் கொடுமை செய்தனர். இன்றுவரையிலும் அந்தக் கொடுமை நிற்கவில்லை.

2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று, விடுதலைப்புலிகளின் வான்படை விமானங்கள், சிங்கள விமானப்படைத்தளத்தின்மீது, மீண்டும் வன்னிக்காட்டுக்கே திரும்பிச்சென்ற, உலகத்தையே திகைக்கச்செய்த வீரசாகசச் செய்தி வெளிவந்த நிலையில், அதனால், தமிழக மக்கள் மனதில் ஏற்படும் பெருமித உணர்ச்சியை, ஆதரவைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு, ‘தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கடத்திச்சென்று கொலை செய்தனர்’ என்று தமிழகக் காவல்துறை தலைமை ஆணையர் மூலம் அறிக்கை தர வைத்த பெரிய மனிதர்தான், கலைஞர் கருணாநிதி ஆவார்.

கருணாநிதி சொன்னதைத்தான் கருணாவும் சொல்கிறான்

ஈழத்தமிழர்களைக் காக்கவும், தங்கள் தாயகத்தின் விடுதலையை வென்றெடுக்கவும், உயிர்களைத் தாரை வார்த்துக் களத்தில் போராடும் விடுதலைப்புலிகளுக்கு, துளி அளவு தன்னல நோக்கம் இன்றி, ஆதரவுக்குரல் எழுப்பி வரும், திரு பழ. நெடுமாறன் அவர்களை இழிவுபடுத்தி, ‘விடுதலைப்புலிகளின் முதுகில் உட்கார்ந்துகொண்டு, பணம் பறிக்கும் துரோகி நெடுமாறன்’ என கடந்த ஆண்டில், ஆலகால விடம் தோய்ந்த வார்த்தைகளால், மனச்சாட்சியைக் கொன்றுவிட்டு, அறிக்கை தந்தவர் கலைஞர் கருணாநிதி.

இந்தக் கருணாநிதி சொன்னதைத்தான், தமிழ் ஈழத்துக்குத் துரோகம் இழைத்து, சிங்கள அரசின் கைக்கூலியாக மாறிய துரோகி கருணாவும், இதே பழியைத்தான் திரு நெடுமாறன் மீதும், என்மீதும், பெயர்களைக் குறிப்பிட்டே, புழுதி வாரித் தூற்றியதைத் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு ஏடுகளும் வெளியிட்டன.

இதே அடாத பழியைத்தான், ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவிக்கக் கொக்கரிக்கும், இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ‘விடுதலைப்புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, பழ.நெடுமாறனும், வைகோவும், செயல்படுகிறார்கள்’ என்று, பகிரங்கமாகச் சொன்னார்.

இப்போது ஒரே நேர்கோட்டில் மூவரும் வந்துவிட்டார்கள்!

தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி, தமிழ் ஈழத்தில் கருணா, சிங்களத் தளபதி சரத் பொன்சேகா, இவர்கள் மூவரும் ஒரே குரலை ஒலிக்கின்றனர்.

தமிழர்களே, சில நிமிடங்கள் சிந்தியுங்கள்

1948 ஆம் ஆண்டில் இருந்து, 28 ஆண்டுகள் ஈழத்தமிழர்கள், தந்தை செல்வா தலைமையில் அறவழியில் போராடினர்.
சிங்களவர்களோடு சம உரிமை பெற்ற மக்களாக வாழ முடியும் என்று நம்பினர். ஒப்பந்தங்கள் போட்டனர்.
அனைத்தையும், சிங்கள இனவாத அரசுகள், கிழித்து எறிந்தன

தமிழ் மக்கள் மீது, காவல்துறையை, இராணுவத்தை ஏவி, படுகொலை செய்தனர்; நமது தமிழ்ச் சகோதரிகள் விவரிக்க இயலாதவாறு படுநாசம் செய்யப்பட்டனர்; தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும் சூறையாடப்பட்டன; பச்சிளம் குழந்தைகளும் கொல்லப்பட்டு, கர்ப்பிணித் தாய்மார்களின் வயிற்றில் இருக்கும் கருவைக்கூட, கொடியோரின் துப்பாக்கிக் கத்திகள் கிழித்த கொடூரம் கோரத்தாண்டவம் ஆடியது.

எனவேதான், 1976 மே 14 ஆம் நாள், தந்தை செல்வா அவர்கள் தலைமையில் வட்டுக்கோட்டை-பண்ணாகத்தில் கூடிய தமிழர் அமைப்புகள், ‘இனி சுதந்திர இறையாண்மை கொண்ட ‘தமிழ் ஈழம்’ அமைவது ஒன்றுதான், தாங்களும், தங்கள் தலைமுறையினரும், உரிமையோடும், மானத்தோடும் வாழ்வதற்கான ஒரே உத்தரவாதம்’ என பிரகடனம் செய்தனர்.

‘வருங்கால இளம் தலைமுறையினர், இந்த இலட்சியத்தை அடைய, போரை முன்னெடுத்துச் செல்வார்கள்’ என்றும் தந்தை செல்வா அறிவித்தார்.

இதனை அடுத்து, 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், தனித்தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ் அமைப்புகள், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் 78 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, வென்றனர். அதுவே, ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்புத் தீர்ப்பாக ஆயிற்று. ( Referendum ).

ஈழத்தைச் சிதைத்த இந்தியா

1987 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழ் ஈழத்தில் வடமராட்சி பகுதியில், சிங்கள இராணுவம் புலிகளிடம் தோற்று ஓடிக்கொண்டு இருந்தபோது, தனித்தமிழ் ஈழம் கண்ணுக்கு எதிரே தெரிந்தவேளையில், நயவஞ்சகமாக ஜெயவர்த்தனா, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்தார். இதே ஜெயவர்த்தனாதான், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ‘இந்தியாவை விட, பாகிஸ்தான்தான் எங்களுக்கு என்றைக்கும் நட்பு நாடு’ என்று பன்னாட்டு ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்தவர்.

திணிக்கப்பட்ட ஒப்பந்தம்

இந்திய-இலங்கை ஒப்பந்தம், விடுதலைப்புலிகளின் விருப்பத்துக்கு மாறாக, தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தம் ஆகும். அதில் அவர்கள் கையெழுத்தும் இடவில்லை. ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு, பொது வாக்குப்பதிவு நடைபெறும்’ என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட ஜெயவர்த்தனா, ஒப்பந்தத்தின் மை உலர்வதற்கு உள்ளாகவே, ‘இணைப்பை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்’ என்றார்.

‘வடக்கு-கிழக்கு மாகாணங்கணை இணைக்கக்கூடாது என்று, ராஜபக்சே அரசின் ஏற்பாட்டின்பேரில், கொழும்பு உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொல்லிவிட்டது.

அந்த ஒப்பந்தத்தின் ஒருதரப்பான இந்தியா, இதை ஏன் எதிர்க்கவில்லை? கண்டிக்கவில்லை?

எப்போதோ நிராகரித்ததை..

இப்போது வலியுறுத்துகிறார்

13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப்பகிர்வு நடைபெற வேண்டும் என்று, கவைக்கு உதவாத ஒரு யோசனையை, இந்திய அரசும், சிங்கள அரசும் சொல்லுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள நகர்மன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள்கூட, தமிழர் பகுதிக்குக் கிடைக்காது என்பதால், தமிழ் அமைப்புகள், இந்தத் திட்டத்தை எப்போதோ நிராகரித்துவிட்டன.

ஆனால், கலைஞர் கருணாநிதி மகாமேதாவியாகத் தன்னைக் கருதிக்கொண்டு, ‘இலங்கையில் அதிகாரப்பகிர்வு வேண்டும்; அதற்கு சிங்கள அரசு ஒத்துழைப்புத் தரவேண்டும்; தி.மு.க.வும், காங்கிரசும், அவர்களைச் சார்ந்தவர்களும் தமிழ்நாடு முழுவதும் பேரணி, பொதுக்கூட்டங்கள் மூலம் இதை விளக்குவார்கள்’ என்று, பிப்ரவரி 3 ஆம் தேதி ஒரு தீர்மானத்தைக் கலைஞர் கருணாநிதி நிறைவேற்றி உள்ளார்.

உலக நாடுகள் கண்டனம்; ஊமையான இந்தியா

‘இலங்கையில் இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும்; படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்களைக் காக்க வேண்டும்’ என்று, போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் அறிக்கை விடுத்து உள்ளார்.

விடுதலைப்புலிகளைத் தடை செய்து உள்ள அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அவர்களும், புலிகளைத் தடை செய்து உள்ள இங்கிலாந்து அரசின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மெலிபேண்ட் அவர்களும் கூட்டாக விடுத்து உள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் குறித்து ஒரு வார்த்தைகூடக் குறை சொல்லாமல், ‘இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும்; அரசியல் தீர்வு காணப் பேச வேண்டும்; முல்லைத்தீவில், மருத்துவமனைகள் மீது சிங்கள விமானப்படை குண்டு வீசக்கூடாது; செஞ்சிலுவைச் சங்கத்தினர் தாராளமாக எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டும்; உணவும், மருந்தும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளனர்.

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ‘இலங்கையில் இருதரப்பிலும் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும்’ என்று அறிவித்து உள்ளார்.

ஆனால், இந்திய அரசோ, போர்நிறுத்தம் வேண்டும் என்று, ஒப்புக்குக்கூட இலங்கை அரசிடம் சொல்லவில்லை. இதுதான், விஸ்வரூபம் எடுக்கும் முக்கியமான கேள்வி.

திட்டம் என்ன?

காரணம் என்ன தெரியுமா?

விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்று, இந்திய அரசு, சிங்கள அரசோடு சேர்ந்து கூட்டுச் சதித்திட்டம் வகுத்து உள்ளது.

எனவே, இந்த நிலையில், இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று, இந்திய அரசு, இலங்கை அரசுக்குச் சொன்னால், அதைத் தொடர்ந்து, உலகத்தில் ஏhளமான நாடுகள், ‘போர் நிறுத்தத்தை வலியுறுத்தத் தயாராக இருக்கின்றன.

இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கின்ற இந்தியா, அதிலும், ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவு கொண்ட தமிழ் மக்கள் ஏழு கோடிப் பேரைக் குடிமக்களாகக் கொண்டு உள்ள இந்தியா, ஏன் போரை நிறுத்தச் சொல்லவில்லை? என்ற எண்ணம்தான், உலகின் பல நாடுகளுக்கு ஒரு குழப்பத்தையும், தயக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டு, அதன்பிறகு, சிங்கள அரசின் காலடியில், அவன் போடும் பிச்சையைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ளவும், துப்பாக்கிச் சத்தம் இல்லாமலும் செய்துவிடலாம் என்று, இலங்கை அரசும், இந்திய அரசும் நினைக்கின்றன. அதைத்தான் கருணாநிதியும் விழைகிறார்.

வெறிக்கூச்சல்

புலிகளின் கடைசி மூச்சு அடங்கப்போகிறது என்றும், 25 ஆண்டுக்காலமாக எவராலும் வீழ்த்த முடியாது என்று சொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்றும், கொழும்பு நகரில் பிப்ரவரி 4 ஆம் நாள், வாள் ஏந்திய சிங்கக்கொடியை ஏற்றிவைத்துவிட்டு, இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆணவ வெறிக்கூச்சல் போட்டு உள்ளான்.

தமிழ் ஈழ மக்களின் ஒரே காவல் அரண் விடுதலைப்புலிகள்தாம். ஆயிரமாயிரம், புலிப்படை வீரர்களும், வீராங்கனைகளும், கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாத துன்பங்களைத் தாங்கிக்கொண்டு, தமிழ் ஈழத் தாயக மண்ணின் உரிமை காக்கத் தங்கள் உயிர்களைப் பலியிட்டு, அந்த உயிர்களாலும், ரத்தத்தாலும், தியாகத்தாலும், கட்டி எழுப்பப்பட்டு உள்ள, மகத்தான ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட்டால், இன்னும் வெகு காலத்துக்கு ஈழத்தமிழர்களின் வாழ்வு நரக இருளில் மூழ்கிப் போகும்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், ஆயுதமும் ஏந்திப் போராடும் ஹமாஸ் அமைப்பினர் மீது, இஸ்ரேல் இராணுவத்தின் விமானப்படை குண்டுவீசியதில், 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு, உலக நாடுகள் கொதித்து எழுந்தன. இதோ, இஸ்ரேல் போரை நிறுத்தி விட்டது.

தமிழன் மட்டும் உலகில் நாதி அற்றவனா?

சில நாள்களுக்கு முன்னர், போர்க்களத்தில் மடிந்த புலிப்படைப் பெண்களின் சீருடைகளை அகற்றி, நிர்வாணமாக்கி, சிங்களச் சிப்பாய்கள் கெக்கலி கொட்டியதும், மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத வன்புணர்ச்சியில், அந்தத் தமிழ் வீர நங்கைகளின் உயிரற்ற உடலில், சிங்கள வெறியர்கள் ஈடுபட்டதும், இணையதளங்களிலேயே வெளியாகி இருக்கின்றதே?
உலக நாடுகளே! இந்திய மக்களே! தாய்த் தமிழகத்தோரே!

உங்கள் இரத்தம் கொதிக்கவில்லையா? உள்ளம் உடைந்து நொறுங்கவில்லையா?

இலங்கைக்குக் கப்பல் கப்பலாக ஆயுதங்களை அள்ளிக்கொடுத்த பாகிஸ்தான், இதோ இலங்கையில் தளம் அமைத்துவிட்டது. பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் மையம் அங்கே அமைக்கப்பட்டுவிட்டது. இனி, இந்தியாவின் மேற்குக் கடற்கரை மூலம் வரும் ஆபத்தைவிட, இலங்கையில் இருந்து வரும் ஆபத்துதான் பேரபாயம் ஆகும்.
தென்தமிழ்நாட்டில், விஜயநாராயணத்தில்தான், இந்தியக் கடற்படைத் தளம் இருக்கிறது. தெற்குச்சீமையில்தான் கூடங்குளம் அணுமின் நிலையம் இருக்கிறது. வடக்கே, கல்பாக்கம் அணுமின் நிலையம் இருக்கிறது.

விடுதலைப்புலிகள் இலங்கையில் வலுவாக இருந்தால், தமிழ் ஈழம் அமைந்தால், ஏழு கோடித் தமிழர்கள் வாழும், தமிழர்கள் உள்ளடங்கிய இந்தியாவுக்கு ஆபத்து நேர அனுமதிக்க மாட்டார்கள்.

எதிர்காலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதம் தமிழகத்தின் தென்முனையில் தாக்குதல் தொடுக்குமானால், அந்தப் பேரபாயத்தில் சிக்கப் போகிறவர்கள் பீகாரிகளோ, உத்தரப் பிரதேசத்தினரோ அல்ல. நாம்தான் அதற்கு இலக்கு ஆவோம்.

இந்தியாவின் அன்றைய பிரதமர் அம்மையார் இந்திரா காந்தி அவர்கள், நம்நாட்டின் பூகோள அரசியல் நலன்களைப் பாதுகாக்க எச்சரிக்கை விடுத்து உள்ளார். தொலைநோக்குப் பார்வையோடு, இந்துமா கடலிலும், இலங்கைத் தீவின் அருகிலும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட எந்த ஒரு நாட்டின் ஆதிக்கத்தையும், ஊடுருவலையும் உள்ளேவர அனுமதிக்காமல், மிகுந்த எச்சரிக்கையுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதற்கு நேர்மாறாக, தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இமாலயத் தவறுகளை வரலாற்றுப் பிழைகளைச் செய்துகொண்டு இருக்கிறது.

கருணாநிதியின் வீரம்

ஈழத்தமிழர்களுக்காகக் கலைஞர் கருணாநிதி போராடியவர் என்றும், இந்திய அமைதிப்படையையே வரவேற்க மாட்டேன் என்று சொன்னதாக, அவரது துதிபாடிகள் ஜம்பமடிக்கிறார்கள்.

ஒன்றை மறந்துவிட்டார்கள்.

அப்போது, மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி நடந்தது என்பதையும், வி.பி.சிங் பிரதமராக இருந்தார் என்பதையும், அதனால்தான், கலைஞர் கருணாநிதி வீரம் காட்டினார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

தற்போது ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, நம் கண்முன்னால் உள்ள கடமை என்ன?

ஈழத்தமிழர்கள் படுகொலையைத் தடுக்க, சிங்கள அரசு போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டும். ஏனெனில், இரண்டு மாதங்களுக்கு முன்பே, விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம் அறிவித்து விட்டனர். அது மட்டும் அல்ல,ஏற்கனவே, முதலில் போர்நிறுத்தம் அறிவித்தவர்களும் விடுதலைப்புலிகள்தாம். அந்தப் போர்நிறுத்தத்தைக் கடந்த ஆண்டு சிங்கள அரசுதான் முறித்தது.

இந்தப் பின்னணியில், இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்வதற்கு உரிய, அரசியல் அழுத்தத்தை, இந்திய அரசு கொடுக்க வேண்டும். அப்படி, இந்திய அரசு தன் கடமையைச் செய்வதற்கு உரிய நிர்பந்தத்தை, அழுத்தத்தைத் தமிழ்நாட்டு மக்கள், ஏற்படுத்துகின்ற வகையில், அறப்போராட்டம் தீவிரம் அடைய வேண்டும்.

வீரத்தியாகி முத்துக்குமார், தன் மரண சாசனத்தில் கூறியதுபோல், இளந்தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள், இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்பப் பயிலகங்களில் பயிலும் மாணவர்களும், அறவழிக் கிளர்ச்சியில் உடனே ஈடுபட வேண்டும்!

ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய மத்திய அரசில், பெரும்பங்கு வகிக்கும் தி.மு.க.வின் தலைவர் கலைஞர் கருணாநிதி, ஈழத்தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்பது, காலக் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டு விட்டது.

வரலாறு, ஒருபோதும் கருணாநிதியை மன்னிக்காது!

கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழ் மக்களுக்காகத் தன் உயிரை நெருப்புக்கு ஆகுதியாக்கிய தியாகத்தணலாம் முத்துக்குமார் உயிராயுதமாகத் தமிழ் மக்களுக்குத் தந்த, மரண சாசன வரிகளையே, தமிழக மக்களுக்கு நினைவூட்டுகிறேன்.

‘’கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்து கொள்வார். (?!). பிறகு, மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார். ‘இந்த மாதம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற, ‘வின்னர்’ பட வடிவேல் காமெடியைப்போல, காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத்தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல்காலத் தமிழர் கலைஞர், மக்களின் கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து, மருத்துவமனையில் போய் ஒளிந்து கொண்டு உள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காகச் சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்தச் சூரப்புலி, உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்தது என்ன?

ஒருமுறை, அவரே சொன்னார்: ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்?’ என்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால், ரொம்பவே நக்கி இருப்பார் போலிருக்கிறதே… …..முத்துகுமார்

கிளர்ந்து எழுக தாய்த் தமிழகம்!

மலர்க தமிழ் ஈழம்!

வைகோ

துரோகிகள் நண்பனை விடவும் தோழமையோடு பழகுவான்  நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தக் கருங்காலி  வைகோவின் உரையைப் படித்த பிறகு உங்களுக்கு யார் மேல் கோபம்  வருகிறது கருணாநிதி மேல் மட்டும் வந்தால் நீங்கள்  இன்னும் ஏமாளியே!!!

Exit mobile version