வெகு காலமாகத் தமிழர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் கக்கன், யாரைக் கேட்டாலும் அரசியலில் கக்கன் போல் வருமா என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் கக்கன் யார், அவர் என்ன சாதித்தார் என்று தேடிப்பார்த்தால், உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழர் குடியில் பிறந்தவர் என்றதுமே ஓர் ஆச்சர்யக்குறி எழுகிறது. கக்கனின் தந்தையார் பெயர் பூசாரிக்கக்கன், என்ன இது பெயரில் பூசாரி என்று நினைக்கிறீர்களா… தமிழர் குடிகளுக்குப் பூசாரிகள் தான் முக்கியம் சமசுகிருதம் படித்த அர்ச்சகர்கள் கிடையாது.
ஆரியர்கள் தமிழர் மெய்யியலை கைப்பற்றியதோடு மட்டும் அல்லாமல் பல தேசிய இனங்களின் சமயங்களையும் வழிபாடுகளையும் ஆக்கிரமித்து ஒரே இந்து மாதமாக்கி கொண்டு அவர்கள் மட்டுமே தலைமையேற்று இந்து மத நிறுவனங்களை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள், இன்றும் அதே நிலை தான் நீடிக்கிறது, தமிழர்கள் கட்டிய கோயிலுக்குள் சில தமிழர் குடிகளே நுழைய தடை விதித்திருந்த காலமும் இருந்திருக்கிறது தமிழர்களே!
தீண்டாமைக் கொடுமை தலைவிரித்திருந்த காலத்தில் மதுரையில் கக்கன் ஐயா அவர்கள் பறையர்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார், ஈவேரா அதைச் செய்தார் இதைச் செய்தார் என்று திராவிடர்கள் தம்பட்டம் அடிக்கும் போலி தம்பட்டம் இல்லை, தமிழர்குடிகள் என்றுமே பெருமை கொள்ளும் வகையில் கக்கன் ஐயா தமிழர்குடிகளைக் கூட்டிக் கொண்டு தீரத்துடன் தமிழன் கட்டிய கோவிலில் உள்நுழைந்திருக்கிறார் அதுவும் தீண்டாமை வெறிபிடித்த காலத்தில் இந்தச் சாதனைகளைப் பொத்தாம் பொதுவாகக் கருதி தமிழர்கள் கடந்து செல்ல முடியாது.
கக்கன் ஐயா மீது நமக்கும் பெரிய கோபம் இருக்கிறது, உங்களுக்கு தெரிந்திருக்கும், வேறு ஒன்றும் இல்லை தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றி இன்னும் எழுபது வருடங்களுக்குப் பின்னோக்கி தமிழர்களைக் கொண்டு சென்ற விட்ட திராவிட ஆட்சிக்கு வழிகோலிய பல காரணங்களில் மிக முக்கியமான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி எழுபது மாணவர்கள் உயிரை பறித்த செயலானது காந்தியத்தில் கரைந்த அவரின் இந்திய தேசிய பற்றின் பெரும் பாவத்தில் தான் சேரும், அதை அவர் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். காமராசர்,கக்கன் போன்றவர்களை நாம் தமிழுணர்வு மிக்கவர்கள் என்று வகைப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். தமிழர்கள் அரசியல் அதிகாரம் இழந்ததிற்கு இவர்களும் மிக முக்கிய காரணம். என்ன செய்வது தமிழனின் அறம் தமிழர்கள் என்று பார்ப்பது இல்லை.
ஊழல் நீங்கள் கேட்டு கேட்டு அழுத்துப் போன வார்த்தை சொல்லப் போனால் ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா என்று கேட்கும் இழிநிலைக்கு நம்மைக் கொண்டு வந்துவிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பட்டியலில் இவரை நிச்சயம் நாம் சேர்க்க முடியாது. அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை. அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அவர் அனுமதித்ததில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த வாகனத்தில் தன் குடும்பத்தார் பயணம் செய்யக் கூட அவர் அனுமதித்ததில்லை. இறுதி காலத்தில் மதுரையில் இருக்கும் அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கப் படுக்கை வசதி கூட இன்றித் தரையிலே படுத்துக் கிடந்தார் என்பதைக் கேட்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் ஐயா நோய்வாய்ப்பட்ட போது, உயர் தர சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றிச் சென்னை அரசு மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்திருக்கிறார். 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார், அவர் நினைவுகள் இருக்கும் வரை அரசியலில் நேர்மைக்கு ஒரு பெயர் என்றால், அது கக்கன் ஐயா தான்… அந்தத் தமிழின மூத்தோருக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவோம்.