Site icon தமிழன் சங்கர்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன…

போர் என்றால் மனிதர்கள் இறப்பது சாதாரணம் என்பதும், வாய்க்கால் தகராறு போல் இரு நாட்டு ராணுவவீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது எல்லாம் நாகரீக காலத்தில் அநாகரீகமான செயல்பாடுகள். வெளியுறவு கொள்கைகைகளில் தோல்வி அடைந்து அதைச் சமாளிக்கத் தேசபக்தி தீயை மூட்ட ராணுவ வீரர்களைப் பலியிடுவதும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பூகோள அரசியலில் பல முக்கிய நகர்வுகள் நடக்கும் மிக முக்கியமான தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சீனர்கள் மிகச் சாமர்த்தியமாக இந்தியாவைச் சுற்றி நெருக்கி விட்டனர், இது வெளியுறவு கொள்கைகளில் இந்திய அதிகாரவர்க்கத்தின் தோல்வியைத் தோலுரித்துக் காட்டுகிறது. பல தேசிய இனங்கள் வாழும் இந்திய போன்ற நாடுகளில் தேசிய இனங்களின் பிரச்சனைகளைச் சரிவரக் கையாளாமல் வெள்ளையர்கள் பயன்படுத்திய “தேசத்துரோக” சட்டங்களை அப்படியே மிருக பலம் கொண்டு பயன்படுத்துவதால் எளிதாகத் தேசபக்தி வந்துவிடும் என்று நம்புவதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

இந்துத்துவா ஆட்சியாளர்கள் ஒரு காலத்தில் இந்து நாடக அறியப்பட்ட நேபாளத்தைக் கூடப் பகைநாடக மாற்றிவிட்டனர். ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்த இவர்களின் நட்பு நாடு இலங்கையும் சீனாவின் அதிகார வரம்பிற்குள் வந்துவிட்டது. பாக்கித்தான், இலங்கை, பங்களாதேசம், வியட்நாம் என்று இந்தியாவை ஒட்டிய அனைத்து நாடுகளும் சீனாவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரத்தில் இந்தியாவிற்குச் சரிசமமாக இருந்த சீனா இன்று அமெரிக்காவிற்கு இணையாகப் பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி வளர்ச்சி என்று இந்திய மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய இந்துத்துவ ஆட்சியாளர்கள் இன்று இந்தியாவை அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்படும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டனர்.

இசுலாமிய வெறுப்பை அடித்தளமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்துத்துவக் கட்டமைப்புகள் இந்தியாவை நொறுக்கும் அளவிற்கு மிக மோசமான நிலைக்கு நம்மைக் கொண்டு வந்துவிட்டனர். “வேற்றுமையில் ஒற்றுமை” என்கின்ற பதத்தை நாம் பள்ளியில் ஒரு காலத்தில் படித்திருப்போம், வேற்றுமையில் ஒற்றுமை என்பது அனைவருக்கும் சரிசமமான மரியாதை இந்திய நாட்டில் கொடுக்கப்படவேண்டும் என்பதே, பல தேசிய இனங்கள் உள்நாட்டில் போரடிக் கொண்டிருக்கும் போது அதில் கவனம் செலுத்தாமல் பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைக் காப்பாற்றியவர்கள் நாளை ராணுவவீரர்கள் இழப்பை காட்டி எந்த எந்த வகையில் எல்லாம் கொள்ளையடிப்பார்கள் என்று தெரியவில்லை.

தமிழக ராணுவ வீரர் பழனி சீன ராணுவத்துடன் நடந்த கைகலப்பில் இறந்ததை வெறும் வீரவணக்கம் மட்டும் செலுத்தி மறந்துவிடாமல் பூகோள அரசியலை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!

Exit mobile version