0

க. மஞ்சள்புறா

சோழப்புறா – சோழ உதயம் – க. மஞ்சள்புறா

மெல்லிய பனிக்காற்றுச் சில்லென வீசிய அதிகாலைப்பொழுது வெகு தூரத்தில் காட்டுப் பாதையில் புரவி ஒன்று மிக மிக மெதுவாக அசைந்தாடி வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு பெய்தப் பெருமழையில் காட்டுமரங்கள் நன்கு குளித்துப் பரிதியை எதிர்பார்த்து ஈரக்காற்றில் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தன.

புரவியில் அமர்ந்திருந்த நடுத்தர வயதினனுக்கு வலிமையான தேகம் போர்வீரனுக்கு உடைய அனைத்துத் தகுதியும் அவனுக்கு இருந்தது ஆனால் அவன் மிக மிகச் சாமானியர்களின் ஆடையை அணிந்திருந்தது பெரும் வியப்பாக இருந்தது. புரவியின் பக்கவாட்டில் திறம்பட வேல் ஒன்று கட்டிவைக்கப்பட்டிருந்தது.

காட்டுப்பாதையை ஒட்டிச்  சிந்து நதியில் இருந்து பிரிந்து ஓடியச் சிறு ஓடையின் கரையில் சில முனிவர்கள் தியானம் செய்து கொண்டிருந்தனர். புரவி மேல் களைப்பாய்த் தெரிந்த அந்த நடுத்தர வயதினன் ஓடையின் அருகில் இருந்த மரத்தில் புரவியைக் கட்டினான், ஓடையின் அருகில் சென்று தன் ஆடைகளை அவிழ்த்து ஓரமாக வைத்துவிட்டுச் சிறிது சிறிதுதாக ஓடை நீரில் மறைந்தான்.

“ஐயா முனிவரே! வெகு தூரத்தில் இருந்து வருகிறேன், காலைப் பசியாற்றவேண்டும் உங்களிடம் ஏதேனும் உணவு இருக்கிறதா? ” மிகவும் அடக்கத்துடன் மிகவும் நிதானமாகக் கேட்டான் நடுத்தர வயதினன்.

“குழந்தாய்! சற்றுப்  பொறு” என்ற முனிவர் தனதருகில் இருந்த ஒரு துணிப்பையைத் துழாவி இரு கதலிகளை (வாழைப்பழம்) அவனிடம் கொடுத்தார் மிகவும் பயபக்தியோடு அதை வாங்கியவன் அவர் அருகிலேய அமர்ந்து அமிர்தத்தைக் குடிப்பது போல் ரசித்து ருசித்து அந்த கதலிகளை உண்டான், நீண்டத்  தூரப் பயணத்தால் களைத்துப் போயிருந்தவனுக்கு இளங்காலைப் பொழுதின் குளியலும் கதலியின் ருசியும் புத்துணர்ச்சியைக் கூட்டியது. முனிவருக்கு நன்றி சொல்லி அவரிடம் ஆசிப்  பெற்றுத்  தன் புரவியில் அமர்ந்துப்  பிரயாணத்தைத் தொடர்ந்தான்.

அரண்மனை வாயில் பரபரப்பாய் இருந்தது மந்திரிசபைக் கூட்டம் இன்று கூடவிருக்கிறது, அரசாங்கத்தின் உயர்பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் வேகவேகமாய் அரண்மனைக்குள் சென்று கொண்டிருந்தனர்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு அவை கூடுவதால், கோட்டைக் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தனர் கோட்டைக் காவலர்கள். நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெரும் திரளான வணிகர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், போர்வீரர்கள் எனத் தலைநகரை நிரப்பிக் கொண்டிருந்தனர், கோட்டைகாவலர்களின் நிலைத்  தான் பெரும் பாடாக இருந்தது.

தீடீர் என ராசபேரிகைகள் ஒலிக்க ஆரம்பித்தன, கோட்டை வாயிலில் காவல் அதிகரிக்கப்பட்டது, மக்களை இரு புறங்களிலும் ஒதுக்கி நடுவில் வழிச்  சமைக்கப்பட்டது. சாலையோரம் ஒதுங்கிய மக்கள் யார் வருகிறார் என்று எட்டி எட்டிப்  பார்த்தனர். படோபடமாக யாரும் வருவது போல் தெரியவில்லை, வெகு தூரத்தில் யாரோ வருவதற்கு இப்பொழுதே ஏன் நம்மைக் கோட்டைக் காவலர்கள் ஒதுக்கினார்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, வேகவேகமாய் ஒரு புரவிக்  கோட்டைக்குள் புகுந்தது.

கோட்டைக்குள் புகுந்த நடுத்தர  வயதொத்த புரவி வீரன் நேராக அரண்மனை வாயிலில் இருந்த காவலனிடம் புரவியை ஒப்படைத்துவிட்டு அரண்மனைக்குள் புகுந்தான். அரசவையை ஒட்டிய நீண்ட பூந்தோட்டமும் அதற்கு அடுத்து இருந்த நன்கு அலங்கரிக்கப்பட்ட அறையை நோக்கி வேகமாகச் சென்றான், அந்த அறையின் ஆளுயர கதவுகள் மெதுவாக திறந்தன, பணிப்பெண்கள் அறையில் தங்கள் திறமையை முழுதும் காட்டி கமகம என்று நறுமணம் வீசும் பூமியின் சுவர்க்கமாக அந்த அறையை மாற்றியிருந்தனர். அரசன் வேகமாக அறைக்குள் நுழைந்ததும் அவர்கள் வேகவேகமாக அறையை விட்டு அடக்கத்துடன் வெளியேறினர். பணிப்பெண்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்த வானதி மட்டும் அரசன் உள்நுழைந்ததும் தலைவணங்கி வணக்கம் செய்து விட்டு அறையை விட்டு ஒய்யாரமாக வெளியேறினால் அரண்மனையில் ஒரு சிலரே அரசனின் மாறுவேடத்தைச் சரியாக உணர்ந்து மரியாதை செய்வார்கள் அதில் வானதியும் ஒன்று.  சாளரத்தின் வழியாக அரண்மனை தெருக்களில் எழுப்பப்பட்ட பலவித ஒலிகள் வந்து கொண்டிருந்தன அதை எதையும் சட்டை செய்யாத எல்லாளன் வேக வேகமாகத் தன் மாறுவேடத்திற்குப் பயன்படுத்திய துணிமணிகளைக் கலைந்தான். உள்ளறையின் வழியே சென்று அவனுக்கென்று தனியாக அமைக்கப்பட்டிருந்த நீராடு குளத்தில் முழுக ஆரம்பித்தான். அரசவை நிரம்பி வழிந்தது, அமைச்சர்கள், வீரர்கள், பொதுமக்கள் என்று அங்கு எழுந்த ஒலிகள் மூத்த அமைச்சர்  இங்கனாட்டுப் பாலையூடையான் உபயகுலாமலன்   அவர்களின் குரலுக்கு ஒட்டுமொத்தமாக அடங்கியது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த அந்த இடத்தில் சிறு சிறு ஓசையைத் தவிரப் பெரிய ஒலி ஏதும் எழாமல் இருந்தது மிகவும் வியப்பாக இருந்தது. சரியாய் சிறிது நேரத்தில் எல்லாளன் அரசவையில் நுழைந்தான் மன்னரின் புகழ் வாசிக்கப்பட்டு அரியணையில் எல்லாளன் கம்பீரமாக அமர்ந்தான்.

முதலில் பாண்டிய நாட்டுக்கு சென்று திரும்பிய ஒற்றர் தலைவன் பாண்டிய நாட்டில் சோழ நாட்டிற்கு எதிராக நடக்கும் சில செயல்பாடுகளை விவரித்தான், அதைப் பொறுமையாகக் கேட்ட எல்லாளன் கனத்த குரலில் பேச ஆரம்பித்தான்.

“இந்த தமிழர் நிலத்தில் வீரம் கொப்பளிக்கப் பல போர்களை நாம் நடத்தியுள்ளோம், நமது தோள்கள் தினவெடுத்துப் போர்களை விரும்பினாலும் நமது சகோதர யுத்தத்தினால் நாட்டில் அமைதி எப்பொழுதும் கேள்விக்குறியாகவே உள்ளது. நமது உளவு படைகளின் தீரத்தால் நமது நாட்டைச் சூழ்ந்த பல ஆபத்துக்களை நாம் முறியடித்துள்ளோம்” என்றவாறே அரியணையில் இருந்து இறங்கி ஒற்றர் தலைவன் வேந்தியனை ஆரத் தழுவி தனது முத்துமாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தான்.

அந்த நேரம் பார்த்து மக்கள் கூட்டத்தில் குழப்ப ஒலிகள் கேட்க ஆரம்பித்தன, ஒரு மஞ்சள்புறா ஒன்று “ம்கூம்” “ம்கூம்” என்று ராச சபையில் இறகுகள் கிழியும் அளவிற்குப் பயங்கரமாய் ஓசை எழுப்பியபடி சரியாக நீதிவானான எல்லாளன் தோளில் தஞ்சமடைந்தது. தஞ்சமடைந்த புறாவை லாவகமாக எடுத்த எல்லாளன் அதைக் கைகளில் தாங்கியபடி அரியணையில் அமர்ந்தான்.

புறாவை ஆதரவாகத் தடவி கொடுத்த எல்லாளன் அமைச்சர் உபயகுலாமலனை பார்த்து “அமைச்சரே, பொதுமக்கள் கூட்டத்தில் என்ன குழப்பம் ஏன் இந்தப் புறா இவ்வளவு நடுங்குகிறது” என்று கேட்டான். அமைச்சர் தன் ஆசனத்தில் இருந்து எழுந்து பொதுமக்கள் கூட்டத்தில் விசாரிக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் எல்லாளனுக்கு அருகில் வந்த அமைச்சர் “ஒன்றும் இல்லை மன்னா, நீங்கள் கையில் வைத்திருக்கும் புறாவை ஒரு பருந்து துரத்தி வந்திருக்கிறது அஃது ஏற்படுத்திய குழப்பம் தான், துரத்தி வந்த பருந்து திரும்பச் சென்றுவிட்டது, இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை”.

திருப்தியாய் தலையை அசைத்த எல்லாளன், காவலன் ஒருவனை அழைத்துப் புறாவை பத்திரமாகப் பேணிக்காக்க உத்தரவிட்டான். வழக்கம் போல் அரசவை  செயல்பாடுகள் நடந்தேறின. எல்லாளன் மனதில் மட்டும் புறா வந்து தோளில்  அமர்ந்தது  மனதை  சலனப்படுத்திக் கொண்டிருந்தது.

பரிதி மெதுவாய் தரையிறங்கிக் கொண்டிருந்தது, மாலை வெளிச்சத்தை இருள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது, வெண்மதி வானில் “நான் இங்கு தான் இருக்கிறேன்” என்று புன்னகைத்துக் கொண்டிருந்தது.

உப்பரிகையில் உலாத்திக் கொண்டிருந்த எல்லாளன் புறாவை கையில் தாங்கிய போது அது நடுங்கிய விதம் கண்டு இரக்கம் இரட்டிப்பாக மனக்குழப்பத்தில் ஆழ்ந்தான், அந்த நேரம் அங்கு வந்த எல்லாளனின் பட்டத்தரசி கோதை மன்னனின் குழப்ப முகத்தை கண்டு அவளும் குழம்பினாள், எல்லாளனின் கையை பிடித்தவாறே

“என்ன குழப்பம் அரசே” என்று வினவினாள். ”ஒன்றுமில்லை கோதை, நான் சொன்னேனே அரசவையில் என்னிடம் தஞ்சமடைந்த புறாவை பற்றி அதைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எப்படி அந்த புறா பல தடைகளை தாண்டி அரசவையில் வந்து அதுவும் என் தோளில் வந்து அமர்ந்தது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றவன் அவன் கைகளை அவளிடம் இருந்து விடுவித்துக் கொண்டே அருகில் இருந்த திண்டில் உட்கார்ந்தான்.

“நீங்கள் தான் இந்த நாட்டின் மன்னர், அருளுள்ளம் கொண்டவர் என்று அந்த புறாவுக்கும் கூட தெரிந்திருக்கிறது” என்று விளையாட்டாக பரிகாசம் செய்தாள்.

புன்முறுவல் பூத்த எல்லாளன் “விளையாடாதே கோதை” என்று மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான். மனதில் ஏதோதோ எண்ணங்கள் புகுந்து அவனை அயர்ச்சியடையவைத்தது.

தூரத்தில் ஒரு சிறுபடை கோட்டையை சுற்றி ஓடிய ஆற்றினை சத்தமின்றி கடந்து கொண்டிருந்தது.

தொடரும்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!