சில விடயங்களைச் சில நேரங்களில் பேச முடியாது ஏனெனில் சிறு மாற்றுக் கருத்தும் சமூகத்தில் கொந்தளிக்கும் மனநிலைக்குக் கொண்டு சென்றுவிடும், அது போன்ற ஒரு நிகழ்வு தான் செயலலிதா மரணமும் அதையொட்டி சசிகலா சிறைவைப்பும். அரசியல் என்பது சமூகச் சேவை என்பது போய்ப் பணம்,அதிகார போதை என்றான பின் இவர் சரியானவர் அவர் சரியானவர் என்பதெல்லாம் போய் இவர் எந்த அளவிற்குக் கெட்டவர் அவர் எந்த அளவிற்குக் கெட்டவர் இதில் யார் எந்த அளவிற்குக் கெட்டவர் அதுவும் அந்தச் சமயத்திற்கு எவர் கெட்டவர் என்று புதிய அலகுகளை அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
யார் ஊழல்வாதிகள் இல்லை?
ஊழல்வாதிகள் கருணாநிதியோ,எம்.சி.யாரோ,செயலலிதாவோ தமிழக முதல்வராகலாம் ஆனால் மோடியின் இட்ட கட்டளைக்கு ஆட வைக்கமுடியாத சசிகலாவை முதல்வராக்குவது என்பது இந்துத்துவவாதிகளால் சீரணிக்க முடியவில்லை. ஒரு பலமான தமிழனோ, தமிழச்சியோ அதிகாரத்திற்கு வருவதை இவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், ஒரு தமிழனோ, தமிழச்சியோ அதிகாரத்தை நெருங்கும் போது மட்டும் அவர்கள் ஊழல்வாதிகளாய் இருக்கக்கூடாது அப்படி ஊழல்வாதிகளாய் இல்லாமல் இருந்துவிட்டால் அவர்கள் சாதியவாதிகளாய் பார்க்க வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். ஊழல் என்னவோ அரசியல்வாதிகள் மட்டும் செய்வது போல் வாய் கிழிய ஊடகங்கள் கத்தினாலும் உண்மையில் ஊழல் என்பது ஒவ்வொரு மனிதர்களிடமும் திணிக்கப்பட்டிருக்கிறது இந்தியாவின் எந்த மாநிலத்து முதலமைச்சருக்கும் ஊழல் செய்வது எல்லாம் பெரிய குற்றம் இல்லை அது தான் நடைமுறை எதார்த்தம். தரகு (Commision) என்கின்ற ஒரு சொல் இல்லாமல் அரசியலே இயங்காது என்பது தான் இங்கே போடப்பட்டிருக்கும் விதி.
நடப்பதெல்லாம் எதார்த்தமா ?
தமிழரின் அதிகாரம் திராவிடத்தாலும் இந்துத்துவ சக்தியாலும் மட்டுப்படுத்தப்பட்டதின் விளைவே எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்தின் குடுமி பிடி சண்டையும் அதையொட்டி நடந்த இந்துத்துவத்தின் சமாதான ஏற்பாடும். நடப்பதெல்லாம் எதார்த்தம் என்கின்ற பொதுசன மனநிலையைக் கழட்டிவைத்து பார்த்தால் தான் நடந்த அதிகார பகிர்வும் தமிழ்நாடு எல்லைகள் வெறும் கோடுகள் தான் என்பதும் புரியவரும். உங்களை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தாலும் அதையும் தாண்டி சில ஆதரவு உங்களுக்குத் தேவை , அஃது இல்லை என்றால் சென்னையில் ஏதோ ஒரு மூலையில் செய்த சிறு சாலைப்பாதுகாப்பு விதிமீறலை வைத்துக் கூட உங்களைச் சிறையில் அடைத்து அந்தப் பதவியேற்பை எளிதில் முடக்கமுடியும்.
சசிகலா என்ன செய்தார்?
சசிகலா என்ன செய்தார், ஸ்டாலின் என்ன செய்தார், மோடி என்ன செய்தார், RSS என்ன செய்தது என்பது எல்லாம் நம் கண் முன்னே இருக்கும் விடயங்கள் தனிப்பட்ட சிலரின் அதிகாரப் போட்டியில் தமிழ்நாட்டு மக்கள் அடைந்த துயரம் தான் அளவுக்கு அதிகமானது. கருணாநிதி செய்ததை விட, எம்.சி.ஆர் செய்ததை விட, செயலலிதா செய்ததை விடச் சசிகலா எதையும் செய்துவிடவில்லை ஆனால் இந்திய அதிகாரவர்க்கம் அவரைப் புறக்கணிக்க வைக்கிறது, அவர்கள் நினைத்ததை ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் செய்யும் படி காய்களை நகர்த்திப் பன்னீர்செல்வத்தை மனித புனிதராகக் காட்ட முயற்சித்து அதில் ஓரளவு வென்றும் காட்டியது… அதில் இருக்கும் அரசியல் புரியவில்லை என்றால் இனி வரும் காலத்தில் நடக்கப்போகும் அரசியலும் நமக்குப் புரியாது… தமிழர்கள் நாம் தெளிவுறுவோம்.
மீண்டும் சந்திப்போம்…