விவசாயிகள் வயிற்றில் ஆட்சியாளர்கள் அடித்தால் ஆட்சியாளர்கள் வீட்டில் அடுப்பெரியாது
ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான் ஆயிரம் ஆயுதங்களை வைத்திருந்தாலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தால் அந்த நாடு எதற்கும் கையேந்த தேவையில்லை, நவீன கால அரசியல் சித்தாந்தங்கள் வணிகக் கொள்கைகைகள் பேராசை பிரியர்களிடம் சிக்கிவிட்டதால் சராசரி மனிதனின் அடிப்படை தேவைகள் எல்லாம் அரசியல் அறிவிலிகளால் தனியுடமையாகிக் கொண்டிருக்கிறது. ஒரு சில பணக்காரர்கள் தாங்கள் விருப்பத்துக்கிணங்க உலக மக்களை எளிதில் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தைப் பெற்றுவிடுகின்றனர்.
மனிதர்களில் ஏழை, பணக்காரன் என்று எப்படி வகைப்படுத்துகிறோமோ அதே போல் நாடுகளிலும் ஏழை நாடுகள் பணக்கார நாடுகள் என்று இருக்கின்றன, அதில் ஏழை எளிய நாடுகள் வல்லாதிக்க நாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தன் மக்களுக்கு என்று எதையும் செய்ய முடியாதவாறு அவர்களின் கட்டளைக்கு அடிபணியும் துயர நிலை சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடு மேற்கத்திய வளர்ந்த நாடுகளின் கொள்கைகளை எந்த வித ஆலோசனையும் இன்றி வலிந்து தன் மக்கள் மீது தொடர்ந்து திணிக்கிறது.
தமிழக விவசாயிகள் காவிரி நீர் பிரச்சனையில் தில்லியில் போராட்டம் நடத்திய போது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதில் என்ன அரசியல் செய்யலாம் என்று பலவித முயற்சிகளைச் செய்தன. சில கட்சிகள் தமிழக விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்கின்ற ரீதியில் அங்கே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு சரி, இந்திய ஒன்றிய அரசோ தமிழக விவசாயிகளை ஈனப்பிறவிகள் போல் நடத்திய செய்திகளை எல்லாம் நாம் ஊடகங்களில் பார்த்து ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையில் வருந்தினோம்.
இந்திய ஒன்றியத்தின் முதுகெலும்பே விவசாயம் தான், அந்த விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தி அதை வளமிக்கத் தொழிலாக மாற்றாமல் அதைத் தனியாருக்குத் தாரைவார்த்து அவர்களிடம் நாம் கையேந்தும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளுவது என்ன ஓர் அறிவிலித்தனம். மேற்கத்திய வல்லாதிக்க நாடுகளுக்குச் சேவையம் செய்யத் தன் சொந்த மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஆட்சியாளர்கள் செல்வது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது இதற்கு முக்கியக் காரணம் வலுவான மக்கள் அமைப்புகள் இல்லாததே.
பஞ்சாப், அரியானா என்று தில்லியை விவசாயிகள் முற்றுகையிட இந்திய ஒன்றியத்தின் அதிகாரவர்க்கம் பல கணக்குகளைப் போடும் இந்த மக்கள் சக்தியை உருகுலைக்க அது காலகாலமாய் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல் தான், அதையும் தாண்டி தான் மக்கள் தன்னெழுச்சியாகப் பல போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஒரு பிரச்சனை போராட்ட வடிவம் எடுப்பதற்கு முன்னாள் அதைப் பேசி தீர்க்க கூட முடியாத ஆட்சியாளர்கள் எந்தத் தகுதியில் ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பது விடைதெரியாத வினா…
மீண்டும் சந்திப்போம்…