0

Do you have the guts to fight for freedom? | மாவீரர் எனும் தமிழர் மாணிக்கங்கள் | #HBDTamilsLeaderPrabhakaran | @TamilanSankar.com

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

குளிர்கால நவம்பர் மாதம் நம்மைப் போர்வைக்குள் முடக்கினாலும் தமிழர் நிலத்தில் உரமாய் விழுந்த தமிழர்களின் நினைவு நெருப்புகள் நம்மை உலுக்காமல் விடுவதில்லை. எங்கோ ஏதோ நடக்கிறது என்று தமிழர்கள் வரலாறுகளை மறந்து வாழ பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர் என்கின்ற உண்மை ஈழ இனப் படுகொலையில் தான் பலருக்குத் தெளிவாய்த் தெரிந்தது. சோழனின் பிடியில் தெற்காசியா இருந்த காலம் ஏனோ இங்கு எளிமை படுத்தப்பட்டுவிட்டது. புறநானூறு பாடல்கள் புரியுமுன்னரே ஈழத்தில் புலிமறவர்கள் விதைக்கப்பட்டுவிட்டார்கள். எதிரியின் வீரத்தை மதித்த தமிழினம் இன்று விதைத்த வீரர்களை வணங்க கூட அனுமதி வாங்க வேண்டிய கொடுமைகளை வல்லாதிக்க வீரர்கள் நமட்டு சிரிப்போடு பார்த்துக் கொண்டிருப்பது நமக்குப் புரியாமல் இல்லை.

தமிழர்கள் ஒரு தேசிய இனம்…

தனிமனித சுதந்திரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாய் மாறிக் கொண்டிருக்கும் நாளில் விடுதலை, சுதந்திரம் என்கின்ற வார்த்தைகள் இங்கே ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. எந்த நியாயங்கள் இருந்தாலும் படியளப்பவன் செய்வது தான் சரி என்று ஆன பின் அடிமைகளாய் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் தவறு இல்லை ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நினைவுகளிலும் ரத்த நாளங்களிலும் ஏற்றப்பட்ட வீர தீர உணர்வுகளை உலுக்கி எடுக்கும் ஆதி தமிழ்க்குடிகளின் வீரம் உணர்விழந்தா போகும்.

தமிழர்கள் ஒரு தேசிய இனம் உலகத்திற்குத் தமிழ் இனம் கொடுத்த செல்வங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை, அறத்தொடு உலக இயங்கியலை கொண்டு செல்ல முயன்ற தமிழ் இனம் இன்று வேண்டுமானாலும் தன் உருமறைத்து நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கலாம் அஃது என்றும் நிலை இல்லை. தமிழன் குடையின் கீழ் இந்த உலகம் ஒரு நாள் வரும். கணிதம், அறிவியல் என்று இன்று நீங்கள் பார்க்கும் எல்லா இயல்களுக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன்.

மாவீரர் துயிலகம்…

காலக்கோட்டில் தீவிரவாதம் என்று எளிதில் அழிக்கும் உணர்வு இல்லை விடுதலை என்பது, தமிழ் மாவீரர்கள் உலகெங்கும் விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் அவர்களின் ஆன்மாக்கள் தமிழர்களை உறங்கவிடாது இதுவே உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் தன் மக்களை நிலப்பரப்பை காப்பாற்றியவர்களுக்கு மாவீரர் துயிலகம் அவர்களின் ஈகைக்குப் பெருமையாய் கம்பீரமாய் நிற்க. தமிழ் இனத்தின் தாழ்ந்த நிலை நாம் அழுவதற்கும் அஞ்சலி செய்வதற்கும் எதிரிகளிடமும் துரோகிகளிடமும் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது.

உண்ணப் பயம், உறங்கப் பயம்!
தமிழர் என்று சொல்லப் பயம்!
ஈழம் பற்றிப் பேசப் பயம்!
தன்னலம் உன்னைப் பரிகாசிக்க
எதையும் பேசப் பயம்!
பூகோள அரசியல்
புரியாத மர்மப் பயம்!
நமக்கேன் என்று
தன் நிலையறியா வினோதப் பயம்!
“சூதனமாக இருக்கவேண்டும்” கோமாளிக் கூச்சலாய்
விழித்துக் கொண்டே
உறங்கும் அயோக்கிய பயம்!
உல்லாச வாழ்க்கையிலே “இது தேவையா” என்ற பயம்!
பயம்! பயம்! பயம்!
சொத்தை வாழ்கை வாழும்
சுயநலக் கூட்டத்தில்
ஓநாய்களுக்கும் சேர்த்துப் போராடிய
இனமான தமிழன்,
எங்கள் தமிழர் இனக் கூட்டத்தின்
தலைவர் மேதகு பிரகாரனுக்கு
அவர் பிறந்த நாளில் வீரவணக்கம்!
#HBDTamilsLeaderPrabhakaran

தமிழ்நாட்டுக்கொடியேந்து!

நந்திக்கடல் காற்று
தமிழ்நாட்டு
சோழக் கடலோரம்
உமிழ்ந்து
கொண்டிருக்கிறது!
அந்த
எச்சில் அலைகளில்
துரோக கும்பல்
பதுங்கி கொண்டிருக்கிறது!
இனியும்
துரோகிகளின்
கதை
கேட்டுக் கொண்டிருந்தாள்
விடியாது
கிழக்கு இங்கு!
தமிழைப் பழிக்கும்
தமிழனைப் பழிக்கும்
கயவன்,
தமிழனாய் இருந்தாலும்
தப்பவிடோம்!
மொழிப்போரும்
தமிழீழப்போரும்
தமிழன் தலைவிதி
மாற்றிய
இரு துயரப் போர்கள்!
திராவிடம் சிதைத்த
தமிழுணர்வு
இனி
தீயாய்
பரவும்
மாவீரர் மாதம்
இது!
வசந்தங்கள் தொலைத்த
மாவீரர்க் கூட்டமிது!
புறநானூறு
புதிதாய்
படைத்த
புலி மறவர்
காலமிது!
எம் மீது
போர்த் திணித்து
பிழைச் செய்த
கயவர் கூட்டமே
காத்திரு!
எங்கள்
எழுதுகோள்கள்
ஏவுகணையாய்
இனி
உன்னை
தினந்தோறும்
பதம் பார்க்கும்…
தமிழா!
தமிழ்த்தேசியம்
உன்னைப் பேசும்
உன் நலன் பேசும்
உன் சுற்றத்தார் நலன் பேசும்
மாற்றார் வஞ்சகர்
குலை நடுங்க
தமிழ்க்கொடி
ஏந்து
மாவீரர் மாதத்தில்
தமிழ்நாட்டுக்
கொடியேந்து!!!

புதிய புறநானூறு படைத்த மாவீரர் தலைவனுக்கும் அவர் வழிகாட்டிய மாவீரர்களுக்கும் மாவீரர் நாள் வீரவணக்கம்!!!

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!