தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
புரட்சி என்பது எப்போதும் ஓர் அடங்காத தீ, தமிழர் நம் உள்ளங்களில் ஆண்டாண்டுக் காலமாய் ஏற்றப்பட்டிருக்கும் அறிவுத்தீ எளிதில் அடங்கிவிடாது. தமிழர் நம் அரசியலை உள்முரண்களால் இழந்தப் போது அயலார்வர்கள் எளிதில் அதைக் கவர்ந்து நம்மை அடையாளச் சிக்கலில் தள்ளிவிட்டனர்.
தமிழ்நாட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு “யார் தமிழர்கள்” என்று கேட்கும் இழிநிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டதும் அல்லாமல், இனவாதிப் பட்டம் வேறு சூட்டப்பட்டது. இன்று தமிழ்த்தேசியம் நோக்கித் தமிழ் இளைஞர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகின்றனர். சமூக ஊடகங்களில் இதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது.
தமிழ்த்தேசியம் என்பது ஏதோ ஒரு புதிய புரட்சிகரச் சிந்தனை இல்லை, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் நான் தமிழன் என்று உணர்வு மேலோங்கி இருந்தால் அவர்களை அறியால் அவர்கள் பேசுவது தமிழ்த்தேசியமாகத் தான் இருக்கும் ஆனால் அரசியல் ரீதியாகத் தமிழ்த்தேசிய கொள்கையைப் பரப்பித் தமிழர்களை ஒன்று சேர்க்கவேண்டிய படு மோசமான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதே இங்கு இருக்கின்ற பெரும் சோகம்.
தமிழர்கள் தங்களின் வரலாற்றைத் தெளிவாகப் படித்து உணரவேண்டும், நான் பல இடங்களில் இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்திருக்கிறேன், அதைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருப்பேன். நாம் ஆண்டபரம்பரை என்றும் மூவேந்தர்ப் பரம்பரை என்றும் பொத்தாம்பொதுவாகப் பேசுவதால் எழுதுவதால் ஒரு பயனும் இல்லை, நம்முடன் வணிகம் செய்தவர்கள் ரோமானியர்கள், சீனர்கள் என்கின்ற பழங்கதையைப் பெருமையாகச் சொல்லித்திரிவதில் எந்தப் பயனும் இல்லை, சிதைவுண்ட ரோமானியப் பேரரசின் சரித்திர முக்கியத்துவமும், வல்லரசாகி உலக நாடுகளை இன்று மிரட்டிக் கொண்டிருக்கும் சீனர்களையும் பார்க்கும் போது நாம் எங்கிருக்கிறோம் என்று எடைபோட தவறக்கூடாது.
இன்று நாம் ஒரு பெரிய சிக்கலில் இருக்கின்றோம் அஃது என்னவென்றால் தமிழ்த்தேசியம் என்பது என்னவோ அரசியல் கட்சிப் போலவும் தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலைப் பிடித்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என்பது போல ஒரு தோற்ற மாயை உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த மாயையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த்தேசிய முகமூடியை வேகவேகமாக அணிந்து கொண்டு தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைப் பலர் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற நிலையை விளக்கி நான் ஏற்கனவே ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறேன். அந்தக் காணொளியின் தலைப்பு இது தான் “பாரிசாலன், ராஜவேல் நாகராஜன், மதன் யார் யோக்கியன்!” இன்று மீண்டும் இதைப் பற்றிப் பேசுவதற்குப் பல காரணங்கள் இருக்கிறது.
இன்றைய தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல தலைமுறைகளாகக் கடத்தி வந்த பல தத்துவங்களையும் அறிவார்ந்த கருத்துக்களையும் உள்ளடக்கியா எச்சங்களே, இதில் புதிதாக எந்த ஒரு புரட்சிகரச் சிந்தனைகளைப் புகுத்தவோ பரப்பவோ தேவையில்லாத ஓர் இனம் தமிழினம் என்பது. இன்று மாங்கு மாங்கு என்று திராவிடமும் இந்துத்துவமும் நம்மைப் பெரும் குழப்பத்தில் இருக்க வைக்கப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இந்தக் கும்பல்களோடு சேர்ந்து கொண்டு தமிழர்களை வீழ்த்தத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் பல முகமூடிகளை அணிந்து நம்மை ஏமாற்றி வருகின்றனர் இவர்களின் வேட்டைக்காடாக நாம் தமிழர் கட்சியும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் மாறியுள்ளது.
தீடீர் தீடிர் என்று பலர் பொது ஊடகம் மூலமும் சமூக ஊடகங்கள் மூலம் அடைந்துப் புகழ் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். குறிப்பாகத் தீவிரத் தமிழ்த்தேசியர்களே வீழ்ந்தது காலக் கொடுமைத் தான். நாம் தமிழர் அமைப்புக் கட்சியாய் மாறியப் போது ஊடகத்தில் பேசிக் கொண்டிருந்த ஆதிசெந்தில் நாதன், சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது செந்தில்வேல், திராவிடத்தைத் தோலுரிக்கிறார் என்பதற்காக அன்றைய மதன் ரவிச்சந்திரன், தீடீர் என்று நாம் தமிழர் மீது பாசம் பொழிந்த ராஜவேல் நாகராஜன், கொஞ்சநாள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த அரசியல் வியாபாரிச் சவுக்குச் சங்கர், அதில் புதிதாய் இணைந்திருப்பவர் சாதியை மையமாய்க் கொண்டு தேர்தல் அரசியலைப் பேசும் ரவீந்திரன் துரைசாமி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இது போன்று பலர் வருவார் போவார் ஆனால் தமிழ்த்தேசிய கருத்தியல் என்பது தமிழர் என்று ஓர் இனம் இந்தப் பூமிப்பந்தில் வாழும் வரை மறையாது. யார் ஒருவர் தமிழருக்கு ஆதரவாகப் பேசினாலும் நாம் அவர்களை எந்த விதப் பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் நமக்கு என்று ஒருவர் வந்துவிட்டார் என்று அவரிடம் வீழ்ந்து கிடப்பது பெருத்த அவமானமாய் முடிந்து விடும், அது தான் இன்றுவரை நடந்திருக்கிறது. சீமான் பெயரைப் போட்டால் அதிகப் பார்வையார்கள் காணொளிக்கு வருவார்கள், தமிழ்த்தேசியம் பற்றிப் பேசினால் அதிகப் பார்வையார்கள் காணொளிக்கு வருவார்கள் என்று இது போன்ற நபர்கள் செய்யும் சுயநல ஆதரவினை முளையிலேயே கிள்ளி எறிவது தான் நல்லது.
தமிழர் நலன் என்று யார் வந்தாலும் அவர் உண்மையிலேயே அந்த உணர்வோடு தான் இருக்கிறாரா என்று நிச்சயம் நாம் தீர்மானிக்க வேண்டும். அப்படி இல்லாமல் முகமூடி அணிந்து வருபவர்களை எல்லாம் ஆதரிப்பது நாம் இன்னும் அரசியல் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே குறிக்கும். இன்று தமிழ்த்தேசிய கருத்தியல் வியாபாரிகள், நாம் தமிழர் கட்சி ஆதரவு வியாபாரிகள் பெருத்து விட்டனர். தமிழர்கள் நாம் விழிப்புடன் இருப்பது மிகவும் நல்லது.
தொடர்ந்து இணைத்திருப்போம், உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நான் பேசிய கருத்துக்களில் உண்மை இருந்ததாய் உணர்ந்தால் உலகத் தமிழர்களுக்குப் பரப்புங்கள்! நன்றி!