துப்பாக்கியால் சுதந்திரம் வாங்கிய தேசம் இனவெறியால் அல்லோலகப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த நாடாய் இருந்தாலும் காவல் துறையின் மிருகப்பலம் உலகமறிந்ததே, ஒரு தனிப்பட்ட கறுப்பின மனிதனின் மரணம், வளர்ந்த நாடான அமெரிக்காவை போர்க்களமாகியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் மாநகராட்சி மன்றத் தலைவர் ( Meyor ) முதற்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளனர் இருந்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எந்த நாடாக இருந்தாலும் மக்களைக் கட்டுப்படுத்த பல உபாயங்கள் இருக்கும் அதில் காட்டுமிராண்டித்தனம் வெளிப்படும் போது உணர்ச்சி கொண்ட மனிதர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
அமெரிக்காவில் நடந்த இந்த ஒற்றைச் சம்பவத்தைத் தூத்துக்குடியில் நடந்த பதிமூன்று போராட்டக்காரர்கள் மீது அரசாங்கம் அரகேற்றிய படுகொலையுடன் நாம் சம்பந்தப்படுத்த முடியாது ஆனால் ஒரு வளர்ந்த நாட்டில் அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் நடந்தேறிய கொடூரத்தை எப்படிக் கையாண்டார்கள் என்பதில் இருக்கிறது நம்முடைய நாகரீக வளர்ச்சி.
அமெரிக்க அரசாங்கம் நடந்த தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி எப்படி இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது. தவறு செய்த காவல் அதிகாரி இன்று சிறையில் இருக்கிறார். ஊர் முழுதும் புகைப்படம் பகிரப்பட்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் யார் என்பது கூட இன்றுவரை அரசாங்கத்தால் தெளிவுபடுத்தப்படவில்லை.
மாட்டுக்கு காயடித்தால் அந்த மாடு அடக்கப்பட்டு அடிமையாய் மாறும்… கொடுத்த வேலையை மட்டும் செய்யும்… அமெரிக்கர்கள் அடிமையாய் மாறாத் தயாராயில்லை… தமிழர்கள் நாம் அடிமையாய் வாழ பழகிவிட்டோம்…