தமிழர்களுக்கென்று தினந்தோறும் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் பெருத்துக் கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னாள் ரங்கராசு பாண்டே தொகுத்து வழங்கிய ஆயுத எழுத்து நிகழ்ச்சியின் இணையதள இணைப்பை நண்பர் ஒருவர் பகிர்ந்தார், அந்த நிகழ்ச்சியின் சாரம் தொகுத்து வழங்கிய விதம் கண்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைத் தைரியமாகக் கேள்வி கேட்கும் உண்மையான செய்தியாளர் வந்து விட்டார் என்று தமிழர்கள் நாம் நம்ப ஆரம்பித்தோம் அவரை ஒரு காலத்தில் சூரிய தொலைக்காட்சியில் சூடு பறக்க நேர்காணலை நடத்திய ரபி பெர்னாட்சுக்கு இணையாக நினைத்தோம்.
தமிழர்கள் நப்பாசையில் மண்ணை அள்ளிப் போட்டு செயலலிதாவின் காலில் விழுந்த ரபி பெர்னாடை போலவே ரங்கராசு பாண்டேவும் சங்கீகளின் பிரதான பிரச்சாரப் பீரங்கி ஆகிவிட்டார். யாரை தான் நம்புவதோ என்று இருந்த தமிழர்களுக்கு நெல்சன்,செந்தில்,குணசேகரன்,கார்த்திகை செல்வன் என்று பலர் அவ்வப்போது சரியாய் தானே இருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் போது, மதன் ரவிசந்திரன் என்பவர் விசுவரூபம் எடுக்கிறார்.
திராவிடர்கள் தன்னைத் துரத்தி துரத்தி அடித்ததாக அடுக்கடுக்காகக் குற்றசாட்டுகளை அள்ளித் தெளிக்கிறார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் கிடுக்கிப்பிடி கேள்விகளால் துளைத்து எடுத்தால் தமிழ்நாட்டு மக்கள் ஆனந்த கூத்தாடுவார்கள். அவர்கள் கூத்தாடியதின் விளைவு தான் பர்கூரில் செயலலிதா தோல்வியைக் கவ்வியதும், ஈழப் படுகொலையோடு கருணாநிதி கட்சி மூட்டை முடுச்சுக்களைக் கட்டியதும்.
திராவிடத்தை ஒரு படி மேலே திமுகாவை மதன் ரவிச்சந்திரன் கடுமையாக எதிர்க்கிறார், இந்துத்துவாதி கிசோரை தொடர்ந்து தன் விவாதங்களில் பயன்படுத்துகிறார். தமிழ்த்தேசியவாதிகளைக் குளிரவைக்கும் விதம் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார் மேலும் திடல்,சூனியர் மணியம்மை,சூனியர் பெரியார் என்று திராவிடத்தைப் பிய்த்து எடுக்கிறார்.
நமது கேள்வி உண்மையில் யார் இந்த மதன் ரவிசந்திரன், அவரது சித்தாந்தம் தான் என்ன, நடுநிலை என்பது ஊடகத்தில் இல்லை, என்னிடம் இருப்பது எதிர்ப்புணர்வு தான் என்று சொல்வதை வரவேற்கிறோம் அதே சமயத்தில் தனிப்பட்ட அவரது திமுக எதிர்ப்பு தமிழர்களுக்கு உதவுமா…தமிழர்கள் ஏமாறப் போகிறார்களா… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்… தமிழர்களே பொறுங்கள்!