0

உங்களால் மறைக்க முடியுமா, எங்கள் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

தமிழ்நாடு முழுக்க நாம் பார்ப்பதெல்லாம் ஈவேரா,அண்ணா,காந்தி மற்றும் ஊர் பேர் தெரியாத ஆங்கிலேயர்கள் சிலைகள் தான். அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயன் சிலையை நம் புலன்களை ஒடுக்கி பிரமிப்பாகப் பார்ப்போம், அடுத்து ஒன்றுக்கும் உதவாத திராவிடத்தை வைத்து நம்மை அடிமைப்படுத்திய திராவிடர்களின் சிலையைக் குக் கிராமங்களின் முச்சந்து வீதி வரை வைத்துக் கும்மியடித்துக் கொண்டிருக்கிறோம்.

உலகம் அதிர ஆண்ட மூவேந்தர்கள் முதல், தமிழர் அதிகாரம் இழந்த ஆங்கிலேயன் ஆட்சி வரை, வீரத்திற்குத் தமிழன் என்பது வரலாற்றுப் பக்கங்களில், எவ்வளவு முயன்றும் மறைக்கப்பட முடியவில்லை, நமது எதிரிகளாலும் துரோகிகளாலும், அது தான் உண்மை.

முத்திரை பதித்த தமிழ் மன்னர்கள், வீரம் சொரிந்த தமிழர் தளபதிகள் என்று தனிச்சிறப்பு மிக்கவர்களை ஆரிய,திராவிட மாயையில் சிக்கிய தமிழர் குடிகள் தயவு செய்து முரண்பட்டுச் சொந்தம் கொண்டாடாதீர்கள். தமிழர் குடியில் பிறந்த எந்த ஒரு மாவீரனும் தமிழினத்தின் சொத்து.

நமக்கு வரலாற்றைப் போதித்தவர்கள் சிப்பாய் கலகம் தான் முதல் புரட்சி ஆங்கிலேயருக்கு எதிராக என்று சொல்லிக் கொடுத்தனர். சிப்பாய் கலகம் நடந்த ஆண்டு எது 1857, தமிழர்களின் வீரத்தை கண்டு ஆங்கிலேயன் சிலிர்த்த வீரன் அழகுமுத்துக்கோன் வாழ்ந்த வருடம் எது 1728-1757. தமிழர் வரலாற்றை மறைப்பதில் ஏன் இவ்வளவு அக்கறை, தமிழர்களே உண்மை வரலாறு படியுங்கள்.

நடிகர் கமல் பல ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் “மருதநாயகம்”. இந்த மருதநாயகம் வேறு யாரும் அல்ல வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களைப் பீரங்கியின் வாயில் வைத்து ஆங்கிலேயனுக்கு வரி கட்டச் சொல்லி மிரட்டிக் கொன்றவர் தான். மருதநாயகதின் உண்மை பெயர் முகமது யூசுப் கான்.

வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகதிற்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் மூன்று மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேடக மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் வீரன் அழகுமுத்துக்கோன்.

நடிகர் கமல் ஏன் ஆங்கிலேயனுக்கு உதவி செய்த மருதநாயகதிற்குத் முதலில் திரைப்படம் எடுக்கிறார், பின்னாளில் மருதநாயகம் ஆங்கிலேயர்க்கு எதிராகத் திருப்பியது வேறு கதை. தமிழர்களே! தமிழ்நாட்டில் தமிழர்களிடம் திணிக்கப்படும் சிறு சிறு விடயங்களிலும் கூட தமிழர்களுக்கு எதிரான அல்லது தமிழர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு பல விடயங்கள் பொதிந்து இருக்கும். தமிழர் வரலாறுகளைத் தேடுங்கள் தெளிவுற படியுங்கள் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துங்கள். நெஞ்சுரம் மிக்க என் பெரும்பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு என் வீர வணக்கம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!