0

கீழடி போய்க் கிண்ணிமங்கலம் சொல்லும் தமிழர் கதை

ஏதாவது எழுத வேண்டும் என்று உட்கார்ந்தால் நமது அரசாங்கங்கள் கொடுக்கும் செய்திக் கடலில் முக்கி எழ வேண்டியிருக்கிறது. ஒரு பிரச்சனையா இல்லை இரண்டு பிரச்சனையா வருடங்கள் பத்தாது இவர்கள் கொடுக்கும் பிரச்சனைகளைப் பேசுவதற்கு.

நம் வரலாற்றைத் தேட கூட நேரம் கொடுக்காமல் இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. நாம் நமது தமிழ் முன்னோர் வாழ்ந்த கிண்ணிமங்கலம் செல்வோம்.

நமது ஆய்வாளர் முனைவர் இரா.மன்னர் மன்னன் பல தகவல்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அவர் சொல்லும் பல தரவுகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. நம் ரத்தநாளங்களில் தமிழன் என்கின்ற திமிர் சாதாரணமாக ஓடவில்லை அதில் விடயம் நிச்சயம் இருக்கிறது.

ஒரு கல்வெட்டுக் கிடைத்திருக்கிறது ஆம் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. தமிழ்நாட்டு வரலாற்றை அந்தக் கல்வெட்டு எப்படித் திரும்ப எழுதப்போகிறது என்பது ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கைகளில் உள்ளது. சைவம்,வைணவம்,புத்தம் இதற்கு எல்லாம் பழைய ஓர் ஆதி சமயம் தமிழர்களின் வாழ்வியலில் இருந்திருக்கிறது அது தான் ஆசிவகம். இன்றும் அந்த ஆசீவக சமயத்தைப் பின்பற்றும் ஏகநாதன் குருகுலம் பள்ளிப்படை என்று ஒரு மடம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது அகழ்வாராய்ச்சியாளர்கள் அந்த மடாதிபதிகளிடம் உரையாடியபோது அவர்கள் பகிர்ந்த பல பொருட்கள் கீழடியில் கிடைத்த பொருட்களை ஒத்திருந்தன ஆனால் ஓர் அதிசயம் என்னவென்றால் அவர்கள் காட்டிய ஒரு கற்தூணில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழர்கள் கற்களைக் கொண்டு கட்டிடங்களைக் காட்டியதே பல்லவர்கள் வந்த பின் தான் என்று இருந்த ஒரு வாதத்தை இந்தக் கற்தூண் பொடி பொடியாக்கிவிட்டது.

பொதுவாக இதுவரை நமக்குக் கிடைத்த தமிழி எழுத்துக்கள் பானை ஓடுகளிலோ, கற்படுக்கைகளின் சுவற்றினிலோ, பாறைகளிலோ எழுதப்பட்டிருந்தது ஆனால் முதல் முறையாகக் கற்தூணில் தமிழி எழுத்துக் கிடைத்தது இங்குத் தான். மேலும் தமிழி எழுத்துக்கள் எதாவது இருக்கிறதா என்று தேடிய பொழுது தமிழனின் வரலாற்று புதையல் அவர்கள் பயன்படுத்திய சமையல் செய்யும் அடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கல்லில் இருக்கும் கரி துகள்களைக் கழுவி சுத்தம் செய்து பார்த்தால் அது தமிழ் வட்டெழுத்து வகையைச் சார்ந்ததாக இருந்தது. இங்கு என்ன ஓர் ஆச்சரியம் என்றால் இரண்டு தமிழி எழுத்துக்களும் வேறு வேறு நூற்றாண்டை சேர்ந்தவை ஆனால் பொருள் மட்டும் ஒன்றே. நமக்கு மயிர் கூச்சம் எடுக்கும் அளவிற்குத் தமிழர் வரலாற்றுத் தேடுதல்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன.

நமது காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் கோட்டம் என்கின்ற சொல் வருகிறது, இலக்கியங்களை நாங்கள் வரலாற்று சான்றுகளாக எடுத்துக் கொள்வது இல்லை என்று தமிழனை ஏளனமாகப் பார்த்தவர்களின் மண்டையில் கொட்டும் விதமாக நமக்குக் கிடைத்திருக்கும் கற்தூண் தமிழி எழுத்து அவர்களைப் பார்த்துப் பரிகாசிக்கிறது.

தமிழருக்கு என்று தனியாக நாகரீகம் எதுவும் இல்லை என்று வடஇந்திய வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர் போன்றோர் முழுதாக ஆராயாமல் கருத்தை திணித்தனர். முதன் முதலில் வடஇந்தியாவில் கிடைத்த அசோகா பிராமி எழுத்துக்களை மைய படுத்தி அவர் இப்படி ஒரு வாதத்தை வைக்க ஐராவதம் மகாதேவன் போன்றோர் அதை அப்படியே ஒத்துக்கக் கொள்ள முதலில் கண்டு பிடிக்கப்பட்டதால் அங்கிருந்து தான் தமிழ்நாட்டிற்கு நாகரீகம் இறக்குமதியானது என்கின்ற அடிமுட்டாள் வாதம் வடஇந்திய வரலாற்றாசிரியர்களால் திணிக்கப்பட்டது.

ஏகநாதன் குருகுலம் பள்ளிப்படையில் நமக்குக் கிடைத்த கற்தூண் தமிழி எழுத்து மூலம் சங்க காலத்தில் தமிழன் கற்கள் கொண்டு கட்டிடம் கட்டினான், அவனுக்கென்று தரமான மொழி இருந்தது, தற்சார்பாய் அவன் வாழ்ந்தான் என்று மிகத் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் இன்று தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது…

கடல் பொங்க அலையில்
கரையான் வாயில்
சுடர் எரி நாவில்
வழிபடும் ஆற்றில்
தப்பிப் பிழைத்த தமிழே!

ஒரு நாள் வரும் நல்ல தமிழ் உணர்வுள்ள தமிழன் கையில் தமிழர்களின் ஆட்சி அதிகாரம் வரும் அன்று நமக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!