உலகத்தில் எவ்வளவோ விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன ஆனால் நமக்கு நாம் தமிழர் கட்சியில் ஒரு வார காலமாக நடந்து கொண்டிருக்கும் விடயங்களில் தான் முழுக் கவனமும் இருக்கிறது, மற்ற விடயங்களில் மனது ஒன்றவில்லை சீமான் அண்ணன் சொன்ன “என் கட்சி” என்கின்ற வார்த்தை சமூக ஊடகங்களில் விவாத பொருளாயிருக்கிறது. தமிழ்த்தேசியம் என்பது என்ன என்கின்ற வரையறையை ஆளாளுக்கு ஒரு வித புரிதலில் வைத்திருப்பதே நாம் தமிழர் கட்சியின் இத்தனை பிரச்சனைக்கும் அடிநாதம் என்று நான் நினைக்கிறேன். தமிழ்த்தேசியம் என்கின்ற தமிழ் மொழி சார்ந்த தமிழர் நலன் சார்ந்த தமிழர் நிலம் சார்ந்த ஒரு பார்வை தமிழரை பொறுத்தவரை எல்லாவற்றையும் விடப் பெரிது.
தமிழ்த்தேசியமும் திராவிடமும்!
திராவிடத்தால் ஊறிப் போயிருந்த பெரும்பான்மை தமிழர்களை நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசிய தீயை மூட்டி கொழுந்துவிட்டு எரிய செய்திருக்கிறது என்பது திட்டவட்டமான உண்மை, அதைத் தாண்டி நாம் தமிழர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக அதற்கு இருக்கும் சுதந்திரத்தை நாம் விட்டுக்கொடுத்து தான் ஆகவேண்டும். அரசியல் கட்சி என்று வந்துவிட்டால் நமக்கு முன்னிருக்கும் இரண்டு பெரிய உதாரணங்கள் திராவிட முன்னேற்ற கழகமும், அசாம் கணபரிச்சத்தும் இரண்டும் மாணவர் சக்தியால் ஆட்சிக்கு வந்தவை சொல்ல போனால் அசாம் கணபரிச்சத் முழுக்க முழுக்க மாணவர் கட்டமைப்பு. இன்று இந்த இரண்டு கட்சிகளும் இருக்கும் கொள்கை நிலை என்ன. இந்த இரண்டு கட்சிகளும் உதித்த நேரத்தில் இருந்த கொள்கை நிலைப்பாடு என்ன. நாம் தமிழர் கட்சியில் தமிழ்த்தேசிய நுணுக்கங்களை நாம் எதிர்பார்த்தால் நிச்சயம் அஃது ஓர் அரசியல் கட்சியாக இயங்கமுடியாது என்கின்ற உண்மையை நாம் நிச்சயம் அறியவேண்டும்.
மக்கள் இயக்கம் அரசியல் கட்சி இல்லை!
தமிழ்த்தேசியர்கள் வலுவான மக்கள் இயக்கத்தை (அரசியல் கட்சி அல்ல) ஏற்படுத்துங்கள் அதை விட்டு நாம் தமிழர் கட்சியை இப்படித் தான் செய்யவேண்டும் அப்படித் தான் செய்யவேண்டும் என்று வழிநடத்த முயற்சித்தால் அது தோல்வியிலேயே முடிவடையும். மனபலமும்,பணபலமும், அர்ப்பணிப்பும் தமிழ்த்தேசிய இயக்கத்திற்குத் தேவை தமிழ்த்தேசியத்தின் இலக்கு அரசியல் அதிகாரம் மட்டும் இல்லை அந்தப் போட்டியில் இப்போது இருப்பது நாம் தமிழர் கட்சி அதன் பணியை அது செய்யட்டும் அதைச் சார்ந்து தமிழ்த்தேசிய இலக்கை அமைக்காதீர்கள். முதல் இலகிற்கே நாம் இன்னும் தயாராகவில்லை, மீண்டும் சொல்கிறேன் தமிழ்த்தேசிய இலக்கை பெரிதாய் வையுங்கள் கட்சி அரசியலை அதன் போக்கில் விடுங்கள்.
மீண்டும் சந்திப்போம்…