0

பாரிசாலன், ராஜவேல் நாகராஜன், மதன் யார் யோக்கியன் ? | @TamilanSankar

சமீபத்தில் பாரிசாலன் மற்றும் ராஜவேல் நாகராஜன் காணொளியை பார்த்தேன், ஏற்கனவே தமிழ்த்தேசிய உள்முரணில் நாம் தமிழர் கட்சியும் தமிழ்த்தேசிய கருத்தியலும் படாதா பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் நாம் தமிழர் கட்சியை ஆதரித்துவிட்டால் அவர் தமிழ்த்தேசியவாதி என்கின்ற மனநிலை நாம் தமிழர் கட்சியில் இருக்கும் தம்பி தங்கைகளுக்கு வந்துவிடுகிறது, ஆனால் அஃது அப்படி இல்லை. ஒரு கருத்தியலுக்கும் அதைச் செயல்படுத்த வந்த அமைப்புக்கும் எப்போதாவது முரண் நிச்சயம் வரும் அது போன்ற சமயங்களில் வாதி பிரதிவாதங்கள் நிச்சயம் வந்து தான் ஆகும். எடுத்துக்காட்டுக்கு ஆரம்பக் காலத்தில் இருந்து தமிழ்த்தேசிய வரையறை நாம் தமிழர் கட்சியில் காலத்திற்கு ஏற்ப திருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆரம்பக் கட்டத்தில் தீவிரமாகப் பரப்பபட்ட கருத்துக்கள் பின்னாளில் அதன் தீவிரம் குறைக்கப்பட்டது வரலாறு குறிப்பாக ஈவேரா எதிர்ப்பு என்பது நாம் தமிழர் கட்சியின் ஆரம்பக் காலக் கட்டத்தில் தீவிரமாகப் பேசப்பட்டது ஆனால் இன்றோ ஈவேரா தமிழர்களுக்கு வழிகாட்டி என்கின்ற ரீதியில் பார்க்கப்படுகிறது வருடம்தோறும் அவருக்கு வீரவணக்கம் செய்யப்படுகிறது, அதே போல் வழக்கறிஞர் ராசீவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்த போதே திராவிடத்தை எதிர்க்க கூடாது என்பது போல் தான் கருத்துக்களைப் பகிர்வார்.

என்னைப் பொறுத்தவரை கல்யாணசுந்தரம் மற்றும் ராசீவ்காந்தி வெளியேற்றத்திற்கும் நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய கருத்தியலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது, தமிழ்த்தேசியர்கள் நாம் தமிழர் கட்சியிலும் இருக்கிறார்கள் பலர் வெளியேயும் இருக்கிறார்கள். இவர்கள் சமூக ஊடகங்களில் நிகழ்த்தும் விவாதங்களே கல்யாணசுந்தரம் மற்றும் ராசீவ் காந்தி பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தமிழ்த்தேசியர்கள் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் கொள்கைக்குள் வைத்திருக்க வேண்டும் எனும் முயற்சி அல்லது நாம் தமிழர் கட்சி இப்படித் தான் பயணிக்க வேண்டும் என்கின்ற அவர்களது எண்ணம் கல்யாணசுந்தரம் மற்றும் ராசீவ்காந்தி வெளியேற்ற பிரச்சனையில் வெளிப்படுகிறது.

இப்போது நாம் பாரிசாலன் மற்றும் ராஜவேல் நாகராஜன் பிரச்சனைக்கு வருவோம், பாரிசாலன் ஈவேரா எதிர்ப்பு என்பதில் தெளிவாக இருக்கிறார், இந்த விடயத்தில் நாம் தமிழர் கட்சியுடன் அவரால் இணைந்து செயல்பட முடியவில்லை அதே சமயத்தில் நாம் தமிழர் கட்சிக்கு தான் நான் ஓட்டுபோடுவேன் எனக்கு வேறு கட்சி இல்லை என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். ராஜவேல் நாகராஜனோ தான் ஒரு தமிழ்த்தேசியவாதி என்கிறார் நாம் தமிழர் கட்சியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், ஆனால் பாரிசாலன் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நேரடி பதில் சொல்லாமல்

பாரிசலானை தனிமனித தாக்குதலுக்கு உள்ளாக்குகிறார். இங்கு ராஜவேல் நாகராஜன் செய்வது சுத்த அயோக்கியத்தனம் திராவிடத்தை மறைத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகளை ஏமாற்றித் தமிழ்த்தேசியர் போல் வேடம் போட்டுச் சொல்ல போனால் தமிழ்த்தேசியத்தை நீர்த்துப் போகும் வேலையைத் தான் அவர் செய்கிறார். மதன்ரவிச்சந்திரனாவது தனிநபர் புகழுக்கு தான் செய்கிறேன் என்பதை ஒப்புக் கொண்டு தமிழ் மக்களிடம் வருகிறார், இந்த ராஜவேல் நாகராஜனோ செய்தொழில் நேர்மை இன்றித் தன் வலையொளியை வளர்க்க நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள் வளர்ந்த பின் உதறிவிட்டுத் திராவிடத்திற்குச் சொம்பு தூக்க போகிறார்… அவர் நடவடிக்கைகள் அதைத் தெளிவுபடுத்துகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய தமிழ்த்தேசியர்களை நாம் தமிழர் கட்சி பார்ப்பதற்கும் இந்த ராஜவேல் நாகராஜன் போன்றோர் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. திராவிடம் புதுப் புது வேடங்களில் வருகிறது நாம் தெளிவாய் இருக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!