ஒரு நாட்டின் முக்கிய உறுப்பானது மக்கள் தான் ஆனால் அந்த மக்களுக்கான வளர்ச்சி என்கின்ற பெயரில் ஒரு பக்கம் ஊக்கத்தையும் மறுபக்கம் நடுக்கத்தையும் விதைத்து விட்டு ஏற்கனவே முன்னேறிய நாடுகள் உதறிய அறிவியல் வளர்ச்சியை எல்லாம் வளர்ச்சி பட்டியலில் காட்ட முயற்சி செய்வதும் அதையும் தேசபக்தி என்று பெயரில் பரப்புரை செய்வதும் ஏன் என்று தெரியவில்லை.
பூமி பந்தில் தன் அதிகாரத்தில் இருக்கும் நிலத்தையும் நீரையும் காற்றையும் அறிவியல் துணைக் கொண்டு காத்துக் கொள்ள இயலாத ஒரு நாடு நிலவில் ஆராயக் கோடான கோடி பணத்தை விரயம் செய்வதெல்லாம் மக்களுக்கானது மக்களின் வளர்ச்சிக்கானது என்று செம்மறி ஆடுபோல் என்னால் தலையாட்ட முடியவில்லை.
பனிப்போர் நிலவிய காலத்தில், நிலவில் முதலில் யார் கால் வைப்பது என்று ரசியாவும், அமெரிக்காவும் நடத்திய போட்டியே இன்றைய விண்வெளி ஆராய்ச்சிக்கான அடித்தளம். அன்று அமெரிக்காவிற்குத் தேவைப்பட்ட தேசபக்தி பரப்புரை இன்று இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது.
இஃது ஆராய்ச்சி கட்டுரை அல்ல அப்படி இருந்திருந்தால் பல காரணங்களை நான் இங்கு அடுக்கி இருக்க முடியும். நம்மிடம் இருப்பது எல்லாம் மிக எளிமையான கேள்விகள் தான்.
மனிதவளத்தில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு, மக்கள் வளர்ச்சியில் சாதிக்க ஆயிரம் விடயங்கள் இருக்கும் போது அதையெல்லாம் செய்யாமல், மேற்கத்திய நாடுகள் தங்கள் வளத்தை வீணாக்கிய அதே விடயத்திற்குப் பெருமளவு வளத்தை வீணடிப்பது ஏன் என்பது மிக எளிமையான கேள்வி.
தன் நிலத்தின் பாதுகாப்பிற்காக உலக நாடுகளிடம் ஆயுதங்களுக்கு இரந்து நிற்கும் நாடு நிலவில் ஆராய்ச்சி செய்வது ஏனோ ?
தமிழர் கப்பற்படை தடங்களும், சந்திராயன் தமிழர்களும் இந்திய தேசபக்தியில் அடையாளம் இழப்பது வேடிக்கையன்றி வேறு எதுவும் இல்லை.