0

வள்ளலார் மேல் திமுகவிற்கு என்ன கோபம் ? Vallalar Peruvazhi Controversy #dmkfails

தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

இன்றைய பதிவில்/காணொளியில், வள்ளலார் பெருவழி தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை ஆழமாக ஆராய உள்ளோம். சமீபத்தில், தமிழ் நாடு அரசின் வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை அமைக்க முயற்சிப்பதால் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பின்னணி:

வள்ளலார் பெருவழி, அருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் கொள்கைகள் மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. வள்ளலார் தனது வாழ்க்கையில் அன்பையும் , கொல்லாமையும் , அதன் வழியான வாழ்க்கை முறைகளையும் வலியுறுத்தினார். எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளை கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாக ‘கொல்லாமை’  எனும் உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர் அதன் அடிப்படையில் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று பாடியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது.  வடலூர் சத்திய ஞானசபை அவரது முக்கியமான ஆன்மிக மையமாக விளங்குகிறது. இங்கு, ஒவ்வொரு மாதமும் சோதி தரிசனம் மற்றும் தைப்பூசம் போன்ற பெரும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும்.  

தற்போதைய பிரச்சினை:

தமிழ் நாடு அரசு வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை அமைக்க சுமார் 70 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைவதாக அறிவித்தது. இந்த மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் பல ஆன்மிக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், ‘இந்த மையம் ஆன்மிக நிகழ்வுகளுக்கு இடையூறாக அமையும்’ என்பதற்காகவே போராட்டம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் விழா, ஜோதி தரிசனம் போன்ற நிகழ்வுகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை நினைவில் கொண்டு, இந்த மையம் அமைப்பது பக்தர்களின் ஆன்மிக அனுபவத்தை பாதிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மக்களின் எதிர்ப்பு:

பார்வதிபுரம் மற்றும் அதைச் சூழ்ந்த பகுதிகளில் மக்கள், தங்கள் மூதாதையர்கள் தானமாக வழங்கிய நிலம் பெருவெளியாகவே இருக்க வேண்டும் எனக் கூறி, இந்த மையத்தின் அமைப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், 161 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அரசியல் எதிர்ப்பு:

இந்த திட்டத்துக்கு எதிராக, தமிழ்த்தேசிய பேரியக்கம் ஐயா பெ.மணியரசன் தலைமையில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர், தமிழ்நாட்டின்  எதிர்கட்சியினர் பலரும் கடுமையாக இந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், ‘இந்த மையம் உருவாகும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகின்றனர். இதனால், அரசியல் சூழல் மேலும் கடுமையாகியுள்ளது. நமக்கு இருக்கும் ஒரு கேள்வி என்ன வென்றால் வள்ளலாரை உலகளாவிய அளவில் எடுத்து செல்வதாய் சொல்லும் திராவிட திமுகா அரசாங்கம் ஏன் சென்னையில் இந்த மையத்தை அமைக்க கூடாது. ஆன்மிகத்தில் அரசியல் கலந்தாலும் அரசியலில் ஆன்மிகம் கலந்தாலும் என்ன நடக்கும் என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். வள்ளலார் பெருமகனார் அவரின் கொள்கைக்கு சற்றும் பொருத்தும் இல்லாதவர்கள் அவருக்காக செய்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டுவதுடன் இதில் இருக்கும் உள்ளீடான உண்மை என்பது வள்ளலாருக்கு அவரை பின்பற்றும் அடியவர்களுக்கோ எந்த விதத்திலும் நன்மை சேர்க்காது என்பதை நாம் திட்டவட்டமாய் சொல்லலாம். அரசாங்கம் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் குறை சொல்வதா என்றால் வேறு வழியில்லை ஊழலில் திளைத்தது திமுக ஆட்சி என்பது இன்றைய தலைமுறைக்கு நன்கு தெரியும்.

தீர்வு:

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, அரசு மற்றும் பொதுமக்கள் இடையே தெளிவான பேசுவார்த்தைகள் நடைபெற வேண்டும் அதன் அடிப்படையில் வேறு ஒரு இடத்தில் அந்த மையத்தை கட்டவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. வள்ளலார் பெருவழி அவரது ஆன்மிக கொள்கைகளை பாதுகாப்பதுடன், பக்தர்களின் ஆன்மிக அனுபவத்தை காக்கும் வகையில், இதன் அமைப்பு மற்றும் பயன்பாடு பற்றிய தீர்வுகள் இருக்க வேண்டும்.

இந்த பிரச்சினை தமிழ் சமூகத்தில் மட்டுமின்றி உலகளாவிய தமிழர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இந்த முக்கியமான பிரச்சினையை பற்றிய  உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!