0

நடுநிலை இல்லை, வாழ்த்துக்கள் மதன்!

ஒரு வழியாக மதன்,ஏகலைவன் என்று ஊடக சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சி தொடங்கிவிட்டது. இதுவரை திராவிட,ஆரிய ஊடகங்களின் இரும்புப் பிடியில் இருந்த தமிழ் நாடு அந்த இருண்ட காலத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சி இந்தத் திராவிட, ஆரிய ஊடகங்களை இனி துளைத்து எடுத்துவிடும். மக்களை ஏமாற்றும் போலி நடுநிலை ஊடகங்கள் இனி மதன், ஏகலைவன் போன்றவர்களின் சமூக ஊடகங்களை எதிர்கொள்வது எளிதல்ல.

ஏன் என்கின்ற கேள்விக்கு இருக்கும் வலிமையைச் சொற்களில் கொண்டுவர முடியாது, உலக வரலாற்றில் நடந்த பல அற்புதங்களுக்கு “ஏன்” என்கின்ற கேள்வியே மூலக்காரணம். நடுநிலை வேடம் போட்ட தமிழ்நாட்டு ஊடகங்கள் “ஏன்” என்ற கேள்விகளை முழுங்கி உமிழ்ந்த பல பொய்களில் எழுந்த பல பிம்பங்கள் இனி பொல பொலவென்று உதிரப்போகின்றன.

இதுவரை இவர்கள் கட்டிவைத்த அமைப்புகள், வலைப்பின்னல்கள் கொட்டிய பொய்கள் காட்டுச்செடிகளாய் கட்டற்றுத் தமிழர்களை மறைத்தவை வெட்டி வீழ்த்தப்படப்போகின்றன. சனநாயத்தின் முக்கியத் தூணான பத்திரிகைகள் அதன் தர்மத்தை தொலைத்து நடுநிலை வேடத்தில் சீரழித்த கருத்துத் துயரங்கள் இனி நிவாரணம் அடையும் என்று நம்பிக்கை பிறக்கிறது.

மதன் அவர்கள் குறிப்பிட்டது போல் நடுநிலைமை என்பது சரியான பதம் இல்லை, எதிர்ப்புணர்வில் எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் அங்கு உண்மை இல்லை என்றே அர்த்தம். இனி எதிர்ப்புணர்வு கொண்டு பல கோடி ஊடகங்கள் உருவாகட்டும் அவைகள் கேட்கும் கேள்வி அம்புகளால் பொய் பரப்பி வேடம் போடும் ஊடகங்கள் ஊரைப் பார்க்க ஓடட்டும்.

வாழ்த்துக்கள் மதன்!!!

தமிழன் சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!