0

போதும் நிறுத்துங்கள்! உங்கள் போர்க்கள ஆய்வுகளை!

ராணுவ வீரர்களின் உயிர் என்றால் அதற்கு மரியாதை இல்லையா, மரண முகடுகளில் நின்று கொண்டு எல்லையையை காப்பவர்கள் அனாமத்தாகக் கொல்லபடுவதும் அவர்களுக்கு வீரவணக்கம் என்கின்ற பெயரிலும், தேசபக்தி என்கின்ற பெயரிலும், சாமான்ய மக்களிடம் அரசாங்கங்களின் தவறுகளை மறைக்க வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்களால் செய்தி பரப்புவது வேடிக்கையாகத் தான் உள்ளது.

இந்திய சீன எல்லையில் இந்தியாவின் எல்லைக்குள் சீன ராணுவம் முகாம்களை அமைத்திருந்ததாகவும், அதை அகற்ற அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்த கர்னல் சந்தோசு பாபு தலைமையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பல நாடுகளில், அவர்கள் விட்டுச் சென்றதும் நடந்த பல அனர்த்தங்களால், பல நாடுகளில் எல்லை பிரச்சனை இன்று வரை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆளும் போது தமது இருப்புக்கரம் கொண்டு, தமது ஆட்சிக்கு எந்தப் பாதகமும் வரமால் எல்லைக்கான வரைபடங்களை உருவாக்கியிருந்தனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடுகள் சுதந்திரம் அடைந்த போது நிறுத்தி நிதானமாகச் செய்யப்படவேண்டிய கையளிப்புகளைச் செய்யாமல் எனக்கு என்ன இருக்கிறது என்று அவர்கள் போனதின் விளைவு எல்லைச் சண்டைகள் இன்றளவும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்யும் போது நாம் வீரவணக்கம் செய்கிறோம் அவ்வளவு தானா நமது கடமை முடிந்துவிட்டதா, அவர்களின் உயிரிழப்புகள் தேசபக்திக்கு ஓர் அடையாளம் மட்டும் தானா, அமைதியான ஒரு நாட்டில் ஒரு ராணுவ வீரன் கொல்லப்படுகிறான் என்றால் நாகரீக உலகில் அந்த ராணுவ வீரன் இறந்த இடத்தில் முதலில் மனித உரிமை மீறப் படுகிறது என்று அர்த்தம். ஊடகங்கள் மட்டும் அல்ல சில வலையொலிகளை (YouTube ) நடத்தும் வீணர்கள் இந்தியாவும் சீனாவும் போரில் இறங்கினால் என்ன நடக்கும் என்று ஆய்வு நடத்தும் அளவிற்குப் போய்விட்டார்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், ஊடகம் என்பது சுதந்திரமாகச் செயல்படவேண்டும், அரசாங்கத்திற்கு ஒத்து ஊதுவது மட்டும் தான் தங்கள் வேலை என்று நடப்பது என்றும் நல்லதல்ல. ஊடகங்கள் தான் இப்படி இருக்கின்றன என்று சமூக ஊடகத்திற்கு வந்தால் அப்பப்பா எத்தனை வீராவேச கதைகள்…

மனிதஉரிமை என்றும் தேசபக்தி என்றும் நேரத்திற்கு ஒரு முகமூடி அணியும் கூட்டம் பொது ஊடகத்திலும் சமூக ஊடகத்திலும் நிறைந்திருக்கிறது மக்களே கவனமாக இருங்கள்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!