0

நீங்கள் மனிதர்கள் தானா காவலர்களே?

எதிரி நாடுகளிடம் இருந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற ராணுவம், உள்நாட்டில் இருக்கும் குற்றவாளிகளிடம் இருந்து தன் சொந்த மக்களைக் காப்பாற்ற காவல் துறை, இந்த அடிப்படை விதியில் தான் நாடு என்கின்ற கட்டமைப்பே உருவாகியது. நாம் இப்பொழுது எங்கு இருக்கிறோம் என்று பாருங்கள் மக்களே! பல நாடுகளில் தன் நாட்டு மக்கள் மீதே போர்விமானம் கொண்டு தாக்குவதை நாம் பார்த்திருக்கிறோம், அமைதி வழிப் போராட்டங்களின் போது காட்டுமிராண்டித் தனமாகக் காவல்துறை செயல்படுவதை நித்தம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மனித நாகரீகம் வளர்ச்சி அடைந்துவிட்டது என்று அரசியல்வாதிகள் மேடை தோறும் பேசுவதும், உலகத் தலைவர்கள் மனித நாகரீகத்தைப் பற்றியும் மனித உரிமை பற்றியும் உலகரங்கங்களில் பேசுவதையும் நாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் மனித நாகரீகம் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, மனித உரிமைகள் காப்பாற்றப்படுகின்றனவா என்று நாம் பார்த்தல், அப்படி நடப்பதாகத் தெரியவில்லை.

கொரோனா போன்ற தொற்று நோய் காலத்தில் மக்கள் மிக அவலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் தந்தை மகன் என்று குடும்பத்தில் இருக்கும் முக்கிய இரு நபர்களைக் கைது செய்வதும், கட்டற்ற அதிகாரம் தன் வசம் இருப்பதால், காவல்துறையின் இருட்டு அறைகளில் மனிதனை விலங்குகளைத் துன்புறுத்துவது போல் கொடுமைக்கு உள்ளாக்கும் அவலம் எல்லாவற்றையும் நாம் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருக்கவேண்டும் என்பது எல்லாம், என்ன விதமான குரூர சிந்தனை.

தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தில், திரு.ஜெயராசு மற்றும் அவரது மகன் பென்னிக்சு இருவரும் சேர்ந்து கைபேசி விற்பனையகம் நடத்தி வந்துள்ளார்கள். கொரோனா கட்டுப்பாடு சமயத்தில், தங்கள் கடையை இரவு 8 மணிக்கு மேல் திறந்து வைத்ததாகக் காவல்துறை குற்றம் சாட்டி அழைத்துச் சென்று இருவரும் மரணமடையும் அளவிற்குக் கொடுமைகளைச் செய்துள்ளது.

எந்த மாதிரியான நாகரீக வளர்ச்சி நமது அமைப்பு முறையில் உள்ளது, மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான இலக்கா.

இன்று நம் கண்ணிற்குத் தெரியும் இந்தக் காவல் துறை அதிகாரிகள் போல் எண்ணற்றவர்கள் மனநோயாளிகளாய் மாறி குற்றவாளிகளையும் அப்பாவி மக்களையும் ஒரே மாதிரி பார்க்கும் அவல நிலைப் பெருகிக் கொண்டிருக்கிறது. அப்பாவி பொது மக்களுக்கே இந்த நிலை என்றால் குற்றவாளிகள் இவர்களுக்கு மனித வடிவில் ஒரு விலங்குகள் தான் கேட்க நாதியின்றி மனித உரிமைகள் காற்றில் பறக்கும்.

பெருவாரி மனிதர்கள் நீதிக்கு தலைவணங்கி வாழும் நாட்டில் அயோக்கியர்கள் கூட்டம் மட்டும் அரியணை ஏறிக் கொண்டிருந்தாள். இந்த வசனம் தான் காதில் ஒலிக்கிறது.

“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்”

உணருங்கள்! உங்கள் ஓட்டுக்கள் அயோக்கியர்களை மட்டுமே அரியனையேற்றுகிறது.

உங்கள் ஓட்டின் வலிமையை உணருங்கள், நல்லவர்களை அரியனையேற்றுங்கள்!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!