0

பனிப்போரா இல்லை மூன்றாம் உலகப்போரா!

ஒரு பக்கம் இசுரேல் என்கின்ற யூதர்கள் நாடு அமைதிவழி பேச்சுவார்த்தை இல்லாமல் அமெரிக்காவின் ஒத்திசைவில் பாலசுதீனியர்களின் பகுதிகளை வலுக்கட்டாயமாக இசுரேலுடன் இணைக்க ஆரம்பித்திருக்கிறது. இன்று உலக நாடுகளின் பிரச்சனைப் பட்டியலில் பாலசுதீனியர்களின் பிரச்சனை பின்னுக்குச் சென்றுவிட்டது அதனால் அங்கு ஒரு தேசிய இனம் இசுரேலியின் அதிகாரத்திற்குள் அடங்கியோ போராடியோ தான் வாழ்க்கை நடத்தவேண்டிய கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய வெளியுறவு கொள்கைகள் எப்பொழுதுமே உளவுத்துறையின் சுயநல நோக்கம் கொண்ட ஆலோசனைகளின் வெளிப்பாடுகளாய் தான் இதுவரை அமைந்திருக்கின்றன. தமிழீழத்தில் தமிழர்களின் ராணுவ பலம் முற்று முழுதாக அழிக்கப்பட்டு, நடந்தேறிய கொடூர இனப்படுகொலையும் அதை தொடர்ந்து தமிழ்நாடு பூகோள அரசியலில் முக்கிய போர்க்கள தளமாக மாறிக் கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே. ராணுவ தளவாடங்களுக்கான தொழிற்சாலைகள் , அணுமின் நிலையங்களை தமிழ்நாட்டில் நிறுவும் போதே தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இன்று சீனர்களும் சிங்களர்களும் நெருங்கி இருக்கும் வேளையில் இந்தியாவில் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே.

வெளியுறவு கொள்கைகள் திறம்பட வடிவமைக்கப்படவில்லை என்றால் உலக அரங்கில் ஆசியாவில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியா தலைக்குனிய வேண்டி வரும். ஒரு காலத்தில் நமது நட்பு நாடக இருந்த நேபாளத்தில் இரண்டு பெருவழிச் சாலைத்திட்டங்கள் சீன எல்லைக் கிராமங்களை நேபாளத்துடன் இணைக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக அரணிக்கோ( Araniko ) நெடுஞ்சாலை நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவையும் சீன நாட்டு எல்லையில் இருக்கும் கோதாரி( Kodari ) கிராமத்துடன் இணைக்கிறது. இரண்டாவதாக நேபாளத்தில் இருக்கும் சியாபிருபேசி( Syaphrubesi ) கிராமத்தை சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்துடன் இணைக்கும் ஏற்கனவே போடப்பட்டிருந்த குண்டும் குழியுமான மண் சாலையை நவீனப்படுத்த 20 மில்லியன் அமெரிக்க வெள்ளி (USD) பணத்தை சீன அரசாங்கம் கொட்டியுள்ளது. இந்தச் சாலை சீன நாட்டின் 318 நெடுஞ்சாலையை இணைக்கிறது அதன் மூலம் சீனாவின் முக்கிய நகரான சாங்காய் ( Shanghai ) யை எளிதில் அடைந்துவிடலாம். இந்தியாவோ நேபாளத்தின் உள்ளரசியலை சரிவரக் கையாலாத நமது உளவுத்துறையின் ஆலோசனைகளால் நேபாளத்தின் நட்பை இழந்துள்ளது. நேபாளம் தனது நாட்டின் வரைபடத்தில் இந்தியாவின் சில பகுதிகளையும்( ஆங்கிலேயர் கால எல்லைப் பிரச்சனைகள் ஒரு தனிக்கதை) இணைத்து இந்தியாவை எதிர்க்கும் அளவிற்குப் பகைநாடக மாறியுள்ளது.

சீனா நட்பு நாடுகளை இந்தியாவைச் சுற்றி ஏற்படுத்திவிட்டது இதன் காரணம் மிக எளிது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்குப் போட்டியாக வரமுடியாது, ஆகையால் இந்தியாவைக் கட்டுப்படுத்தி வைப்பது சீனாவிற்கு மிக முக்கியமான விடயம். இந்தியாவோ தமது நெருங்கிய நாடுகளிடம் உறவுகளைப் பேணாமல் இதுவரை எதோச்சதிகாரம் செய்துகொண்டிருந்த அமெரிக்காவுடன் வலிய நட்புறவை பேண யத்தனிக்கிறது, இதன் ஒரு பகுதியாக G-7 உச்சி மாநாட்டிற்கு ஆத்திரேலியா, இந்தியா,தென் கொரியா,ரசியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சோவியத் ரசியாவின் பனிப்போர் முடிந்து இப்பொழுது அமெரிக்கா மற்றும் சீனா போடப் போகும் பனிப்போர் சிக்கலில் உலகம் பிரயாணிக்கிறது.

இந்தியா போன்ற பல தேசிய இனங்கள் இருக்கும் நாடு இதைச் சரிவரக் கையாலாவிட்டால், உலக மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கும் நாடு ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைநாடாகவே இருக்க நேரிடும்.

இதை உணர்ந்து இந்தியா செயல்படவேண்டும், இந்திய வெளியுறவுக் கொள்கைகள் அமையவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!