0

தமிழா! ரிலையன்ஸ் சியோ வாங்கலையா!

தமிழர்கள் நாம் தொலைத் தொடர்புத் துறை சாதனங்களைப் பயன்படுத்துவது, அந்தச் சாதனங்களைப் பற்றிப் பெருமை பேசுவது, அதில் வரும் செயலிகள் (Application) மற்றும் விளையாட்டுகளை (Games) விளையாடுவதோடு பெரிய அளவிற்குச் சிந்திப்பது இல்லை. பொருளாதாரம், பூகோள அரசியல் இதில் எல்லாம் நாம் கவனம் செலுத்துவது இல்லை. தமிழீழ தேசத்தில் தமிழர்கள் படை அழிந்த பிறகு பூகோள அரசியலில் தமிழன் செல்லாக்காசாகி ஒன்றுக்கும் உதவாத நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறான்.

அமெரிக்கா மற்றும் சீன தேசத்தின் வர்த்தகப் போரில் விறுவிறுப்பான பூகோள அரசியல் நாள்தோறும் புதுப் புது மாற்றங்களைப் பிரசவித்துக் கொண்டிருக்கிறது. சீனாவின் அசுர வளர்ச்சியில் கலங்கிப் போன அமெரிக்கா ஒன்றுக்கும் உதவாத அதன் பல பொருளைகளைச் சீனா வாங்கினால் தான் வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறையைச் சரி செய்ய முடியும் என்று வர்த்தகத்தில் பல முட்டுக்கட்டை போட, உலகமயமாக்களைச் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இன்று அது கொடுக்கும் பிரச்சனைகளில் காணாமல் போய்விட்டனர்.

இன்னும் சில காலம் அமெரிக்கா கண்டும் காணமல் போயிருந்தால் சீன தேசம் எல்லாவற்றிலும் அமெரிக்காவை தாண்டி சென்றிருக்கும் ஆனால் சற்றுச் சுதாரித்துக் கொண்ட அமெரிக்கா சீனாவுடன் வர்த்தகப் போரிலும், அதன் நட்பு நாடுகளுடன், தன் பலத்தைத் தக்கவைக்க, நீ இதை எனக்குச் செய், நான் இதை உனக்குச் செய்கிறேன் என்று நட்புறவில் கணக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டது. செர்மனியில் இருந்து 9500 இராணுவ வீரர்களைத் திரும்பப் பெற்றது, தென்கொரியாவின் பாதுகாப்பிற்கு நிற்கும் அமெரிக்க ராணுவத்தைத் திருப்ப பெறாமல் அங்கேயே நிலை நிறுத்த தற்போது நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத்திற்கு மேலே அதிக நிதி கேட்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அமெரிக்கா மற்றும் சீன தேசத்தின் வர்த்தகப் போரில் ஆரம்பித்த வல்லாதிக்க மோதல் சீனாவிற்குப் பல முனைகளில் சிக்கலை உருவாக்கி வருகிறது முதலில் மனிதஉரிமை மீறல் என்று ஆங்காங் நகரப் பிரச்சனை வந்தது, அதைத் தொடர்ந்து தென்சீனக் கடலில் சென்ககு தீவிற்குச் சப்பானுடன் ஒரு மோதல், இந்தியாவின் எல்லையோரத்தில் இமயமலை பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் ஒரு மரண மோதல் என்று அடுத்தடுத்து பல நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கிறது.

இந்தப் பூகோள அரசியலில் ரிலையன்சு அம்பானிக்கு ராசயோகம் தான் சீனாவின் உவாவேய் (Huawei) நிறுவனத்தைத் தேசத்தின் பாதுகாப்பு கருதி தடைசெய்வதாக அமெரிக்காவின் நெருக்குதலில் இங்கிலாந்து அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறத்துறை அமைச்சர் ரிலையன்சு நிறுவனத்தின் சியோவை வானளாவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அமெரிக்காவின் கூகிள் நிறுவனம் அம்பானியின் ரிலையன்சு சியோவில் பெரும் முதலீடு செய்கிறது. சீனாவை கட்டுப்படுத்த இந்தியாவை எளிதாக அமெரிக்கா ஆட்டுவிக்கிறது. இந்த நகர்வுக்கு எதிர் நகர்வாய் சீன அரசு இரானிற்கும் இந்தியாவிற்கும் இருந்த மிக முக்கியச் சவகார் துறைமுக ஒப்பந்தத்தைச் சாதுரியமாக முறிக்கவைத்திருக்கிறது. அந்தத் துறைமுகம் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் வரப்போகிறது.

உலக வல்லாதிக்க நாடுகளின் போட்டியில் அம்பானி கூடக் காசு பார்த்து உலகப் பணக்காரர்களின் வரிசையில் முன்னேற முடியும். தமிழர்கள் நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும், நமது பொருளாதாரம் தான் திராவிட ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கியிருக்கிறதே… என்ன செய்வது!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!