0

எங்கள் முருகனுக்கு நீங்க ஏன் அடுச்சுக்கிறீங்க!

பொழுது விடுஞ்சு பொழுது போனால் தமிழர்களைப் பிரித்தாளுபவர்களுக்கு என்று ஏதாவது ஒரு விடயம் கிடைத்துவிடுகிறது. உங்களுக்கு எல்லாம் தெரியும் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக சுப்பிரமணியன் சாமியிடமும், குசுபு,வைகோ போன்றவர்களிடம் தான் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் கேள்விகள் கேட்கும் அதற்கு எந்த மனசாட்சி உறுத்தலும் இன்றி இவர்கள் தமிழர் சார்பாகப் பதில் சொல்வார்கள். மக்கள் மனநிலைக்கும் இவர்கள் சொல்லும் பதிலுக்கும் சற்றும் சம்பந்தம் இருக்காது. அந்தக் கொடுமை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கருப்பர் கூட்டம் இன்று வலையொளி போய்ப் பார்த்தால் நமது பாட்டன் பூட்டனை ஏமாற்றிய புரட்சி திராவிடப் பித்தலாட்டம் தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் இந்தப் புரட்சியை எல்லாம் தமிழர்களிடம் தான் பேசுவார்கள்.
இந்துமதம் என்பது தமிழர்களின் மெய்யியலை களவாடி கட்டமைக்கப்பட்டது என்பது பற்றிப் பல காணொளிகள் வந்து கொண்டிருக்கின்றன, தமிழர் மெய்யியல் பற்றிய ஆராய்ச்சிகள் புது வேகம் எடுத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் சமீபத்தில் “தமிழர்கள் இந்துக்கள் இல்லை” என்கின்ற சொற்றோடர்(Hashtags) கீச்சினில் தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு இந்திய அளவில் முதலிடத்திற்கு வந்தது உங்களுக்கு எல்லாம் ஞபாகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆரியக் கூட்டம் தமிழர்களின் கடவுள்களைக் கவர்ந்து சம்பந்த சம்பந்தம் இல்லாமல் அறிவுக்கு முரணான புதுப் புதுக் கதைகளை நமது கடவுளுக்குப் படைத்தனர் அதன் மூலம் தமிழர்களின் மெய்யியல் கவரப்பட்டுத் தமிழர்களின் கோவில் கட்டமைப்புகள் அவர்களின் அதிகாரத்திற்குச் சென்றது. இன்று உலகம் முழுக்கச் சொல்லித்தரப்படும் யோகா எனும் பயிற்சி தமிழர்களின் ஓகக் கலை தான். தமிழன் கட்டிய கோவிலுக்குள் தமிழனே நுழையமுடியாத நிலையில் தமிழனை காப்பாற்ற வருகிறேன் என்று ஒரு கயவாளிகள் கூட்டம் கிளம்பியது.

கயவாளிகள் கூட்டம் அதான் கருப்பர் கூட்டம் இவர்கள் கருப்பு உடை போட்டுக் கொண்டு தொண்டைகிழிய தமிழ் தமிழ் என்று கத்தி புரட்சி செய்தார்கள், கடைசியில் பார்த்தால் அவர்களின் புரட்சி உண்மையில் தமிழனை காப்பாற்ற இல்லை. தமிழன் இழந்த மெய்யியலில் அவன் திரும்பவே முடியாத அளவிற்கு நடத்தப்பட்ட சூழ்ச்சி தான். ஆரிய திராவிட எதிர்ப்பு நாடகம் என்பது அவர்களுக்குள் நடந்த அதிகாரப் போட்டி
தான் கடைசியில் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை படி தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். தமிழரின் கலைகள் என்ன ஆனது தமிழர் இசை என்றால் கர்நாடக சங்கீதம் என்றானது, திரைப்படத்துறை முழுதும் ஆரிய, திராவிடர்கள் கரங்களுக்குப் போனது இன்றுவரை அந்த நிலை தான் தொடர்கிறது. அரசியல் அதிகாரம் முழுக்கத் திராவிடர்கள் அதைச் செய்து கொடுக்கும் அரசாங்க அதிகாரவர்க்கம் முழுக்க ஆரியம் என்று மிகத் தெளிவாகத் தமிழர்கள் மொட்டையடிக்கப்பட்டுவிட்டனர்.

எங்கள் இறைவனைக் கேவலப்படுத்தித் திராவிடன் பேசுவான் நாங்கள் உணர்வற்று இருக்க வேண்டும், இந்துத்துவாதி அதைப் பெரும் பிரச்னையாக்கி அரசியல் ஆதாயம் தேடுவான் நாங்கள் உணர்வற்று இருக்க வேண்டும், என்ன விதமான கபட நாடகம் இது. தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கு எந்த உரிமையும் இல்லாத இவர்கள் ஏன் இத்தனை ஆட்டம் போடுகிறார்கள். எங்கள் இன மூத்தோன் முருகனை பற்றி நாங்கள் தான் பேசவேண்டும். எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு வேண்டாம்…ஒதுங்கி நில்லுங்கள்!

தமிழர்களே இவர்கள் ஆடும் ஆட்டத்தில் நீங்கள் வெறும் பகடைக்காய்களாய் எவ்வளவு நாட்களுக்கு இருக்கப் போகிறீர்கள்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!