0

நல்லா காப்பாத்துனீங்க எங்கள் திருக்குறளை!

தொண்டைக்குழியில் சிக்கிய மீன் முள் நம்மைப் பாடாய் படுத்திவிடும் அந்த நிலை தான் மத்தியில் இருக்கும் இந்துத்துவா ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் ஆட்டம் போடும் திராவிடக் கூட்டத்திற்கும். மீன் சாப்பிட ஆசை தான் ஆனால் தமிழர் நலன் என்னும் முள் அவர்களை எளிதாக வாழ விடுவதில்லை. இந்துத்துவாதிகள் தருண் விசய், நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் என அனைவரும் திருக்குறளை மேற்கோள் காட்டாத இடமே இல்லை. நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று அந்தக் கதை தான் இவர்களது திருக்குறள் மேல் வைத்திருக்கும் அன்புக்குக் காரணம். தமிழர்களை ஏமாற்றும் இவர்களை நம்பும் அப்பாவி தமிழர்க் கூட்டத்தை என்ன செய்வது.

நரேந்திர மோடி திருக்குறளை புதையல்களின் புதையல் என்று வானுயர புகழ திருக்குறள் உலகப் பொதுமறை என்று எடப்பாடி கூடச் சேர்ந்து கும்மியடிக்கக் கடைசியில் ஒன்பதாம் வகுப்பு CBSE பாடநூலில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டுத் திருக்குறளின் மேல் இவர்களுக்கு இருக்கும் பற்று கிழிந்து தொங்குகிறது. முதலில் இந்த இந்துத்துவாதிகள் திருக்குறளை உயர்த்தவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை ஆனால் திருவள்ளுவருக்குக் காவி அடிப்பதில் இருந்து ஐ.நா மன்றத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டுவது வரை மறைமுகத் திருக்குறள் வெறுப்புதான் இவர்களின் சொல் ஒன்று செயல் வேறு என்பதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

இவர்கள் தான் இப்படி என்றால் தமிழ் மொழியைத் தூக்கி பிடிக்கிறோம் என்று வெற்று கூச்சலோடு தமிழில் பதவி பிரமாணம் செய்துக்கக் கொண்ட திராவிடப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணத்தோடு தூங்கிப் போய்விட்டார்கள் என்று என்னும் அளவிற்கு ஒரு சத்தத்தையும் காணோம்.

தமிழர்கள் நாம் இந்தத் திராவிட மற்றும் இந்துத்துவாதிகளின் செயல்களுக்கு எதிர்வினையாகச் சமூக ஊடகங்களில் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். நம் எதிர்வினை என்பது இந்த இரண்டு கூட்டத்தையும் நம்பி ஓட்டுப் போட்டு ஏமாறும் அப்பாவி தமிழர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி நல்ல தமிழ்மகன் தமிழ்நாட்டை ஆளும் நாளை நோக்கியதாக அமையவேண்டும். அந்த ஒன்று தான் தமிழ் மொழியையும் தமிழர்களையும் காப்பாற்றும் இல்லையென்றால் நமது புலம்பல்களாக மட்டுமே இது பார்க்கப்படுமேயன்றி ஒரு தீர்வை நோக்கி போகாது.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பழமொழி நம்மவன் நம்மை ஆண்டாள் தான் நம் கவலை அவனுக்குப் புரியும். எடப்பாடி தமிழன் தானே அவர் தானே தமிழர்களை ஆள்கிறார் என்று அப்பாவி தமிழன் வேடம் போட்டு யார் உங்களிடம் கேள்வி கேட்டாலும் புன்னகைத்து விட்டு கடந்து செல்லுங்கள் அந்தக் கோமாளிகளுக்கு எடப்பாடி தான் லாயக்கு.

இந்த இந்துத்துவாதிகளோ திராவிடர்களோ உயர்த்திப் பிடிக்கும் நிலையில் திருவள்ளுவரோ திருக்குறளே இல்லை அது வானளாவிய புகழ் கொண்டது. இந்த அற்பர்கள் கூட்டத்திற்கு அதன் புகழ் வேண்டும் அதை வைத்து தமிழர் கூட்டத்தை ஏமாற்றவேண்டும் என்பதே இலக்கு. இந்த இலக்கை தெளிவடைந்து தமிழர்கள் உடையுங்கள்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!