0

கிரகம் கிரகமாக நீங்கள் எங்கு போனாலும்…

எனது மர ரோமங்களை
பிடுங்கினீர்கள்
தாங்கிக் கொண்டேன்,

என் ஆற்று நாளங்களை
மடை மாற்றீனீர்கள்
தாங்கிக் கொண்டேன்,

என் பறையிடுக்குச் சுவாசத்தை
அபகரித்தீர்கள்
தாங்கிக் கொண்டேன்,

என்
மேல் இரக்கமின்றி
கான்கிரீட்(திண்கரை) காடுகளை
வளர்த்தீர்கள்
தாங்கிக் கொண்டேன்,

என்
வியர்வை துளைகளை
உங்கள்
தார் சாலைகளால்
அடைத்தீர்கள்
தாங்கிக் கொண்டேன்,

அறியாமல் செய்கிறீர்கள்
என்று
அமைதியாய்
இருந்து விட்டேன்
கிளம்பிவிட்டீர்கள்
இப்போது
என்
நிலவு தங்கையை
பதம் பார்க்க…

உங்கள் வளர்ச்சிக்கு
இடம் கொடுத்தேன்
நீங்கள்
பேராசைப் பிரியர்கள்
என்னை
முழுக்கச் சீரழித்து
ஒதுக்கவா
துணிந்து விட்டீர்!

உங்களை தாயுள்ளத்தோடு
நான்
மன்னிக்கின்றேன்,

கிரகம் கிரகமாக
நீங்கள்
எங்குப் போனாலும்
இதை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
என்
தமிழ்மகன் திருவள்ளுவன் சொல்லிய

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!