ரொம்ப மகிழ்ச்சி! தமிழனின் அறம் தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் கொடுப்பது என்பது தான், கல்யாணசுந்தரம் அதில் தெளிவாக இருக்கிறார், பயணி வலையொளியின் வளர்ச்சியை நல்லதொரு காணொளியில் விளக்கமாகப் பேசிவிட்டார். தான் பெற்ற வெற்றியை அனைவரும் பெறவேண்டும் என்று அனைவரையும் அவர் வலையொளி ஆரம்பிக்கச் சொல்வது அவரின் நல்ல மனதை காட்டுகிறது, அவர் பயணி வலையொளி செய்யப்போவதாகச் சொல்லும் விடயங்கள் மிக அருமை, காத்திருக்கிறோம் நண்பரே.
ஓலைச்சுவடி திருட்டை பற்றி நிறையக் காணொளிகள் வந்து கொண்டிருக்கின்றன, காணொளிகள் கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் இன்று வரை சரியான பதில் வரவில்லை, இது மிகப் பெரிய அச்சத்தைத் தமிழர் சமூகத்திற்குக் கொடுக்கிறது. முன்னுக்குப் பின் முரணாக வரும் தகவல்கள் இந்தச் சர்ச்சையின் வீரியத்தைக் கூடுகிறது. விகடன் போன்ற பொதுசன ஊடகங்கள் இதை ஒரு செய்தியாக மட்டும் பார்க்காமல் உண்மையைக் கொண்டு வரும் நோக்கத்தோடு செயல்பட்டால் நன்றாய் இருக்கும். ஓலைச்சுவடி திருட்டுச் சர்ச்சையில் அடிபடும் முக்கால்வாசி பேர்கள் திராவிடப் பின்புலத்தில் இருப்பது இந்தப் பிரச்சனையை எப்படியும் ஊத்தி மூடிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தைத் தமிழர்கள் மத்தியில் எழுப்புகிறது.
வீராவேசமாகப் பல போராட்டங்களைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகவியலாளர் செந்தில் தளுதளுத்த குரலில் தனது வலையொளியை ஆரம்பித்திருக்கிறார், தமிழர்கள் உணர்வுபூர்வமானவர்கள் அவருக்கும் ஆதரவளித்துள்ளனர். ரங்கராசு பாண்டே, மதன்,செந்தில் என்று பொதுசன ஊடகங்களில் பிரபலமாக இருந்தவர்கள் சமூக ஊடகத்திற்கு வந்துகொண்டிருக்கும் முறை சில சந்தேகங்களை எழுப்புகிறது, இவர்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் ஆதரவாய் இருப்பார்களா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். குறுகிய நோக்கத்திற்கு வந்திருந்தால், மக்களைக் குழப்ப வந்திருந்தால் தமிழுணர்வாளர்கள் அடையாளம் கண்டு இவர்களை நிச்சயம் தோலுரிக்க வேண்டும்.
எல்லாவற்றையும் சந்தேகி அப்பொழுது தான் உண்மையைச் சீர்தூக்கி பார்க்கமுடியும் என்பதுக்கு இணங்க தமிழ்நாட்டின் தேர்தலுக்காகச் சுடெர்லைட் ஆலையைத் திறக்கமால் தேர்தல் முடிந்தபின் உச்சநீதிமன்றம் மூலம் ஆணையைப் பிறப்பிக்கலாம் என்கின்ற திட்டம் அதிகாரவர்கத்தில் இருப்பவர்களுக்கு இருக்குமானால் அதைப் பார்த்துக் கொண்டு தமிழர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.