0

Seeman #Kalyaanasundram தமிழ்த்தேசிய அறுவடை கல்யாணசுந்தரம் | @TamilanSankar.com

நாம் தமிழர் இயக்கம் மற்றொன்று மே17 இயக்கம்!

தமிழர்கள் தங்கள் உரிமையை எந்த வித தயக்கமும் இன்றி சத்தமாகக் கேட்கமுடியும் என்பதற்கு நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எம்.சி.யார்,வைகோ தொடங்கி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் யாரும் அரசியலுக்கு ஓய்வு எடுத்ததில்லை அரசியலும் அப்படி அவர்களை விடுவதில்லை. கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்துவிட்டார் என்கின்ற செய்தி பரவியதும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அதற்கு முக்கிய காரணம் விளைவு இப்படி தான் நடக்கும் என்று ஓரளவு கணித்ததே. அவர் அதிமுகவில் இணைத்தவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொடுத்த பல பதில்களில் அவர் தமிழர் விரோத திட்டங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வரும் என்பது தெரிந்ததே. நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி அவர் கூறிய கருத்துக்களே அதற்கு சாட்சி. நாம் தமிழர் கட்சியின் உள்கட்சி பிரச்சினையில் ஒரு பாதி தமிழர்களுக்கு இயல்பாக ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை அதற்கு முக்கிய காரணம் ஈழத்தின் இனப்படுகொலையின் மொத்த கோபமும்,அனுதாபமும்,கையறு நிலையும்,வஞ்சினமும் இரண்டு இயக்கங்களால் வடிகட்டப்பட்டு பொதுவெளியில் தமிழர் குரலாக ஒலிக்க ஆரம்பித்தது. ஒன்று நாம் தமிழர் இயக்கம் மற்றொன்று மே17 இயக்கம். தமிழனின் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சிகளும் இந்த புதிய எழுச்சியைக் கண்டு திகைத்தன. உணர்ச்சி பெருக்கில் தமிழ் இளைஞர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை இந்த இரு இயக்கங்களுக்கும் செய்தது மறுக்கமுடியாத வரலாறு.

திராவிடத்துடன் மே18 உறவு…

இனப்படுகொலைக்குத் துணைபோன திராவிடத்துடன் மே18 தொடர்ந்த உறவு அதைத் தமிழர்கள் முற்று முழுதாக ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். நாம் தமிழர் இயக்கம் கட்சியாக உருவெடுத்தது, இன்று கல்யாணசுந்தரம் மற்றும் ராசீவ்காந்தி வெளியேற்றப்பட்டதில் வந்து நிற்கிறது. ரோமானிய புரட்சியாளர் கொர்னேலியு சீலியா சொன்ன ஒரு ஆங்கில மேற்கோள் இருக்கிறது “The young man who joins a political party is a traitor to his generation and to his race. — Corneliu Zelea Codreanu”. நாம் இன்று செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் நமது நேற்றைய செயல்பாடுகளே உறுதுணையாக இருக்கின்றன. வரலாறு நெடுக நமக்குப் பாடங்கள் இருக்கின்றன. எனது முந்தைய பதிவுகளில் / காணொளிகளில் இதை நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். நாம் தமிழர் என்பது ஒரு கட்சி அதை அதன் போக்கில் விடுங்கள். கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியைத் தாண்டி வெளிப்புற அழுத்தங்களைக் கொடுத்து எந்த திசையிலும் ஒரு கட்சியின் போக்கை மாற்ற முடியாது.

எதிரியைத் தீர்மானிக்காமல் துரோக பட்டியல் வாசிப்பது…

ஈழத்தின் இனச் சாவில் உருவான ஒரு பலமான கூட்டம், கல்யாணசுந்தரம், ராசீவ்காந்தி பற்றி நீட்டி முழங்க அரசியல் பொழுதுபோக்குகளாக விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை, நாம் எப்படி மடைமாற்றப்பட்டிருக்கிறோம். திராவிடனையும், இந்துத்துவ வாதியையும் தமிழர் நிலத்தில் செல்லாக்காசாக மாற்றவேண்டிய தருணத்தில் நாம் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். கல்யாண சுந்தரத்திற்கு நீங்கள் வாழ்த்தும் தெரிவிக்க வேண்டாம், துரோகி என்று பட்டம் சுமத்தவும் வேண்டாம் அதைச் செய்யவா நாம் வந்தோம்? அரசியலை உணர்ந்து சரிப்படுத்த வந்த நம்மையே அரசியலில் மூழ்கடித்துவிட்டனர் என்கின்ற உண்மையை உணருங்கள். தமிழ்த்தேசியம் அறுவடைக்கு வந்திருக்கிறது யார் யாரெல்லாம் கதிரறுக்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பது இல்லை நமது கடமை, எதிரியைத் தீர்மானிக்காமல் துரோக பட்டியல் வாசிப்பது வீண் வேலை!

தொடரும்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!