சக்கரங்கள் உடைந்த வண்டி எப்படி மெதுவாக நகருமோ அது போன்றதொரு மந்தமான நாளாக இருந்தது அந்த நாள்.
காலை ஆதிரனுடன் நடந்த உரையாடலுக்குப் பிறகு, நேரம் நகராததைப் போல் உணர்ந்தான் ஈமரன்.
வானம் வெளிர் நீலமாக இருந்தது; காற்று வீசுகிறதா இல்லையா என்பதை உணர முடியாது போல் இருந்தது. அரவான் கிராமம் வழக்கம் போல பரபரப்பில் மூழ்கியது.

ஆனால் ஈமரனுக்கு மட்டும் எல்லாம் போலியாகத் தோன்றியது— உலகம் “எதுவும் மாறவில்லை” என்று நடிப்பதுபோல் இருந்தது அவனுக்கு.
அவன் தாய்க்கு அன்றாட வேலைகளில் உதவினான்; கைகளில் பிடித்திருந்த மண்குடம் வழுக்கிக் கீழே விழும் அளவிற்கு அவன் கவனத்தில் தடுமாற்றமும் இருந்தது.
“கவனம் ஈமரா,” என்று அவன் தாய் சின்னச் சிரிப்புடன் கண்டித்தாள். “இன்று உன் கவனம் எல்லாம் குமரிக்குன்றத்தில் இருக்கிற மாதிரி இருக்கு,” என்று நகைத்தாள்.
ஈமரன் வேண்டா வெறுப்பாக ஒரு புன்னகையை உதடு வழியே சிந்தினான். “சோர்வா இருக்கேன், அதான் அம்மா.”
“அப்படியென்றால் இன்றிரவு சீக்கிரம் தூங்கப் போய்விடு,” என்றாள். “வரப்போகும் அறுவடைக்கு நீ தயாராய் இருக்கணும்.”
‘அறுவடைக்கு தயாராக வேண்டுமா…’ அவள் கூறிய வார்த்தைகள் அவனுக்குத் தீடீர் பதட்டத்தை கொடுத்தது. அந்த அறுவடைக்கு நான் இங்கு இருக்கமாட்டேன் என்று அம்மாவுக்கு தெரியாது, என்ன செய்வது; அவன் தொண்டை வறண்டு, அவளது பார்வையைத் தவிர்க்க கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று வெளியில் வந்தான்.
கிணற்றருகில் சிறுவர்கள் கற்களை எறிந்து, யாருடைய கல் அதிகச் சத்தம் எழுப்பி விழுகிறது என்று போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். நன்றாய்த் தெரிந்த நண்பன் ஒருவன், அவனைப் பார்த்து கை அசைத்தான்.
“ஈமரா! நீ புதிதாய் கற்றுக்கொடுத்த ஏழுகல் விளையாட்டு விளையாடணும். வா!”
“இன்று முடியாது, வேறொரு நாள் விளையாடலாம்…,” என்று அங்கிருந்து தப்பிக்கவே முயற்சித்தான். அவர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கையில், மார்புக்குள் இருக்கும் வெப்பம் மீண்டும் துடித்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அவனால் அது உணரப்பட்டது.
வயலோரப் பாதையில், ஆதிரன் தனியாக நின்று வடக்கை நோக்கிக் கொண்டிருந்தான். காற்று மிக மெதுவாக இருந்தாலும், அவனது மேலங்கி மட்டும் ஏதோ அடக்கப்பட்ட பெரும் புயலை வைத்திருப்பது போல் அசைந்தது.
“இன்னும் வானத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்,” என்று ஈமரன் வினவ ஆரம்பித்தான்.
“நீயும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறாய்…” என்று அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஆதிரன் பதிலளித்தான்.
ஈமரன் அவன் பார்வையைக் சுழற்றினான். வடக்கே, குமரிக்குன்றம் கிழக்குப் பக்கம் வானம் சிறிது மங்கலாகத் தெரியத் தொடங்கியிருந்தது; மேற்கே நீல நிற வானத்தில் வெண் மேகங்கள் பளிங்கு போர்வை போர்த்தியிருப்பதுபோல் இருந்தது.
“இன்று அது வருமா?” என்று ஈமரன் கேட்டான்.
“முழுவதும் அல்ல,” என்று ஆதிரன் புதிர் போட்டான். “ஆனால் நிச்சயம் வரும்… அதைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் ஏதோ தவறாக இருக்கிறது என்ற உணர்வு வரத் தொடங்கும். நீ பயப்படுவதை நிச்சயம் நிறுத்த வேண்டும்..”
ஈமரன் சற்றுச் சிரமப்பட்டான். “அவர்களுக்குச் சொல்லலாமா? அம்மாவிடம்… கிராமத்து மூத்தோர்களிடம்…?”
ஆதிரன் அவனை நோக்கி திரும்பினான். “நீ அதைப் பற்றி சொன்னால், ‘அவனுக்கு பித்து பிடித்துவிட்டது’ என்பார்கள். நீ சொல்லவில்லை என்றால், அவர்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கமாட்டார்கள். அது இந்தக் கிராமத்திற்கு பெரிய ஆபத்தாக முடிந்துவிடும்,” என்று யோசனையில் வீழ்ந்தான்.
ஒரு சில நிமிட அமைதிக்கு பிறகு, “முதலில் உன் அம்மாவிடம் பேசு; நீ சொல்வதற்கு முன் யாராவது சொன்னால் அது தவறு; நீ தான் முதலில் சொல்ல வேண்டும்; அது தான் சரியாய் இருக்கும்…” என்று இழுத்தான்.
ஈமரனின் தொண்டை இறுகியது. அவன் தலை அசைத்தான்; ஆனால் உடல் அசையவில்லை. மாலை வரை அவனுக்குத் துணிவு வரவில்லை.
பரிதி அடிவானத்தில் தஞ்சம் அடையும் போது, வயல்களும் வீடுகளும் அந்த இளஞ்சிவப்பு கதிர்களில் மூழ்கி இருந்தன. வீடுகளின் மேல் இருந்து மெல்லிய வெண்புகை பல ஓவியங்களை வானில் வரைந்து கொண்டிருந்தது; வீடுகளில் சமையல் செய்யும் வாசனைகள் தெருக்கள் முழுதும் பரவி ஒரு மோன நிலையை அந்த அந்தி மாலை நேரம் உருவாக்கிக் கொண்டிருந்தது. கோழிகள் தாம் அடையும் கூடைகளுக்கு அருகில் வந்து வட்டம் போட்டுக் கொண்டிருந்தன. அரவான் கிராமத்திற்கு அது வழக்கமான ஒரு அழகிய மாலைப் பொழுது.
அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், அவனது தாய் ஒரு சிறிய இலையில் உணவைப் பரிமாறினாள்.
“உட்கார் ஈமரா…” என்றாள். “இன்று முழு குமரிக்குன்றத்தையும் தோளில் தூக்கிச் சுமக்கிற மாதிரி தெரியுதே!” என்று வினவ ஆரம்பித்தாள்.
ஈமரன் உணவு பரிமாறப்பட்ட இலைக்கு முன் அமர்ந்தான்; ஆனால் உணவைத் தொடவில்லை.
“அம்மா…” என்று தொடங்கினான். இதயம் வேகமாகத் துடித்தது; மார்புக்குள் இருக்கும் வெப்பம் அவனை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது.
அவள் கண்களை உயர்த்திப் பார்த்தாள். “என்னப்பா?” என்றாள் கரிசனையோடு.
‘கருங்கல் விழித்தது. என் பெயரை அழைத்தது. நான் இங்கிருந்து கிளம்பாவிட்டால் நிழலார் இந்தக் கிராமத்தை விழுங்கிவிடும்…’ என்று சொல்ல அவனுடைய மனம் தயாரானது. ஆனால் உதடுகளைத் திறந்த நொடியில் வேறு வேறு வார்த்தைகள் வெளியே வந்தன.
“நான்… விரைவில் பயணிக்க வேண்டியிருக்கலாம்,” என்றான். “ஒரு… நாடோடி என்னை அழைத்துப் போகிறார், வேலைக்காக…” என்று இழுத்தான்.
“பயணமா? எங்கே? எவ்வளவு நாள்?” புருவத்தைச் சுருக்கியபடி கேள்விகள் கணைகளாய் வந்து விழுந்தன.
“தெரியலை. வடக்கே இருக்கலாம்… இரண்டு வாரம்.” அவ்வளவு எளிதாக எல்லாம் அவன் தன் தாயிடம் பொய் சொன்னது கிடையாது; அவனுக்குப் பெரும் கசப்பைத் தந்தது அந்த அனுபவம்.
“அறிமுகம் இல்லாதவர்களுடன் எல்லாம் எப்பொழுது பயணம் செய்ய ஆரம்பித்தாய்?” என்று அவள் மெதுவாகக் கேட்டாள்.
“எந்த நாடோடியுடன் போகிறாய்?” என்று அவன் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வியையும் எழுப்பினாள்.
“அவர் பெயர் ஆதிரன்.”
அவள் சற்றுயோசித்தாள். “வெள்ளை முடியுடன் ஒருவர் இங்கு சுற்றிக் கொண்டிருந்தாரே—அவரா? குமரிக்குன்றம் பற்றியும் அந்த கருங்கல் தூணைப் பற்றியும் அதிகம் விசாரித்துக் கொண்டிருந்தார் அவரா?” என்று சந்தேகக் கண்ணோடு அவனை வினவினாள்.
அவள் பார்வை கூர்மையடைந்தது. “அவரோடு நீ பேசிக் கொண்டிருக்கிறாயா?”
“ஆம்,” என்று ஈமரன் தலைஅசைத்தான். “அவருக்கு… பல விடயங்கள் தெரியும் அம்மா.”
“விடயங்களா… இல்ல தொல்லைகளா?” என்று அவள் அருமை மகன் பிரிவதைப் பற்றி பேசுகிறானே என்று இடிந்து போனால்.
சிறிது நேரம் இருவருக்கும் இடையில் அமைதி. வெளியில் நாய் ஒருமுறை குரைத்தது; பின்னர் மீண்டும், இம்முறை இன்னும் கூர்மையாக அவள் கேள்வி எழும்பியது.
“நீ ஏன் போக வேண்டும்?” என்கின்ற அவள் கேள்வியில் ஒரு அமைதியின்மை தெரிந்தது.
“நான் இங்கு இருந்தால் நிழலார் என்னையும் உங்களையும் கண்டுபிடிக்கும். நான் அந்த கருங்கல் தூணைத் தொட்டது பிழை. உலகமோ மாறிக்கொண்டே இருக்கிறது; என் கதை அதனுடன் பின்னப்பட்டுள்ளது…” என்று சொல்ல முடியாமல், அவன் முன்னோக்கி தன் பார்வையைத் தாழ்த்தினான்.
“ஏதோ… செய்ய வேண்டும் என்று தோணுகிறது,” என்றான்.
அவள் நீண்ட நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆழ்ந்த மூச்சு விட்டாள்; அந்தச் சுவாசத்தில் பெரிய தளர்வு தெரிந்தது.
“நீ எப்போதுமே வித்தியாசம் தான், ஈமரா,” என்று மெதுவாகச் சொன்னாள்.
“எப்பொழுதும் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்பவன், குமரிக்குன்றத்தைக் விடாமல் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பவன், யாராலும் விடை சொல்ல முடியாத பல கேள்விகளை கேட்கும் பையன். ஒரு நாள் இது எல்லாம் நீங்கிவிடும் என்று நினைத்தேன். ஒருவேளை நான் தான் தவறாக எண்ணியிருப்பேனோ…” என்று தளும்பிய குரலில் சொல்லி முடித்தாள்.
“என்னை மன்னிச்சுருங்க அம்மா,” என்று ஈமரன் சன்னமான குரலில், குரல் உடைய பதிலளித்தான்.
“எந்த ஒரு தாயும் தனது பையன் தன்னை விட்டு பிரிவதை ஒருபோதும் விரும்ப மாட்டாள்,” என்று அவள் தொடர்ந்தாள்.
“ஆனால் உன் மனத்தின் ஆழத்தில் ஏதோ ஒன்று உன்னை இழுத்துச் செல்லுகிறது; உன்னைத் தடுத்து நிறுத்துவது எளிதல்ல என்று நான் உணருகிறேன்,” என்று ஒரு சிறிய இடைவெளியை விட்டாள்.
“நீ கிளம்ப வேண்டி இருந்தால்… என்னிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பி விடாதே,” என்று முடிக்கும் முன் அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அவனது மார்பு வலித்தது. “அப்படி நான் ஒரு போதும் செய்ய மாட்டேன் அம்மா,” என்று அவன் உடைந்தான்.
அவள் அவனது கையைப் பிடித்தாள். ஒரு கணம், அவன் மார்பில் இருக்கும் வெப்பமும் தாய்மையின் கனிவும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு உணர்வு யுத்தத்தை அவனுக்குள் நடத்தியது.
இரவு முழுமையாக இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், முதலாவது சத்தம் பெரும் கதறலாக எழுந்தது. ஈமரனும் அவனது தாயும் இருவருமே வேகவேகமாக எழுந்தனர்; தரை லேசாக அதிர்ந்தது.
“அது மாதவியின் குரல் அல்லவா?” என்று அவள் கேட்டாள். “கிராமத்தின் மத்தியில் இருந்து அல்லவா அந்தக் குரல் வருகிறது,” என்று பதறி இருவரும் வெளியே ஓடிவந்தனர்.
கிராமத்தின் பாதி மக்கள், ஊருக்கு நடுவே இருக்கிற கிணற்றருகே கூடியிருந்தனர். கோழிகள் அரக்கப் பறக்கப் பறந்து சத்தமிட்டன; ஒரு குதிரை கட்டிலிருந்து விடுபட்டு நின்ற இடத்தில் துள்ளியது; நாய்கள் வானத்தை நோக்கிச் சத்தமாக குரைத்தன.
“வடக்கே பாருங்கள்!” என்று யாரோ ஒருவர் கத்தினார்.
ஈமரன் தலைநீட்டி பார்த்தான்— அவன் மூச்சு நின்றுவிட்டது.
வடக்குப் பக்கம் வானம் சிவந்த நிறத்தில் மிகுந்த அச்சத்தை ஊட்டும் வகையில் தெரிந்தது. தீடீரென்று கூடிய மேகங்கள் இரத்த சிவப்பாக செந்நிறத்தில் மிகவும் பயங்கரமாக இருந்தன; அவை மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தன; மேகத்தில் எழுந்த சூறாவளிப் புயல் போல் அது இருந்தது; அதன் மத்தியில் கரிய நிறத்தில் ஒரு உருவம் துடிப்பது போல் இருந்தது.
சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் கால்களைக் கட்டிப்பிடித்தனர். கிராமத்து மூத்தோர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து கண்கள் அகல அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். வேட்டைக்கு ஆயத்தமாய் இருந்தவர்களின் கைகளில் இருந்த ஆயுதங்கள் தளர்வடைந்து நிலத்தை நோக்கி தாழ்ந்தன.
“வெகு தூரத்தில் பெரும் தீப்பற்றியிருக்கும் ஒளியா அது?” என்று ஒருவர் நடுங்கும் குரலில் கேட்டார். அது கேள்வியா அல்லது தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள தனக்குத் தானே கேட்டுக் கொண்டாரா என்று தெரியவில்லை.
“வானத்தில் தீயா? மேகங்கள் இப்படி கூடி நான் இதுவரை பார்த்ததில்லை,” என்று கிராமத்து மருத்துவச்சி மெதுவாகச் சொன்னாள்.
மிருகங்களுக்கு இன்னொரு அதிர்வு பரவியது. ஒரு ஆடு திடீரென தரையில் விழுந்தது; நாய்கள் சன்னமான குரலில் சிணுங்க ஆரம்பித்தன.
ஈமரன் மார்புக்குள் இருந்த வெப்பம், அந்த சிவப்பு மேகங்களுக்கு பதிலளிப்பது போல பெரும் தீயாகத் துடித்தது. ஒரு கணம் அவன் வேதனையால், மார்பைத் தழுவிக் கொண்டான்.
அதை யாரோ ஒரு கிராமத்து பெரியவர் கவனித்தார். “பையனுக்கு என்ன ஆயிற்று?” என்று அவர் கேட்டதும்—
“ஈமரா?” என்று அவன் தாய் அவனது கையைப் பிடித்தாள். “என்ன ஆயிற்று உனக்கு?”
அவனுக்குப் பதில் சொல்ல வாய் வரவில்லை. அந்த நேரத்தில் மற்றொரு குரல் கூட்டத்தின் கூச்சலைக் கடந்து வந்தது.
“ஈமரனுக்கு ஒன்றும் இல்லை,” என்று ஆதிரன் சொன்னான். கிராமத்தின் நடுவே இருந்த ஒரு கல்லில் ஏறி நின்றான். அவன் மேலங்கி காற்றில் படபடத்தது; அவனது நரைத்த முடி அந்த சிவப்பு ஒளியில் புதிதாய் மின்னியது. “அது… உங்களை எழுப்புகிறது,” என்று மந்திரித்து விட்டவன் போல் அந்த வார்த்தைகளை உதிர்த்தான்.
அனைவரின் பார்வையும் அவனை நோக்கி திரும்பியது.
“நீ யார், என்ன உளறுகிறாய்?” என்று கிராமத்து பெரியவர் ஒருவர் சத்தமாக கேள்வி ஒன்றை எழுப்பினர்.
“இதனை முன்பே நான் பார்த்திருக்கிறேன்,” என்று ஆதிரன் அமைதியாகச் சொன்னான். அவன் தன் கையை செந்நிற மேகங்களை நோக்கி உயர்த்தினான்.
“அது நிழலாரின் நிழல். அது இன்னும் முழு வலிமைக்கு வரவில்லை; ஆனால் இனி அது உறங்காது. நீங்கள் எல்லோரும் இதை இப்பொழுது உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்; உங்கள் செல்லப் பிராணிகள் கூட அதை உணர ஆரம்பித்திருக்கின்றன; இந்த அரவான் கிராமத்து நிலமும் அதை உணர்கிறது.”
கூட்டத்தின் நடுவே முணுமுணுப்பு அதிகரித்தது.
“நாங்கள் இது போன்ற பேய்க் கதைகளை நம்புவதில்லை. வேறு எங்காவது போய் இந்தக் கதையை சொல்,” என்று வயதில் மூத்த ஒரு பெரியவர் பேசினார். “இது மழைக்கால மேகம்தான். அது வரும்; போகும். நாம் கவலை கொள்ள இதில் ஒன்றும் இல்லை,” என்று அவர் முடித்தார்.
“மழை மேகங்கள்… நாம் பார்த்தால் அது நம்மைத் திரும்பப் பார்க்காது,” என்று ஆதிரன் திடமாகச் சொன்னான்.
அவன் சொல்வது உண்மை என்று உணர்த்துவது போல, அந்த சிவப்பு மேகங்களின் மத்தியில் இருந்த திரளில், ஒரு கணம், கண்ணைப் போன்றதொரு ஒளி, மெதுவாகத் திறந்து, மீண்டும் மூடியது.
ஒரு குழந்தை தீடீரென்று கதறி அழத் தொடங்கியது. ஒருவர் மார்பில் கை வைத்து கிராமத்து தெய்வத்தை வேண்ட ஆரம்பித்தார்.
“அது என்ன கேட்கிறதோ?” என்று மாதவி நடுங்கிய குரலில் கேட்டாள்.
ஆதிரனின் பார்வை மெதுவாக ஈமரனைத் தேடியது.
“அது எப்போதும் ஒரே விடயத்தையே தேடும்,” என்று அவன் மெதுவாகச் சொன்னான்.
“ஒளியைக் கூட அது விடாமல் முழுங்கிவிடும்; அதை எதிர்க்கும் எதையும் உடைத்து சுக்குநூறாக்கிவிடும். இன்றிரவு, அது இதுவரை அறிந்திராத ஒரு புதிய விடயத்தையும் கற்றிருக்கிறது.”
“என்ன புதிய விடயம் அது?” என்று அதே கிராமத்து பெரியவர் கேட்டார்.
“குமரிக்குன்றத்தின் கருங்கல் விழித்துவிட்டது,” என்று ஆதிரன் சொன்னான். “அது ஒருவரின் மீது தன் முத்திரையை பதித்து விட்டது.”
முழு கிராமத்தின் பார்வையும், ஒரே நேரத்தில் ஈமரனை நோக்கி திரும்பியது. உலகமே அவனை விட்டு நழுவுவது போல் இருந்தது ஈமரனுக்கு.
ஈமரனின் தாய் அவன் கையைத் திடமாகப் பிடித்துக் கொண்டாள். “இவன் என்ன பேசுகிறான், ஈமரா?” என்று கிசுகிசுத்தாள்.
மார்புக்குள் இருந்த வெப்பம், இப்போது தீ போல சுட்டெழுந்தது. செந்நிற மேகங்களின் துடிப்புக்கும், நிழலாரின் பார்வைக்கும் அதே ஒளியில் பதிலளித்தது.
அந்த நொடியிலே ஈமரனுக்கு தெளிவாய்த் தெரிந்தது— அவன் இங்கே தங்க முடியாது என்று. அவன் தங்கினால், நிழலார் கல்லறை தோட்டமாக அவன் ஊரை மாற்றி விடுவார்கள். அவன் இங்கிருந்து கிளம்பினால், அவன் மட்டும் தான் குறிவைக்கப்படுவான், அவனது கிராமமாவது தப்பிக்கும்.
அவன் ஆதிரனை நோக்கிப் பார்த்தான்; அவன் கண்களில் ஓர் அமைதியான ஒப்புதல் இருந்தது.
நாளை விடியற்காலை, வடக்குத் திசையை நோக்கி, நடக்கத் தொடங்க வேண்டிய அவசியம், இப்போது முழுமையாக நிச்சயமாகி விட்டது—
அவன் விரும்பினாலும், இல்லை என்றாலும், அது ஒன்றே எஞ்சிய ஒரே வழி.
💬 உங்கள் கருத்து
இந்த அத்தியாயத்தில் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?
இது இயற்கையா… அல்லது நிழலாரின் எச்சரிக்கையா?
📚 Chapter 1 முதல் வாசிக்க: இங்கே
