0

சிவனடியாரோ பெனிக்சோ, மதத்தின் பெயரால் துண்டாடாதீர்!

மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் தூண்டப்படும் உணர்ச்சி மனிதனை விலங்கினும் கொடிய மிருகமாய் மாற்றிவிடும் என்பது வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். இந்துத்துவா கட்சிகள் சிறிது சிறிதாக எப்படி இந்தியாவை ஆக்கிரமித்தன என்பது மிகவும் வெளிப்படையான விடயம். மதத்தின் பெயரால் நடந்த பல கலவரங்கள் அதை வைத்து ஓட்டரசியல் நடத்தி சாமான்ய மக்களை மதத்தீவிரவாதிகளாக்கி கொண்டிருப்பது தான் ஆளும் பாரதீய சனாதாவின் பெரும் பங்காக இருக்கிறது.

சாத்தான்குளத்தில் காவல்துறை நடத்திய பெனிக்சு,செயராசு படுகொலையும் சிவனடியார் சரவணன் தற்கொலையும் தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை ஒரே பார்வையில் தான் பார்ப்பார்கள், பாதிக்கப்பட்டவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர்கள் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. உலகின் எந்த மூலையில் எந்த உயிர்க்குப் பிரச்சனை என்றாலும் தமிழர்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள், தமிழர்கள் பரந்துபட்டுச் சிந்திப்பவர்கள், சமீப காலமாகத் தமிழ்நாட்டில் புதிய அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவா சக்திகள் மதமாச்சரியங்களைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்ற எல்லா முயற்சிகளையும் செய்துக்கொண்டிருக்கின்றனர். இன்று சமூக ஊடகமான கீச்சில் #JusticeForTamilSadhu,#JusticeForSaravanan என்கின்ற குறியீடுகள்( hashtag ) முன்னுக்கு வந்து பிரபலமாகி இருக்கிறது. இதை யார் செய்கிறார்கள் என்றால் பொது ஊடகத்தை விரல் சொடுக்கில் கட்டுப்படுத்த அதிகாரம் இருந்தும் அங்குச் செய்யாமல் படித்த மக்கள் அதிகமிருக்கும் சமூக ஊடகங்களில் மதப்பிரச்சாரக் கருத்து திணிப்புக்கு இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கந்தர்சசுடி பிரச்சனை வந்த போது அதை ஊதி பெரிசு படுத்தி வேல் வழிபாடு செய்கிறேன் என்று தமிழ்க்கடவுள் முருகனே மயங்கி விழும் அளவிற்குப் பல வடிவங்களில் வேல்களை உருவாக்கி எப்படியாவது வேலை வைத்து ஓட்டை அள்ளிவிட முடியுமா என்று பார்த்தார்கள். அந்த அலப்பறைகள் அடங்கும் முன்னே இப்போது விநாயகர் ஊர்வலம் நடத்தியே ஆகவேண்டும் என்று எடப்பாடி அலுவலகத்தில் அங்கபிரதட்சணம் செய்து கொண்டிருக்கின்றனர். நாம் மேலோட்டமாக இந்த விடயங்களை அணுகினாலும் பல சாதீய தலைவர்கள் இந்துத்துவாவை நோக்கி நகர்வது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தமிழர்கள் நாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்பவர்கள் மதத்திலோ சாதீயத்திலோ நாம் விழுந்து விட்டால் அது நமக்கு நாமே செய்து கொள்ளும் பெரும் தீங்காய் முடிந்துவிடும்.

இந்துத்துவா திராவிடம் இரண்டும் தமிழர்களின் வாழ்வில் பிடித்த இரு தலை பாம்புகள், இவையிரண்டும் வெளியே பகையாய் காட்டிக் கொண்டு உள்ளே கொஞ்சி குலவாடும் தமிழர்கள் நாம் தலையெடுக்காமல் தமிழ்நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற முடியாது. என் நிலம்,என் மொழி என்பது நமது அடையாளம், நமது அடையாளங்களை இந்த இரண்டு சித்தாந்தங்களும் உருத்தெரியாமல் அழித்துவிடும் தமிழர்கள் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேல் வழிபாட்டைத் தமிழ்நாட்டோடு நிறுத்தி விநாயகர் வழிபாட்டை இந்திய முழுதும் நடத்தும் இந்துத்துவாவின் நகர்வுகளை அறியாத அப்பாவிகள் நாம் இல்லை. கொடூர கலவரங்கள் நடக்கும் வடஇந்தியாவைப் போல் தமிழ்நாடு என்றும் மாறாது முயற்சிகள் தொடர்ந்து நடந்தாலும் அனைத்தும் வீழ்த்தப்படும்.

தமிழ்நாடு காவல்துறைக்குப் பெனிக்சு,செயராசு,சிவனடியார் எல்லோரும் ஒன்று தான் காவல்துறையில் தவறு நடந்தால் அதைத் துறை ரீதியாகச் சரி செய்யவேண்டுமே தவிர அந்த இறப்புகளுக்கு மதச் சாயம் பூசுவதையோ அல்லது அதைவைத்துத் தமிழர்களைப் பிளப்பதையோ தமிழர்கள் நிச்சயம் கண்டிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!