0

கல்யாணசுந்தரம் அடுத்து என்ன ? | Seeman | NTK | @TamilanSankar.com

இதை எழுதும் போது சங்கடமாகத் தான் இருக்கிறது ஆனால் கல்யாணசுந்தரம் வெளியேற்றப்படுவது உறுதி போல் தான் தெரிகிறது, இதுவரை வந்த சில பொறுப்பாளர்களின் காணொளிகள் அதைத் தான் தெளிவாக உணர்த்துகிறது. சீமான் அண்ணனும் அதை தெளிவாகிவிட்டார். அப்படியே கல்யாணசுந்தரம் தொடர்ந்தாலும் இனி முன்பு போல் இருக்காது என்பது உறுதி. இது தமிழ்த்தேசியத்தில் பிரயாணிக்கும் பெரும்பாலான தமிழர்களுக்குப் பல குழப்பத்தை விளைவிக்கும் ஓர் அயர்ச்சியைக் கொடுக்கும் என்பது உறுதி. அரசியலில் இது சரி இது தவறு என்று வரையறுத்து நாம் எந்த ஒரு விடயத்தையும் கூறி விட முடியாது. சரியாய் எடுத்ததாக நாம் கருதும் முடிவு பெரிய பின்னடைவாகவும். தவறாய் எடுத்ததாக நாம் கருதும் முடிவு நல்ல பலனையும் கொடுக்கலாம் ஆகையால் இன்று நடக்கும் விடயங்கள் எல்லாம் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு அரசியல் பாடம் என்கின்ற நோக்கில் தான் நாம் அணுக முடிகிறது.

குழு மனப்பான்மை மனிதன் ஆதியில் கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் இருந்து இருக்கிறது ஓர் அரசியல் கட்சியில் அப்படி இருப்பதையெல்லாம் நாம் பெரிய தவறாகக் கருத முடியாது, இன்று கல்யாணசுந்தரம் பொறுப்பாளர்கள் மத்தியில் தனித்து விடப்பட்டவராகத் தெரிகிறார், இஃது எதோச்சையாக நிகழ்கிறதா, இல்லை சிறிது சிறிதாக நடந்து இப்போது வெளிப்படுகிறதா என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை வெளியேற்றப்படுகிறவர்கள் எவருக்கும் அனுசரணையான விசாரிப்பு என்று நடப்பதில்லை அதனால் தான் இன்று இந்த விடயம் பெரிய பேசு பொருளாக இருக்கிறது. கல்யாணசுந்தரம் வெளியேற்றப்பட்டாலும் நாம் தமிழர் கட்சியில் அஃது எந்த ஒரு சிக்கலையும் உருவாக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தமிழர் கூட்டமாக இருக்கும் நாம் தமிழர் கட்சியில் இருந்து உணர்வாளர்கள் வெளியேற்றப்படுவது பெரிய அயர்ச்சியைக் கொடுக்கிறது, இந்த ஒரு விடயத்தில் நாம் வேறு யுக்திகளைக் கையாண்டு தமிழர்களை ஒன்று சேர்க்கவேண்டும். உள்கட்சி அரசியலை கட்சியைப் பலப்படுத்தப் பயன்படுத்தவேண்டும் அது கட்சியைப் பலவீனப்படுத்தப் பயன்படக்கூடாது. சில நேரங்களில் நாங்கள் நண்பர்களுடன் பேசும் போது நாம் தமிழர் கட்சி வென்றுவிட்டால் யார் யார் எந்தப் பொறுப்புக்கு வருவார்கள் என்று பேசிக் கொள்வோம், நிச்சயம் ஆட்கள் போதாது, ஒற்றுமையே தமிழர்க்கு உயர்வு.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!