0

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்…

இற்றைத் திங்கள்
இந்நிலவொளியில்
இமை
திறந்து விழித்திருந்தும்
வேண்டும் இன்பம்
எனக்கில்லை…
எந்த கதையை சொல்வதிங்க..

கரைந்த பொழுதுகளும்
கண்ட கனவுகளும்
மறுபதிவு
செய்வது போல்
மீண்டும் மீண்டும்
என்
நினைவகத்தை
நிறைக்கிறது

நட்ட நடுப் பகலில்
யாருமற்ற
முத்திரிக்காடுகளில்
நான்
தேடிக்கொண்டிருந்ததெல்லாம்
அந்த மூக்கு நீண்ட
முந்திரிப்பழங்களைத் தான்.
வெயில் உலர்த்திய
என் தேகம்
ரயில் பாதையோர
மரங்களையும்
அது
நிழல் கொடுத்த
தருணங்களையும்
என் நினைவகத்தில்
பதிந்திடுமே…

நிலா காய்கிறது
உண்மை தான்
நிலா இன்று
காய்ந்து கொண்டு தான்
இருக்கிறது…
பாடல்
ஒலிக்கும்
இந்தத் தருணம்
இற்றைத் திங்கள் இல்லை
அது
அற்றைத் திங்கள்…
கான்கிரிட் மின் கம்பங்கள்
ஆக்கிரமிக்காத
ராப்பொழுதுகள்
அவை…
திடீர் திடீர்
என்று
பேருந்து சன்னல் வழியே
வெளிச்சம்
அவ்வப்போது
இரவுக்கு வெள்ளையடிக்கும்
ஊரடங்கிய
அந்த நிலவொளி பாதையில்
உறுமிக் கொண்டு
ஓடும்
பேருந்தைத் தவிர
என் அமைதியை
ஆக்கிரமிக்க
எந்த வணிகனும்
இன்னும் இங்கு
இதுவரை வரவில்லை
மீண்டும் சொல்கிறேன்
இது இற்றைத் திங்கள் இல்லை
இன்பத்தை வாரி இறைத்த
அற்றைத் திங்கள்…

என் நிழல் பார்த்து
நான் பயந்தாலும்
எங்கள் கருப்பசாமி
வந்து
பயம் போக்கிய
அற்றைத் திங்கள் அது…
கண்விழித்து
பூசை செய்து
நடுநிசியில்
பயம் தொலைத்த
அற்றைத் திங்கள் அது

பொட்டல் வெளி
பாதையிலே
அற்றைத் திங்கள்
நிலவொளியில்
ஓலக்குடிசை
தேநீர்க் கடையில்
உறவுமுறை
கூடிச் சேர்ந்து
இன்பமாய்
அள்ளிக் குடித்த
தேநீர்க் கதைகள்
இங்கே ஏராளம்

வாழ்க்கை எனும் விசைப்படகு
வேகமாய்
இழுத்துவர
அற்றைத் திங்கள்
நிகழ்வுகள் எல்லாம்
மறுசுழற்சி முறையிலே
இங்கு
விதைத்து விட
முடியாதோ
கலங்கித்தான் போகின்றேன்

இற்றைத் திங்கள்
இந்நிலவொளியில்
கூடித் தான்
கதைத்தாலும்
மரணித்த வெகுளித்தனம்
முழு இன்பம் தராமல்
மனதை
முடக்கத்தான்
செய்கிறது

வளர்ச்சி வளர்ச்சி என்றார்
இன்றோ
ஒளி வெளிச்சம்
விழியைப் பதம் பார்க்க
ஒலி இரைச்சல்
காதை பதம் பார்க்கச்
சகிப்புத்தன்மையே
இங்குச்
சலித்துக் கொண்டு
நித்தம் நித்தம் மனிதம்
இங்கே
மாரடைப்பில் மரணிக்கிறது.

இற்றைய
மனிதத்தின்
தேடலெல்லாம்
மனிதத்தை
நம்மில்
சிதைத்துவிட்டால்
மீதம் இருப்பது
அற்றைய நினைவுகளே!
அற்றைய நினைவுகளே!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!