0

தமிழன் விளையாட்டு அணி! எத்தனை தமிழனுக்கு தெரியும்!

தமிழர்கள் நாம் தனிச் சிறப்பு உடையவர்கள் ஆனால் நமது அடையாளங்களை நாம் காக்க தவறிவிட்டோம். நமது அடையாளங்களைப் பல அடையாளம் தெரியாதவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வரலாற்றின் காலக்கோட்டில் எந்தப் புள்ளியில் தமிழினம் வீழ்ந்ததே அந்தப் புள்ளியில் இருந்து மீண்டு எழுவது தான் நமக்குச் சரியாய் இருக்கும். எந்தப் புள்ளியில் நாம் வீழ்ந்தோம் என்பதை அறிய தமிழர் வரலாற்றைச் சரியாய்ப் படிப்பது நமது பெரும் கடமையாகும்.

தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் செய்தான் தமிழன் சீனனுடன் வணிகம் செய்தான் என்று நாம் பழம்பெருமை பேசினால் மட்டும் போதாது. இன்று சீனர்கள் இருக்கும் நிலையும் தமிழர்கள் நாம் இருக்கும் நிலையையும் எண்ணிப் பாருங்கள். இன்றைய புவிசார் அரசியலில் ஒவ்வொரு தேசிய இனமும் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றன என்கின்ற புரிதல் மிக மிக முக்கியம்.

தமிழர் சார்ந்த வணிக முன்னேற்றமும், தமிழர் சார்ந்த அறிவியல் முன்னேற்றமும், தமிழர் சார்ந்த பொழுதுபோக்குத்துறை முன்னேற்றமும், தமிழர் சார்ந்த விளையாட்டுதுறை முன்னேற்றமும் மிக மிக அவசியமான ஒன்று. தமிழர் அரசியலை நான் இங்குக் குறிப்பிடததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தமிழர் அரசியல் தமிழர்களிடம் இருந்திருந்தால் மற்ற துறைகளின் முன்னேற்றத்தை பற்றி நாம் இப்படிப் பேசிக் கொண்டிருக்கமாட்டோம்.

CONIFA – Confederation of Independent Football Associations. இந்த அமைப்பு FIFA அமைப்பில் இல்லாத நாடுகளின் காற்பந்துச் சங்கங்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கிடையே காற்பந்துப் போட்டிகளை நடத்துகிறது. ஈராண்டுக்கு ஒருமுறை உலகக் கோப்பையை நட்துகிறது. 37 நாடுகள் இதில் உறுப்பினர். அதில் தமிழீழ நாடும் ஒன்று.

CONIFA இன் ஆசியக் கோப்பைக்கான துரட்டு (Tournament) ஆகத்து 3-8 ல் நடந்தது. ஆசியாவில் இருந்து 3 அணிகள். இதில் 2 இழையாட்டம் (league), 1 இறுதியாட்டம் ஆகிய மூன்று ஆட்டங்களிலும் தமிழீழக் காற்பந்தணி வெற்றி பெற்றுள்ளது. புலம் பெயர்ந்த பலநாடுகளில் இருக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழீழ அணியைக் கட்டமைக்க முடிந்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழர்களின் விளையாட்டு அணி என்று பெருமை பேசுவதை விடத் தமிழீழ காற்பந்துப் அணியே தமிழர்களின் விளையாட்டு அணி என்று பெருமைக் கொள்வேன். உலக அரங்கில் தமிழன் விளையாட்டு அணி என்று தமிழர்கள் நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

வாழ்த்துகள் தமிழீழ காற்பந்துப் அணி! உங்கள் வெற்றி உலக விளையாட்டு அரங்குகளில் தமிழர் பெருமையை நிலைநாட்டட்டும்!

https://www.conifa.org/en/event/conifa-asia-cup-2023/

#tamil_eelam_national_football_team

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!