0

Hunt for Veerappan – வேலையற்ற வேலை!

எனக்குள் பல முறை ஒரு எரிச்சல் வந்து வந்து போகும், ஏன் தமிழர்களின் கதைகளைச் சொல்ல தமிழர்கள் யாரும் இங்கு வருவதில்லை என்று, தமிழருக்கு ஆதரவாகப் பேசுவது போல் தெரியும் பல விடயங்களில் உள்ளீடாக நமது அடையாளங்களை அழிக்கும் பல தன்மைகள் வார்க்கப்பட்டிருக்கும்.

இந்த உலகமே ஒன்று சேர்ந்து தீவிரவாதிகள் என்று ஆளுமையான தமிழர்களைப் பற்றிப் பரப்புரை செய்ய எளிதாய் முடிகிறது, தமிழர்கள் நாமும் எந்தவித கேள்வியும் எழுப்பாமல் சொல்லப்பட்ட விடயங்களைப் பற்றி ஆராயாமல் கண்டும் காணாமல் போய்விடுகிறோம்.

வெற்றிமாறன் போன்ற சில இயக்குநர்கள் பலவித உடன்பாடுகளுடன் ஒரு சில திரைப்படங்களில் தமிழர்களின் உள்ளார்ந்த விடயங்களைப் பற்றிப் பேசிச் செல்கின்றனர் ஆனால் தொடர்ந்து தமிழர்களின் கருத்துக்கு எதிரான பரப்புரை படைப்புகள் எளிதாகப் பேரளவில் சென்றடைய தளங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக Madras Cafe , The Family Man 2 , Hunt for Veerappan என்று தொடர்ந்து யார் யாரோ தமிழருக்கு எதிரான கருத்துரை படைப்புகளைப் பொதுப் புத்தியில் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்தியா போன்ற மக்களாட்சி கட்டமைப்பில் அரசபடைகளின் மனிதநேயமற்ற கொடூரங்களை எல்லாம் அவ்வளவு எளிதாக வெளிக் கொண்டுவர முடியாது என்பதற்கு வரலாறு நெடுக பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன, அதனடிப்படையில் பார்த்தல் “Hunt for Veerappan” ஒரு தேவையற்ற முயற்சி. பொதுப்புத்தியில் வனக்காவலன் வீரப்பன் பற்றிய தவறான பரப்புரையை மேற்கொள்வதும் 100 கோடி நட்டம் ஏற்படுத்தியவரை பிடிக்க 220 கோடியும், 5000 அரசப்படைகளையும், 20 ஆண்டுகளையும் வீணடித்த அரசாங்கங்களின் கொக்கரிப்பே அதிகம் தெரிகிறது, எந்த உடன்பாடும் இல்லாமல் ஆணி அடித்தது போல் நடந்த மனிதஉரிமை கொடூரங்களை இந்தப் படைப்பு வெளிக் கொண்டு வரவில்லை. அப்படி நடந்தவைகளை நடந்தவைகளாக எடுக்க முடியாதவர்கள் தமிழர் ஆளுமைகளுக்கு எதிரான படைப்புக்களை எதற்கு நேரம் ஒதுக்கி செய்கின்றனர் என்பதில் இருந்தே இவர்களின் நோக்கங்கள் தெளிவாக விளங்குகின்றன.

ஏதோ தொடர்பு இல்லாத ஒரு கதை சொல்வது போல் வாச்சாத்தி கொடூரத்தை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தில் உணர்வு பூர்வமாகக் காட்டி இருப்பார். அதைப் பற்றி ஒரு வரி கூடப் பேசாத “Hunt for Veerappan” எதற்கு ஆவணப்படமாக வந்தது என்பதில் இருந்து நாம் தெளிவாக அறியலாம் இது போன்ற படைப்புகள் எதற்கு வருகின்றன என்று. தமிழர்கள் எங்கள் கதைகளை நாங்கள் படைத்துக் கொள்கிறோம், மற்றவர்கள் எங்கள் கதைகளைச் சொல்ல இங்கு எந்தத் தேவையும் இல்லை.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!