0

வரலாற்றில் முதன்முறையாக ஈரானிடம் நேரடியாக அடிவாங்கிய இஸ்ரேல்!

ஈரான், இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் முன்பு எப்போதும் இல்லாத ஒரு தாக்குதலை மேற்கொண்டுள்ளது, இஃது இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி மோதலாக உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் இந்தத் தாக்குதலைத் தடுத்து வெற்றிகரமாகப் பல ஏவுகணைகளைத் தடுத்து அழித்தன. சிரியாவில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியதை அடுத்து இந்த மோதல் வெடித்துள்ளது. இதனால் மேலும் பல பதிலடித் தாக்குதல்கள் மற்றும் மோதல் பெருகும் அபாயம் உண்டாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இராணுவ மோதல் விரைவில் நிகழும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

போர் ஏற்பட்டாலும், ஈரான் தனியாக நிற்காது. அது பல கூட்டுப் படைகளைக் கொண்டுள்ளது, இந்தப் படைகள் இஸ்ரேல் மீது அண்மையில் நடைபெற்ற பெரிய தாக்குதல்களுக்கும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கும் பொறுப்பு வகிக்கின்றன. பைடன் நிர்வாகம் இந்த நிலையில் மிக மிதமான பதிலடித் தான் அளித்துள்ளது, ஏனெனில் அமெரிக்கப் படைகள் ஏற்கனவே உலகளவில் பரவலாக உள்ளன.

ஈரானின் கூட்டுப் படைகள் மூலமான போர்க் கொள்கை மிகவும் திறமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது, அது மாற்றுப் போர் முறையை முன்னிறுத்துவதில் முன்னோடி ஆக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் மேற்கத்திய படைகளின் மீதானத் தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செல்வாக்கைக் குறைக்க நினைக்கிறது. எனினும், போரின் விளைவுகள் பாரதூரமாக உள்ளன, ஈரான் இந்த உடனடி வெற்றிகளின் நீண்டக் கால விளைவுகளுடன் போராடும் நிலைமையில் இருக்கலாம்.

இஸ்ரேலில் நிலவும் சூழல் மிகவும் சிக்கலானது, அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலையில் அஃது உள்ளது. இஸ்ரேல் தனது ஏவுகணைத் தடுப்புத் திறனைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க நிர்பந்தப்பட்டாலும், அமெரிக்க நிர்வாகம் பதிலடித் தாக்குதலுக்கு ஆதரவு அளிக்கத் தயங்குகிறது. அமெரிக்க அதிகாரிகள் கூட ஈரானின் தாக்குதலை இஸ்ரேலுக்கு ஒரு சிறிய பின்னடைவு என்று சித்தரித்துள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான எதிர்ப்பு வரலாற்றுச் சார்ந்தது, ஆனால் இஸ்ரேல் தொடர்பான சமீபத்திய விவகாரங்கள், உக்ரைன் போர்ப் போன்றவை அமெரிக்க வளங்களைச் சோர்வடையச் செய்து, தைவான் போன்ற முக்கியப் பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பியுள்ளன. அமெரிக்காவின் கவனம் பரவலாக இருக்கும் இந்தக் காலத்தில், ஈரானுக்கு உலக அரசியல் சக்திகளைச் சவால் விடுவதற்கு ஏற்ற வாய்ப்பாக உள்ளது.

ஈரானின் புரட்சிக்குப் பின்னரான வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்கச் செல்வாக்கை மத்திய கிழக்கில் குறைப்பதில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. நேரடிப் போர் நடத்தி நாட்டை விரிவாக்குவதை விட,மறைந்து செயல்படும் படைகள் மூலம் செல்வாக்குப் பெற ஈரான் முயற்சிக்கிறது, இது தன் படை வலிமையைக் கொண்டு ஒரு நிழல் வலையமைப்பை ராணுவ ரீதியான வலிமையை மத்திய கிழக்கில் உருவாக்க அதற்கு உதவுகிறது.

சதாம் உசேனுடனான ஈரான்-ஈராக் போர் எதிர்பாராத கூட்டுறவுகளை ஈரானுக்கு அமைத்துத் தந்தது, சிரியாவுடனானக் கூட்டணியானது ஹிஸ்புல்லாஹ் என்ற முதல் ஈரானின் கூட்டுப் படையை உருவாக்கியது. இன்று, ஹிஸ்புல்லாஹ் லெபனானில் ஒரு பெரிய இராணுவ மற்றும் அரசியல் சக்தியாக நிலைப் பெற்றுள்ளது.

ஈரானின் புரட்சிவாத படைப்பிரிவு மற்றும் அதன் குவார்ட்ஸ் படைப் பிரிவு , நாட்டின் செல்வாக்கை விரிவுபடுத்தி, ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் குறைப்புக்குப் பின்னரான ஈரானின் கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈரானின் செல்வாக்கை விரிவுபடுத்தியது.

அரபு வசந்தத்தின் கலகத்தால் ஏற்பட்ட குழப்பம் ஈரானுக்கு அதன் செல்வாக்கை விரிவுபடுத்தும் வழியைத் எளிதாகத் தந்தது, குறிப்பாக யெமனில் உள்ள ஹூதிக் கிளர்ச்சிப் படைகள் மூலம். ஹூதிகள், இப்போது அந்தப் பகுதியில் இருக்கும் ஈரானின் எதிரிகளுக்கு எதிராக ஏவுகணைத் தளமாக உருவெடுத்துள்ளது, ஈரானின் முக்கிய அமைப்பாக மாறி அஃது ஈரானின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் மறைமுகப் மற்றும் சமச்சீரற்றப் போர் முறைத் தொடர்ந்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. சிரியா போன்ற முக்கிய நட்பு நாட்டினில் பாரிய இழப்பினைத் தொடர்ந்தும் அசாத் அரசைப் பாதுகாத்துக் கொண்டு தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

ஹமாஸின் தீடீர்த் தாக்குதல் விளைவாக என்ன என்ன விடயங்கள் நடக்கும் என்கின்ற ஈரானின் கணிக்கப்பட்ட சர்வதேச அரசியல் நகர்வுகள் மறைமுகப் போரின் வலிமையை வெளிப்படுத்துகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க நிலைகளின் மீதானத் தாக்குதல்களும், செங்கடலில் ஏற்பட்ட குழப்பங்களும் ஈரானின் சக்தி அங்கே ஓங்கி ஒரு சமநிலையையும், வேகமாகப் பாரியப் போர் வெடிக்கும் சாத்தியத்தையும் காட்டுகிறது.

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு வாரம் காத்திருந்து இஸ்ரேல் நடத்திய அடையாளத் தாக்குதல் பூகோள அரசியலில் ஈரானின் வெற்றியாகவே பார்க்கப்படும்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!