0

வீழுமா மோடியின் இந்துத்துவா ? #TamilanSankar

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

பாரதீய சனதா கட்சி என்பதே மதவாத கட்சி என்பது சராசரி இந்தியனுக்கும் தெரியும். ஒரு கட்சியின் பின்புலமே மதவாதத்தை அடிப்படையானது என்றால் அது பாரதீய சனதா கட்சியாகத் தான் இருக்க முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதமையானது மதசார்பின்மை அதற்கு முரண்பாடாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருப்பது தான் அனைத்துத் தொல்லைகளுக்கும் காரணம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் அவர்களுக்கான கட்சி தொடங்கிக் கொள்ளலாம் ஆனால் மற்ற மதத்தினர் மீதான வெறுப்பு அரசியல் செய்யக் கூடாது என்று இருக்கிறது, இஃது எப்படி இருக்கிறது என்றால் திருடன் கையில் சாவியை கொடுத்ததிற்குச் சமம், அரசியல் என்பது மனிதன் தோன்றியக் காலத்தில் இருந்தே வலிமையானவர்கள் பக்கமே வளைந்திருக்கிறது, அந்த அரசியலில் தமிழர் அறவழி என்பது எல்லாம் சுத்தமாக இருக்காது அப்படி இருக்கையில் மதத்தின் அடிப்படையில் கட்சித் தொடங்கிக் கொள்ளலாம் என்பது மிகவும் தவறானது. தவறு நடப்பதிற்கான வழியை சமைத்துவிட்டுத் தவறு நடக்கக்கூடாது என்று விதிமுறை அமைப்பது முழுமுட்டாள்தனம்.

நாமெல்லாம் நினைக்கின்றோம் , சட்டம் என்பது ஒரு முறை எழுதப்பட்டுவிட்டால் மாற்றவே முடியாது என்று ஆனால் அஃது அப்படி இல்லை, மக்களாட்சி தத்துவமே மக்களுக்காக சட்டங்களை சீரமைப்பது தான். அதைச் செய்ய முடியவில்லை என்றால் திருடன் கையில் சாவிப் போன கதைத் தான், நாம் மக்களாட்சி என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டாம். ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்சுவாரா என்கின்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி இந்துத்துவாவிற்கு தீனிப் போடும் விதமாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் பழைய உரையை மேற்கோள் காட்டிக் கருத்துத் தெரிவிக்கும் போது முஸ்லிம்கள் நாட்டில் ஊடுருவியர்கள் என்றும் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் என்று வாய்க்கு வந்தபடிப் பொறுப்பற்ற முறையில் உரை நிகழ்த்தி உள்ளார். வெறுப்பரசியலை வெளிப்படையாகச் செய்தால் அது பாரதீய சனதா வெறுப்பரசியலை லாவகமாகச் செய்தல் அது காங்கிரசு இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை, தெரியாதவர்கள் கருத்துரையில்(Comments) பதிவிடுங்கள் அதைப் பற்றி முழுமையாக ஒரு காணொளியை/ பதிவைப் போடுவோம்.

மதசார்பற்ற முறையில் முறையாகக் காங்கிரசு கட்சி ஆட்சி செய்திருந்தால் தீவிர இந்துத்துவக் கட்சியான பாரதீய சனதா ஆட்சி பிடித்திருக்க முடியாது ஆனால் காங்கிரசு ஒரு மிதவாத இந்துத்துவாக் கட்சிச் சத்தம் போடாமல் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் அவர்கள் செய்தார்கள். மோடி அவர்கள் முஸ்லீம்கள் பற்றிப் பேசியவுடனே முஸ்லீம் மக்களின் பிரதிநி போல் காங்கிரசுப் பேசுவதும் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதும் வெறும் அரசியல் இன்றி முஸ்லீம் மக்களின் மீதான எந்தப் பாசத்திலும் கிடையாது என்பது திட்டவட்டமான உண்மை.

இதில் பெரிய விடயம் என்ன வென்றால் சமீபக் காலமாக மோடியின் சிறு சிறு அசைவுகளை கூடச் சர்வதேச ஊடகங்கள் உற்றுப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக மோடியின் முஸ்லீம் வெறுப்புப் பேச்சுக்களை பற்றி டைம், வாஷிங்டன் போஸ்ட் , நியூயார்க் டைம்ஸ், சவுத் சைனா மார்னிங் போஸ்ட்,அல்ஜெசீரா போன்ற முக்கிய ஊடகங்கள் கட்டுரைகளை எழுதிச் சர்வதேசிய அரசியலில் முக்கியப் பேசுபொருளாக மாற்றி இருக்கின்றனர்.

காங்கிரசு தேர்தல் ஆணையத்தில் புகார்ச் செய்தப் பிறகும் மோடி இந்த வெறுப்புப் பேச்சை நிறுத்தவில்லை ராஜஸ்தானின் பன்சுவாராவில் பேசியதற்குப் பின்பு மீண்டும் ஏப்ரல் 22-ந் தேதி திங்கள் கிழமையன்று உத்திரபிரதேசத்தில் உள்ள அலீகாரிலும் அதே போன்ற பேச்சுகளைப் பேசி இருக்கிறார், அயோத்தி ராமர்க் கோவில் திறப்பு விழா, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவை மதநல்லிணக்கத்தை நொறுக்கும் விடயங்களாக இருப்பதாகப் பதிவு செய்கின்றன.

தேர்தல் வெற்றிக்காக மோடி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை செய்துக் கொண்டிருப்பதாகவும், முஸ்லீகளால் இந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், முஸ்லிம்களுக்கு ஆதரவான காங்கிரசு தேர்தல் அறிக்கை நாட்டைத் துண்டுத் துண்டாகி விடும் என்றும், தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் பேசிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

மோடியைக் குறித்து நியூயார்க் டைம்ஸ் எழுதுகையில் 1925-ம் ஆண்டு இந்தியாவை இந்து நாடக மாற்றவேண்டும் என்கின்ற குறிக்கோளோடு களமிறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் RSS-ன் அங்கமாகப் பத்து ஆண்டுகள் இருந்தவர் என்றும், தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களைக் குறிவைத்துப் பேசும் வெறுப்புப் பேச்சுகளை மோடிக் கண்டு கொள்வதில்லை ஆனால் உலகளாவியத் தலைவராக அஃது அவருக்குப் பெரிய பாதிப்பைக் கொடுக்கவில்லை ஆனால் அவரே நேரடியாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் பதிவுச் செய்கின்றன.

முக்கிய ஊடகங்கள் எல்லாம் மோடியின் முஸ்லீம் விரோத வெறுப்புப் பேச்சை பற்றி எழுதிவிட்டன. பதவி என்பது நிரந்தரம் இல்லை என்று பதவியில் இருக்கும் வரை யாரும் உணருவதில்லை மோடியும் அதற்கு விதிவிலக்கு இல்லை. பூகோள அரசியல் விளையாட்டில் இந்தியா போன்ற மக்கள் வளம் பெருத்த வியாபாரச் சந்தையை வல்லரசுகள் எளிதாக விட்டுவிடாது. தீவிர இந்துத்துவா மோடியை வீழ்த்தி மிதவாத இந்துத்துவா ராகுலை அரியணை ஏற்றக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றே கருதுகிறேன். தேர்தல் முடிவு வரும் வரைப் பொறுத்திருப்போம்!

தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள், உங்கள் கருத்துரைகளை நிச்சயம் பதிவு செய்யுங்கள். நன்றி!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!