0

எதற்கு என்று சொன்னால் நம்பமுடியாது! அமெரிக்காவில் வெடித்தது மாணவர் போராட்டம்!

அமெரிக்கா என்றவுடன் முதலில் நமக்கு நினைவில் வருவது அதன் செல்வச்செழிப்பும் உலகநாடுகளிடம் அதற்கு இருக்கும் அதிகாரப் பலமும் தான். உலகின் எந்த மூலையில் எந்தப் பிரச்சனை இருந்தாலும் அமெரிக்காவின் பெயர் அடிபடாமல் இருக்கவே முடியாது. ஊடகங்களுக்குத் தற்போதையச் சூடான செய்தி எதுவென்று பார்த்தால் மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தில் நடந்த இனவழிப்புப் போர்த் தான். இந்தப் பூமிப்பந்தில் இருக்கும் பெரிய திறந்த வெளிச் சிறைத் தான் மத்திய கிழக்கில் இருக்கும் காசாத் துண்டு(Strip) நிலம், சுற்றி இசுலாமிய நாடுகள் இருக்க அந்தத் துண்டு நிலத்தில் எந்தப் பக்கமும் தப்பமுடியாமல் இசுலாமியப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கடந்த பல மாதங்களாகக் கொல்லப்பட்ட இடம். போர் என்றால் அப்படித் தான் இருக்கும் என்று ஈவு இரக்கம் இன்றிப் பேசுபவர்களும் நிறைந்த உலகம் தான் இஃது, ஆனால் நாகரீகம் வளரந்துவிட்டதாய்ச் சொல்லிக் கொள்ளும் மனிதர்களான நமக்குச் சவால் விடுவது போல் உலக ஊடகங்களைச் சாட்சியம் வைத்துக் கொண்டு நடைபெறும் கொடூரங்கள் எந்த வகையிலும் நாகரீகமான செயலாகப் பார்க்கமுடியாது.



கடந்த பல வாரங்களாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் எங்கும் மாணவர்கள் பாலசுதீனர்களுக்கு ஆதரவாகப் பெரும் போராட்டத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றனர், அமெரிக்க ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை வியட்னாம் போரின் போது அமெரிக்க மாணவர்கள் நடத்திய போராட்டங்களை ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கிறது. ஒட்டு மொத்த அமெரிக்காவும் இசுரேல் சார்பு என்று நாம் நினைப்பது முற்றிலும் தவறானது என்றே நினைக்கத் தோன்றுகிறது, சமூக ஊடகம் மூலம் இன்றைய தலைமுறையினர் உடனுக்குடன் உலகின் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் எளிதாய்த் தெரிந்துக் கொள்கின்றனர். காசாப் போரின் தகவல்கள் உடனுக்குடன் அதிகம் அமெரிக்க மாணவர்களிடையே பரவி இருக்கிறது. இதில் ஒரு பெரிய விடயம் என்னவென்றால் அமெரிக்காவின் புதிய தலைமுறை பிள்ளைகள் அமெரிக்காச் சொல்லும் மனிதஉரிமை என்கின்ற சொல்லைப் பெரிதாய் எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது, உலகில் எங்கேனும் மனிதஉரிமை நசுக்கப்படும் போது அதைக் கண்டும் காணாமல் செல்லாமல் அதை எதிர்க்கும் உணர்வு இயல்பாய் அவர்களுக்கு வந்திருக்கிறது.

மத்திய கிழக்கில் நடக்கும் பூகோள அரசியல் என்ன என்பதோ அல்லது அதைப் பற்றிய சதியரசியலை விளக்கும் நோக்கம் நமக்கு இல்லை, நமது பார்வை முழுவதும் அடுத்தடுத்து மனிதப் பேரவலம் உலக ஊடகங்களின் சாட்சியோடு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒட்டிய பார்வைத் தான். மத்திய கிழக்குக் கொதி நிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம் இசுரேல் மற்றும் பாலசுதீன மக்களுக்கு இடையே நடக்கும் நீண்ட நெடிய, வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு நடந்து வரும் முரண்பாடுகளே. மனிதன் எவ்வளவு தான் ஒற்றுமையைப் பற்றிப் பேசினாலும் இம்மியளவாவது வேற்றுமை எங்கும் நிரம்பி வழிகிறது. மத்திய கிழக்கு என்பது இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும், இசுலாம் மதத்தை அடிப்படியாகக் கொண்ட பல வளமான நாடுகளைக் கொண்ட பகுதி ஆனால் காசாப் பிரச்சனையில் அங்கிருக்கும் இசுலாமிய நாடுகள் அனைத்தும் தனக்கான அரசியலை மட்டுமே செய்கின்றன, அப்பாவிப் பாலசுதீனியர்களைப் பற்றி எல்லாம் அவைகள் கவலைப்படுவதில்லை.

எப்படி இந்திய வெளியுறவுக் கொள்கையால் அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலைச் செய்யப்பட்டனரோ அதே ரீதியில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையால் பல கொடுமைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. அஃது அமெரிக்காவிற்கு உள்ளேயே பெரிய சிக்கலை இன்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையேயான சித்தாந்தத் தடுமாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. இசுரேலின் உற்ற நண்பனாகவும் அந்த நாடு என்ன செய்தாலும் அதை உலக நாடுகளிடம் இருந்து காப்பது அமெரிக்காத் தான், பல தருணங்களில் இசுரேலுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட ஐக்கியநாட்டுச் சபைத் தீர்மானங்கள் என்ன ஆனாது என்று பார்த்தால் அது தெளிவாய் விளங்கும். அமெரிக்க ஊடகங்களும் அதன் தலைவர்களில் பெரும்பாலோனர் இசுரேலுக்குச் சாதகமாகத் தான் நடந்து கொள்வார்கள், அமெரிக்கக் குடிமகன்களும் இசுரேலுக்கு ஆதரவுத் தான் என்பது போன்ற ஒரு தோற்ற மாயை நிச்சயம் இருக்கிறது. இதில் தான் இப்பொழுதுப் பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது.

அமெரிக்கா முழுவதும் இருக்கின்ற பெருவாரியான பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் பாலசுதீனர்களுக்கு ஆதரவானப் பெரிய அளவிலான மாணவர் போராட்டத்தைக் கடந்து இரு வாரங்களாக நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் குறைந்தபட்சம் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்ட பாலசுதீனர்கள் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் பெரிய போராட்டங்களை நடத்தி அமெரிக்காவைத் தங்களுக்குச் சார்பாகச் செவிச் சாய்க்கும் அளவிற்கு எல்லாம் அவர்களிடம் எந்தப் பலமும் இல்லை ஆனால் அமெரிக்க அரசியலில் இசுரேல் சார்பு அரசியல்வாதிகள் மிக அதிகம் இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் சமீபத்தில் இசுரேலுக்கு வழங்கப்பட்ட ராணுவ நிதியே மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நியூயோர்க்கில் இருக்கும் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் நியூயார் காவல் துறையினர் பல்கலைக்கழகத்தில் நுழைந்து முந்நூறு மாணவ மாணவிகளைக் கைது செய்து அப்புறப்படுத்தும் நிலைக்குச் சென்றிருக்கிறது நிலைமை, இந்த நடவடிக்கைத் தீயென எல்லாப் பல்கலைக்கழகங்கலுக்கும் பரவி அமெரிக்கா முழுதும் மாணவப் போராட்டங்கள் வெடித்துள்ளது. ஏப்ரல் 18-ல் இருந்து தொடங்கிய இந்தப் போராட்டம் இது வரை முப்பத்தியெட்டு இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை நாடு முழுதும் உள்ள நாற்பது பல்கலைக்கழகங்களில் தனித் தனிப் போராட்டங்களில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற போராட்டங்களில் சமூக ஊடகத்தின் பங்கு அதிகம் இருக்கும், குறுகியக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டதிற்கு அதுவும் ஒரு பெரிய காரணம். பொது ஊடகம் ஊட்டும் செய்திகளை மட்டும் கேட்டுவிட்டுச் செம்மறி ஆடுகளைப் போல் சிந்திக்கும் தலைமுறை இஃது இல்லை என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர வைக்கும் விதமாக இருக்கிறது மாணவ மாணவிகளின் செயல்பாடுகள், புதிய தலைமுறையினரைக் கருத்தில் கொண்டே சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுக் கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகது. இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்களின் வழிகாட்டுதலைத் தூக்கி எறிந்துவிட்டு உரிமை இழந்தவர்களின் குரலாக அமெரிக்க மாணவ மாணவிகள் மாறிக் கொண்டிருப்பது சிறிது நம்பிக்கையைக் கொடுக்கிறது.

எப்படியும் இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகப் பல முயற்சிகளைச் செய்வார்கள், எல்லா நாடுகளுக்கும் அதற்கான வழிமுறைகள் ஊட்டப்பட்டுள்ளது, ஆனால் இந்த மாணவர் போராட்டம் அமெரிக்கச் சித்தாந்தத்தில் ஒரு பேரிடியை இறக்கி இருக்கிறது, இந்தப் புதிய தலைமுறையின் சிந்தனை அமெரிக்காவில் எதிர்காலத்தில் வரப்போகும் அரசியல்வாதிகளிடம் நிச்சயம் பிரதிபலிக்கும், அஃது ஒரு நல்ல மாற்றமாகக் கூட அமையலாம் என்கின்ற நம்பிக்கைக் கொள்வோம்.

உலகெங்கும் நடக்கும் கண்டக் கண்டக் குப்பைச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது மாற்றத்தை நோக்கிய இந்தத் தகவலைப் பகிர வேண்டும் என்று தோன்றியது, உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள், தொடர்ந்து இணைத்திருப்போம். நன்றி!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!