0

நெடுகர்கள் – அத்தியாயம் 1: பேரபாயம்

நீர்திவலைகள் கரைந்துச் சாளரங்களில் வழிந்து கொண்டிருந்தது. புல்வெளிகளில் பனித் துளிகள் கீழே விழுவதா… இல்லை வேண்டாமா… என்று யோசித்துக் கொண்டிருந்தன. விசித்திரப் புன்னகைச் செய்து கொண்டே ஒரு நெடுகன் வெகு வேகமாய்ப் புரவியில் வந்து கொண்டிருந்தான். அவன் கேசங்கள் புரவியின் வேகத்திற்கேற்ப இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது. அவன் முகப் பாவனையில் இருந்து, அவன் ஏதோ ஒரு பரம ரகசியத்தைச் சுமந்திருப்பது போல் இருந்தது. நெடுகர்கள் பார்பதற்குச் சற்று விசித்திரமாக இருப்பார்கள், நெடு நெடு வென்று சராசரி உயரத்தை விடச் சற்று வளர்ந்திருப்பார்கள், சுறுசுறுப்பானவர்கள், புத்திக்கூர்மையுடைவர்கள். கீழ் திசைச் சந்திரத் தேசத்தில் அவர்களை அதிகம் பார்க்கலாம். ஆவாவிடம் இருந்து கீழ் திசைச் சந்திரத் தேசத்தைச் சேர்ந்த பல கண்டங்களைப் பாதுகாக்க நெடுகர்களின் சுறுசுறுப்பும், புத்திக் கூர்மையும் பேருதவியாக இருந்தது.

திடீரென்று பெரும் சத்தத்துடன் கண்களுக்குள் அடக்கமுடியாத மிக உயர்ந்தக் கோட்டைக் கதவுகள் திறந்தன. புரவியில் வேகமாக வந்து கொண்டிருந்த அந்த நெடுகன் பெரும் புயலான கோட்டைக்குள் உட்புகுந்தான். கோட்டைக் கதவுகள் பெரும் சத்தத்துடன் திறந்ததால் சாமானிய நெடுகர்கள் அங்கும் இங்குமாகச் சிதறி, குதிரையில் வந்த நெடுகனுக்கு வழிவிட்டனர்.

நெடுகர்கள் – அத்தியாயம் 1 – பேரபாயம் தொடர்பான அத்தியாயப் படம்

திடீரென்று அந்தப் பிரமாண்ட நகரம் பரபரப்பானது, உயர்ந்த மலையை ஒட்டிப் படு நேர்த்தியாக இயற்கைக் காவலரண்ங்களுடன் அந்த நகரம் நெடுகர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த முன்னிரவு நேரத்தில் மலையுச்சியில் மிகப் பெரிய தீ மூட்டப்பட்டது. போர் வரப் போகும் எச்சரிக்கைச் சமிக்கை அது, கிளிநொச்சி, புகார் நகரங்களுக்கு மலையுச்சியில் மூட்டப்பட்ட தீ ஒரு சங்கோத மொழியாகும், வெகு விரைவில் அந்தத் தூரதேச நகரங்களில் இருந்து உயர் மட்டத்தில் இருக்கும் பிரியகிறர்களும், பரப்பியர்களும் இந்த நகரத்திற்கு வருவார்கள் என்பது உறுதி.

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது, மேனாட்டுக் கிருமுகர்கள் கீழ்த்திசைச் சந்திரத் தேசத்தில் கால் பதிக்கும் வரை, தேவதேவிகள் நெடுகர்களுடன் இணைந்து இருந்த வரை கிறுமுகர்கள் தலைத் தூக்க முடியவில்லை. மும்முறை அகண்டப் போர் நடத்தியும் இன்று வரை தேவதேவிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. தேவதேவிகளின் விசித்திரச் சித்திகளை எதிர் கொள்ளக் கிறுமுகர்கள் யாக்கினைப் பூசையைப் பல முறைத் தொடங்கினர் ஆனால் எப்படித் தான் தேவதேவிகள் மோப்பம் பிடிப்பார்கள் என்று தெரியவில்லை ஒரு முறைக் கூட அந்தப் பூசையினை வெற்றிகரமாக அவர்களால் முடிக்க முடியவில்லை.

"புலிமறவா, உங்கள் புரவி எங்கே ? ஏன் இந்தப் பதற்றம் ?" பூவினியாவின் பரபரப்பிற்குக் காரணம் புலிமறவன் அணிந்திருந்த பொன்னாலான மேலங்கியில் படிந்திருந்த நீல நிற ரத்தம்.

"விவரமாகச் சொல்வதற்கு நேரமில்லை, பூவினியா! முதலில் நான் கட்டளைகளைப் பார்க்க வேண்டும்." புலிமறவன் அவளை வெகு வேகமாகக் கடந்து சென்றான்.

நெடுகர்கள் கலாச்சாரத்தில் அரசனைக் கட்டளை என்றே அழைப்பார்கள், முதல் மூன்று கட்டளைகள் அவர்கள் இனத்தின் மூன்று பெரிய பிரிவினருக்கும் அடுத்த மூன்று கட்டளைகள் பிற சிறிய பிரிவினருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது, கட்டளைகளின் முடிவே இறுதி அதை இன்று வரை எவருமே மீறியது இல்லை, ஒரே ஒரு முறை, ஒரு கட்டளையே மீற முட்பட்டதால் பூவலோகிப் பூசை மூலம் முடிவில்லா வேற்றுப் பரிமாணத்திற்குக் கடத்தி விட்டனர். அந்தக் கட்டளையின் கதைப் பெரிய கதை.

புலிமறவன் திடமான தேகத்துடன் அறிவுக் கூர்மையும் ஒன்று சேர்ந்தவன், கீழ் திசைச் சந்திரத் தேசமோ இல்லை ஈனாத் தேசமோ எந்தக் கண்டத்தில் இருப்பவர்களும் புலிமறவன் முகத்தசைவைக் கொண்டு எந்த விடயத்தையும் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியாது, அப்படி ஓர் இறுக்கமான முகமுடியவன், அவன் அதிகம் சிரித்துப் பேசுவது பூவினியிடம் மட்டும் தான்.

நீல நிற ரத்தம் அவ்வளவு எளிதாக நிலத்தில் சிந்தாத அளவிற்குக் கிறுமுகர்களின் போர் வெறி இருக்கும், தன் இனத்தில் ஒருவன் இறந்தால் எதிரி இனத்தில் பத்து உயிர்களாவது போகவேண்டும் என்று வெறிக் கொண்டு போரிடுவார்கள், அப்படி இருக்கையில் புலிமறவன் மேலங்கியில் படிந்திருந்த நீல நிற ரத்தம் பூவினியாவோடு சேர்த்து நெடுகர்கள் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

ஆறு கட்டளைகள் சரிசமமாக ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தனர், பிரமாண்ட அவையினில் நுழைந்ததும் முதலில் அவையின் தரையில் முழங்காலிட்டு முத்தமிட்ட புலிமறவன் "நெடுகர் நிலமும்! நெடுகர் வீரமும்! ஓங்கட்டும்!!! " என்று உரத்தக் குரலில் கூறினான். தீடீரென்று கூடிய அவையாய் இருந்தாலும் நெடுகர்கள் பலர் அங்குக் கூடியிருந்தனர். புலிமறவானின் கடும் முகத்தையே அனைவரும் கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கிறுமுகர்கள் பற்றிப் புலிமறவன் என்ன சொல்லப் போகிறான் என்று அனைவரும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் புலிமறவன் உரக்கச் சொல்லியது கட்டளைகளைச் சேர்த்து அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் பெரும் வியப்பை அளித்தது.

"கெடுமுடியர்களுடன் தேவதேவிகள் சதியாலோசனை, தேவதேவிகள் மீது போர்த் தொடுக்க வேண்டும்" என்று தன் மேலாடையில் இருந்த நீல நிற ரத்தத்தைச் சுட்டிக்காட்டி அறைகூவலிட்டான். அவையில் முணுமுணுப்புகள் அதிகரித்தன.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!