ஒரு நாடு, ஒரு சட்டம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா ? இப்ப அது கேட்கிற இடம் இலங்கை என்னடா இஃது இந்துத்துவா இந்தியால தான் இது கேட்டது இப்ப இலங்கையிலும் கேக்குதேனு ரொம்ப யோசிக்காதீங்க அப்படிக் கேட்கவில்லை என்றால் தான் அதிசயம். இவங்க எல்லாருக்கும் ஒரு மாதிரி ( Formula ) தான், எங்கிருந்து வருகிறதோ அதை அப்படியே வாங்கிச் செயல்படுத்துவது மட்டும் தான் தரகு அரசியல்வாதிகளின் வேலை. 1978ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி J.R.செயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் இதுவரை 19ஆவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆனால் ஒன்றினாலும் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை என்பது பழைய செய்தி , நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டு, 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வர இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது அந்த அங்கீகாரத்தின் குரல் தான் ஒரு நாடு, ஒரு சட்டம், தேசிய இனங்களின் குரல்களை நெரிப்பதில் இலங்கையும் சரி இந்துத்துவா ஆளும் இந்தியாவும் சரி ஒன்று ஒன்று சளைத்ததல்ல. ராசபக்சே குடும்பத்தின் இனப்படுகொலை ரத்தக்கறையில் நடக்கும் பூகோள அரசியலில் ஈழத்தமிழர்கள் சிறைக்கைதிகள், உலகத் தமிழர்கள் பார்வையாளர்கள் அவ்வளவு தான்.
நீலப்புரட்சினு ஒண்ணு புதுசா முளைச்சிருக்கு என்னனு தெரியுமா, மலையை நோண்டி எடுத்தாச்சு, ஆற்று மண்ணை எடுத்து ஆற்றினை மலடாக்கியாச்சு, அடுத்த என்ன நீலப்புரட்சி தான். அதான் இருக்கே பாரத்மாலா, சாகர்மாலானு நம்ம சோழமன்னன் கட்டுப்பாட்டில் இருந்த சோழ ஏரி, அதாங்க உங்களுக்குப் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் வங்காள விரிகுடா, கடலையும் கடற்கரையைச் சார்ந்த பகுதிகளையும் காவு கொடுக்கும் திட்டம் தான் தேசிய மீன்வள கொள்கை NFP2020. இந்த இந்துத்துவா ஆட்சியாளர்கள் என்ன செய்தாலும் அது தமிழர்களுக்குப் பெரிய கேடாகத் தான் முடிகிறது. தொன்றுதொட்டுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் முதலாளித்துவப் பெறுவணிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார்கள். பொதுவான தமிழர்களே வாழ்க்கையில் போரடிக் கொண்டிருக்கும் போது மீனவத் தமிழன் அதுவும் பெரிய அளவில் அரசியல் ஆதிக்கம் செலுத்தமுடியாத மீனவத் தமிழனின் நிலை பரிதாபத்துக்குரியது தான். காலை ஆறுமணிக்குக் கடலில் மீன்பிடிக்கப் போய் இரவு ஒன்பதுக்கு எல்லாம் திரும்பிடவேண்டும் என்பது புதிய தேசிய மீன்வள கொள்கை, நான் தெரியாமத் தான் கேட்கிறேன் உங்க சட்ட திட்டத்தின் படியா இயற்கை வேலை செய்யுது… என்ன ஒரு கோக்குமாக்குத் தனமான சட்டம் இது நல்லா கொண்டுவரீங்க நீலப்புரட்சிய.
அமெரிக்காவில் விவரம் தெரியாத பறக்கும் பொருள் அதாங்க UFO பற்றித் திடீர்னு ஒரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது, என்ன நடந்துச்சுனா 2004 மற்றும் 2015 வாக்கில் அமெரிக்காவின் கடற்படை பிரிவினரால் வானில் பறக்கும் விவரம் தெரியாத பொருட்கள் பற்றிய தகவல்கள் எதோச்சையாகக் காணொளியில் பிடிக்கப்பட்டிருக்கிறது, அந்த ரகசியமான காணொளிகளை அமெரிக்காவின் பிரபல ஏடான நியூயார்க் டைம்சு வெளியிட UFO பற்றிய விவாதங்கள் புதிய வேகம் எடுத்திருக்கிறது, இதனிடையே இந்த UFO விடயங்களைப் பற்றி ஆராய ஒரு பணிக்குழு அமெரிக்க அரசாங்கத்தால் அமைக்கப் பட்டுள்ளது. அந்தப் பணிக்குழு கண்டுபிடித்தல்,ஆராய்தல் மற்றும் பட்டியலிடுதல் என்று மூன்று பிரிவாக இந்தப் பணியைச் செய்ய இருக்கிறது. UFO என்றவுடன் ஒரு சுவாரிசியம் நமக்கு வரும் ஆனால் உண்மையாக நாம் அதை நேரிடையாக எதிர்கொள்ளும் போது தான் அது சுவாரிசியமா இல்லை படுபாதகமா என்று தெரியும். இந்தியாவில் அடுத்த வேலைக்கே சோறு இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால், நாம் பயப்படத் தேவையில்லை… அமெரிக்கா இல்லை சீனா பாத்துக்கும்… பாத்துக்கும் தானே…
மீண்டும் சந்திப்போம்.