அரசல்புரசலாகச் சீமான் அண்ணன் மேதகு திரைப்படத்தை விமர்சிப்பதாகச் செய்திகள் வருகின்றன. கல்யாணசுந்தரம் பிரச்சனை நாம் தமிழர் கட்சியின் உள்கட்சிஅரசியலில் திராவிடக் கும்பல்களால் ஊதி பெரிதாகப்பட்டது தெரிந்த விடயம். அதைக் கடந்து இப்போது நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் தான் தமிழ்த்தேசியர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை உருவாக்குகிறது. சமூக ஊடகங்களில் கல்யாணசுந்தரம் கட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் கசியவிடப்படுகின்றன. இஃது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அதற்கு மேல் ஒரு படி போய் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பலருக்கு அவர் தூதுவிடுவதாக வேறு செய்திகள் பரப்பப்படுகின்றன. எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் கசியவிடப்படும் எந்த விடயங்களுக்கும் பொறுப்பு எடுத்துப் பதில் சொல்லும் நிலையில் யாரும் இல்லை. பொதுவாகத் தமிழர்கள் நமக்கு நம்மவர்கள் பற்றிய தரமான படங்கள் வருவதில்லை என்கின்ற குறைப்பாடு அதிகம் இருக்கிறது. நம் மண் சார்ந்த சில படங்கள் வந்தாலும் உணர்வு ரீதியான பல திரைப்படங்கள் எடுக்கப் படாமலே இருக்கிறது இதற்கு முக்கியக் காரணம் வியாபார ரீதியாகத் தமிழ் திரைப்படத்துறை தமிழர்களிடம் இல்லாமல் இருப்பது தான். அங்கென்றும் இங்கென்றுமாய் ஒரு சில தமிழர்கள் இருப்பதை நாம் வேடிக்கைக்காகக் காட்டலாம் ஆனால் தமிழர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு திறமையைக் காட்டும் இடத்தில் தான் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் விமர்சனத்திற்குத் தி.கிட்டு அவர்கள் சிக்கினார் அதற்கு முக்கியக் காரணம் அந்தக் குறும்படத்தின் பெயர். ஆங்கிலத்தில் “clickbite” என்றொரு சொல்லாடல் இருக்கிறது அப்படி என்றல் எதிர்மறையாக அல்லது கவனத்தை ஈர்க்கும் படி வைக்கும் தலைப்புகள் பார்வையாளர்கள் கவனத்தை அதிகப்படி ஈர்க்கும். அந்த முறையில் வைக்கப்பட்ட பெயர் சீமான் அவர்களைத் தனிப்பட்ட முறையில் பாதிப்பை கொடுத்திருக்கிறது, கிட்டு அவரிடம் பேசி அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியை முகநூலில் அதைப் பதிந்து முடித்துவைத்தார்.
மேதகு திரைப்படத்தை சீமான் எதிர்ப்பதாக சொல்லப்படும் செய்திகள் பெரிய அளவில் சமூக ஊடகங்களில் அல்லது வலையொளியில் பேசப்படலாம் இல்லை பேசப்படாமலும் போகலாம் ஆனால் என்னைப் பொறுத்தவரை உள்முரண்களை நமது வலிமைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். மேதகு போன்ற படங்களை வரவேற்பதே தமிழர்கள் நமக்கு நல்லது இல்லையெனில் நம் தலையில் “கன்னத்தில் முத்தமிட்டாள்” போன்றோ அல்லது “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற தமிழர் விரோத கருத்துக்கள் நிறைந்த திரைப்படங்களே கட்டப்படும்.
மீண்டும் சந்திப்போம்…