0

சீமான் பேச்சும், தம்பிகள் புரிதலும்!

தமிழர் அரசியலில் ஒரு தெளிவு என்பது வேண்டும்; திராவிடப் பிம்ப அரசியலில் சிக்கி, நாம் சின்னாபின்னமாகி, நமது அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பது நமது பெருந்துயரம். ஆனால், அதை உணராமல், அதே போன்றதொரு இன்னொரு தவறை நாம் செய்வது மிகத் தவறாக அமைந்துவிடும். மக்களாட்சி தூண்களாகப் பார்க்கப்படும் சட்டமன்றம், ஆட்சி துறை, நீதித்துறை, ஊடகம் என்று அனைத்தும் பழுதாகி போன நிலையில் நாம் எடுக்க வேண்டிய ஒவ்வொரு அடியும் மிகத் தெளிவாக வைக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.

திராவிடக் கட்சிகள் போலத் தமிழர் ஏமாற்று வழிவகைகளைத் தேடுவதும் தமிழர்களைக் குழப்பத்தில் வைத்திருக்கக் கவனச் சிதறல் உத்திகளைக் கையாளுவதும் நீண்ட காலத் தமிழர் நலனுக்கு உகந்தது அல்ல. நாம் தமிழர் கட்சியைத் தமிழ்த்தேசியத்தின் விடிவெள்ளியாகப் பார்க்கும் பெரும் இளைஞர் கூட்டம் கூடி விட்டது; அவர்கள் எல்லோருக்கும் முதல் அரசியல் தளமே நாம் தமிழர் கட்சி தான் அப்படி இருக்கையில், அண்ணன் சீமான் அவர்களின் சிறு சிறு அசைவும் கூடப் பல பொருள் கொள்ளும் படி அமைந்துவிடும்.

சமீபத்தில் அண்ணன் சீமான் அவர்கள் கொடுத்த பேட்டியில், அமீர் அவர்களைக் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் குழப்பத்தை உருவாக்குகின்றன. அமீர் எப்பொழுதுமே திராவிட மாய்மாலங்களை ஆதரிப்பவர்; போதை பொருள் கடத்தியதாக, திராவிடக் கட்சியைச் சேர்ந்த அவரது தயாரிப்பாளர் கைது செய்யப்படவில்லை என்றால், அவரது திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு எல்லாம் அவர் அண்ணன் சீமானை அழைத்திருக்க மாட்டார். நேரத்திற்கு ஏற்றால் போல் நடந்து கொள்ளும் அவரை அண்ணன் சீமான் நம்புவது போல் காட்டுவதில் ஒரு தவறும் இல்ளை; ஆனால் நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவர்கள் அதைக் கண்டும் காணாமல் போகச் செய்வது சரியானதாகத் தெரியவில்லை. தமிழ்த்தேசிய சக்திகளுக்குத் திராணி இல்லை என்று திராவிடதிற்கு மட்டும் தான் இந்துத்துவத்தை எதிர்க்கும் சக்தி இருப்பது போல் அவர் பரப்பும் செய்தி இருக்கிறது; அது பெரிய காலக்கொடுமை. அமீரின் திராவிடப் பாசம் என்பது தனிப்பட்ட சீமான் வளர்ச்சியின் மீதான வெறுப்பாய் கூட இருக்கலாம்; தம்பிகள் அதைத் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்கின்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, சமூக ஊடகங்களில் தம்பிகள் எழுதும் அளவிற்கு எல்லாவற்றையும் உதறிவிட்டு தமிழ்த்தேசியம் வீறுநடை போட முடியாது. தேசியத்தலைவர் வழியில் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்பது பேச்சிலும் இருக்க வேண்டும், செயலிலும் இருக்க வேண்டும். தம்பிகள் சித்தாந்த ரீதியில் திருப்பி அடித்தால், அமீர் அல்ல எந்த திராவிடர்களும் தாங்க முடியாது; அதுவே உண்மை.

இதே போன்ற ஒரு சம்பவம் தான் கமலஹாசன் அவர்களை நேரில் போய் சந்தித்து வாழ்த்து சொல்லியதும். கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும் போதே, நாம் தெளிவாய் எழுதி இருந்தோம் ‘ஓரிரு தேர்தல் கூட அந்த கட்சி தாங்காது’ என்று. திரைப்படத்துறையில் இருந்து அவர் வந்ததால், நிச்சயம் பல நண்பர்கள் அவருக்கு இருப்பார்கள்; அவரும் வேறு வழியின்றி தன்னை தேடிவருபவர்களை ஆதரிக்க வேண்டும். ஆனால், அவரது அரசியல் நிலைப்பாட்டைக் குலைக்கும் வண்ணம் செயல்படுபவர்களைத் தொடர்ந்து நண்பர்களாய் காட்ட யத்தனிப்பது சரியானதாகப் படவில்லை.

அண்ணன் சீமான் மேல் பலர் பல விமர்சனங்களை வைத்திருக்கின்றனர்; நான் வைத்திருப்பது விமர்சனம் இல்லை. தமிழர்கள் இப்பொழுது தான் தங்களுக்கு ஒரு அமைப்பு உருவாகி இருக்கிறது என்று தோள் கொடுக்க சாரை சாரையாய் வரும் நிலையில் அவர்கள் சரியான வழியில் செல்ல வேண்டும் என்கின்ற ஒரு நல்ல எண்ணம் தான். என்னைப் பொறுத்தவரை, அரசியல் வேறு, நண்பர்கள் வேறு என்று அண்ணன் சீமான் பார்ப்பதே சரியாய் இருக்கும். தமிழ் இளைஞர்கள் தாங்கள் பார்க்கின்ற கேட்கின்ற செய்திகளின் பின்புலம் அறிந்து, தெளிவான வழியில் நடப்பதே சிறந்தது.

தொடர்ந்து இணைந்திருங்கள், நன்றி!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!